வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் மதிமுகராசா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் வவுனியா அலுவலகத்துக்குச் சென்றிருந்தார்.
அங்கு கடும் விசாரணைகள் இடம்பெற்றதோடு வெடுக்குநாறிமலை ஆலயம் தொடர்பான பல்வேறு விடயங்களும் அவரிடம் வினவப்பட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மகா சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாட்டின் போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களில் ஆலயப் பூசகரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.