Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் குறைந்த மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட போட்டியில் பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்

குறைந்த மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட போட்டியில் பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்

2 minutes read

மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ரா சிங் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற  38ஆவது இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 3 விக்கெட்களால் குஜராத் டைட்டன்ஸ் வெற்றிகொண்டது.

குறைந்த மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட இந்தப் போட்டியில் 5 பந்துகள் மாத்திரம் மீதமிருந்த நிலையிலேயே குஜராத் டைட்டன்ஸ் வெற்றிபெற்றது.

சாய் கிஷோரின் 4 விக்கெட் குவியல், நூர் அஹ்மதின் துல்லியமான பந்துவீச்சு, ராகுல் தெவாட்டியாவின் அதிரடி துடுப்பாட்டம் என்பன குஜராத்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

143 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 19.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

எவ்வாறாயினும் குஜராத் டைட்டன்ஸின் ஆரம்பம் எதிர்பார்த்தவாறு சிறப்பாக அமையவில்லை.

ஆரம்ப விரர் ரிதிமான் சஹா 13 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். அத்துடன் பவர் ப்ளே ஓவர் நிறைவில் குஜராத் டைட்டன்ஸ் ஒரு விக்கெட்டை இழந்து 45 ஓட்டங்களை மாத்திம் பெற்றிருந்தது.

தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 66 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் ஷுப்மான் கில் கவனக்குறைவான அடி தேர்வின் காரணமாக 35 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

அதிரடிக்கு பெயர் பெற்ற டேவிட் மில்லர் இந்த வருடம் பெரிதாக பிரகாசிக்காததுடன் இந்தப் போட்டியில் 4 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய சாய் சுதர்ஷன் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க குஜராத் டைட்டன்ஸ் சிறு நெருக்கடியை எதிர்கொண்டது. (97 – 4 விக்.)

15 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்களைப் பெற்றிருந்த குஜராத் டைட்டன்ஸின் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் மேலும் 42 ஓட்டங்கள்  தேவைப்பட்டது.

ஆனால், 16ஆவது ஓவரில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் அந்த ஓவரில் 4 ஓட்டங்கள் மாத்திரம் பெறப்பட்டதால் குஜராத் டைட்டன்ஸ் நெருக்கடிக்கு உள்ளானது.

எனினும் 17ஆவது ஓவரில் தெவாட்டியா 13 ஓட்டங்களைப் பெற்றதுடன் 18ஆவது ஓவரில் தெவாட்டியா, ஷாருக் கான் ஆகிய இருவரும இணைந்து 20 ஓட்டங்களைப் பெற கடைசி 2 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸின் வெற்றிக்கு 5 ஓட்டங்களே தேவைப்பட்டது.

ஆனால், 19ஆவது ஓவரின் முதல் பந்தில் ஷாருக் கானை யோர்க்கர் முறையில் ஹர்ஷா பட்டேல் ஆட்டம் இழக்கச் செய்தார். ஷாருக் கான் 18 ஓட்டங்களைப் பெற்றார்.

அதே ஓவரின் கடைசிப் பந்தில் ராஷித் கான் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஆனால், அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை பவுண்டறி ஆக்கிய தெவாட்டியா தனது அணி வெற்றி பெறுவதை உறுதி செய்தார்.

ராகுல் தெவாட்டியா 18 பந்துகளில் 7 பவுண்டறிகள் உட்பட 36 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஹர்ஷால் பட்டேல் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பஞ்சாப் கிங்ஸ் மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சுருண்டது.

துடுப்பாட்டத்தில் ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் மூவர் மாத்திரமே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

பஞ்சாப் கிங்ஸ் அசத்தலான ஆரம்பத்தைக் கொணடிருந்தபோதிலும் அதன் பின்னர் சிறப்பான இணைப்பாட்டங்கள் அமையவில்லை.

ஆரம்ப வீரர்களான சாம் கரன் (20), ப்ரப்சிம்ரன் சிங் (35) ஆகிய இருவரும் 33 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால் ஏனைய வீரர்கள் அதனை சாதகமாக்கிக்கொள்ளத் தவறியதால் பஞ்சாப் குறைந்த எண்ணிக்கைக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

பின்வரிசையில் ஹார்ப்ரீத் ப்ரார் இரண்டாவது அதிகப்பட்ச எண்ணிககையான 29 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களைவி ஜிட்டேஷ் ஷர்மா 13 ஓட்டங்களையும் ஹார்ப்ரீட் சிங் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சாய் கிஷோர் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நூர் அஹ்மத் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹித் ஷர்மா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More