புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா

சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா

3 minutes read

ஸிம்பாப்வேக்கு எதிராக ஹராரேயில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஷுப்மான் கில் குவித்த முதலாவது சர்வதேச சதத்தின் உதவியுடன் இந்தியா 13 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை 3 – 0 என முழுமையாகக் கைப்பற்றியது.

இந்த வெற்றி இந்தியாவை இலகுவாக வந்தடையவில்லை.

சிக்கந்தர் ராஸா அபார சதம் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவரும் ப்றட் இவேன்ஸும் 8ஆவது விக்கெட்டில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 273 ஓட்டங்களாக உயர்த்தி ஸிம்பாப்வேயின் வெற்றிக்காக கடுமையாக முயற்சித்தனர். ஆனால், கடைசி 3 விக்கெட்கள் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விழ இந்தியா பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்களைக் குவித்தது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக போர்ட் ஒவ் ஸ்பெய்ன் விளையாட்டரங்கில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கில் (98 ஆ.இ.) தனது முதலாவது சர்வதேச சதத்தைப் பூர்த்தி செய்ய 2 ஓட்டங்களால் தவறியிருந்தார்.

ஒரு மாதம் கழித்து ஹராரேயில் 97 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 130 ஓட்டங்களைக் குவித்து அந்தக் குறையை நிவர்த்தி செய்துகொண்டார்.

இந்தப் போட்டியில் 50 ஓட்டங்களைப் பெற்ற இஷான் கிஷானுடன் ஷுப்மான் கில் 3ஆவது விக்கெட்டில் 140 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலப்படுத்தினார்.

அவர்கள் இருவரைவிட ஷிக்கர் தவான் (40), அணித் தலைவர் கே. எல். ராகுல் (30) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

ஸிம்பாவ்வே பந்துவீச்சில் ப்றட் இவேன்ஸ் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பங்களாதேஷுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அறிமுகான இவேன்ஸ், தனது 5ஆவது போட்டியில் முதலாவது 5 விக்கெட் குவியலுடன் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை அதுவும் பலம்வாய்ந்த இந்தியாவுக்கு எதிராக பதிவு செய்தார்.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 290 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே, 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அனுபவசாலிகளான சோன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராஸா, ப்றட் இவேன்ஸ் ஆகிய மூவரே துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

சோன் வில்லியம்ஸ் 45 ஓட்டங்களைப் பெற்று இருவருடன் 2ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

கய்ட்டானோவுடன் சோன் வில்லியம்ஸ் 29 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது உபாதைக்குள்ளான கய்ட்டானோ ஆடுகளம் விட்டகன்றார்.

அதன் பின்னர் டோனி முனியொங்காவுடன் மேலும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சோன் வில்லியம்ஸ் ஆட்டமிழந்தார். சற்று நேரத்தில் முனியொங்காவும் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அணித் தலைவர் ரெஜிஸ் சக்கப்வா (16), உபாதையிலிருந்து மீண்டு துடுப்பெடுத்தாட வந்த முனியொங்கா (15), ரெயான் பியூரி (8), லூக் ஜொங்வே (19) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

எனினும் சிக்கந்தர் ராஸாவும் ப்றட் இவேன்ஸும் 8ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை கொடுத்தனர்.

மொத்த எண்ணிக்கை 273 ஓட்டங்களாக இருந்தபோது ப்றட் இவேன்ஸ் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 95 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 115 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது சிக்கந்தர் ராஸா களம் விட்டகன்றதுடன் ஸிம்பாப்வேயின் எதிர்பார்ப்பு தகர்ந்தது.

இந்திய பந்துவீச்சில் ஆவேஷ் கான் 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அக்சர் பட்டேல் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 238 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்பக் சஹார் 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More