செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை கேரளாவில் திருடன் ஒருவரின் சாட்சியத்தால் 28 ஆண்டுகளுக்கு முன்பு கொலையான அபயாவுக்கு நீதி!

கேரளாவில் திருடன் ஒருவரின் சாட்சியத்தால் 28 ஆண்டுகளுக்கு முன்பு கொலையான அபயாவுக்கு நீதி!

4 minutes read

கேரள கன்னியாஸ்திரி அபயா 28 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 6.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வழக்கின் 2வது குற்றவாளியான கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பயஸில் கன்னியாஸ்திரிகள் மடம் உள்ளது. இந்த மடத்தில் உள்ள கிணற்றில் 1992-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி இளம் கன்னியாஸ்திரி அபயா(வயது 19) என்பவர் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கோட்டயம் போலீசாரும், குற்ற புலனாய்வு போலீசாரும் தற்கொலை என வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த வழக்கில் அபயா தற்கொலை செய்து கொண்டதாக கேரள காவல் துறையும் கிரைம் பிராஞ்ச்சும் வழக்கை மூடிய போதும், திருடன் ஒருவரின் பிறழாத சாட்சியத்தால் தற்போது அபயாவுக்கு நீதி கிடைத்துள்ளது.

அடக்கா ராஜு என்பவர் சிறு சிறு திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் அடக்கா ராஜூ தான். கொட்ட பாக்கு, தேங்காய்களை கூட திருடுவார் இந்த ராஜூ. இதனால், ராஜூவின் பெயருக்கு முன் கொட்ட பாக்குவுக்கு மலையாள வார்த்தையான அடக்கா என்பது சேர்ந்து கொண்டது. இந்த வழக்கில் அடக்கா ராஜூதான் 3- வது முக்கிய சாட்சி. இந்த அடக்கா ராஜூ மீது கேரளாவில் 40 சிறிய வழக்குகள் உள்ளன.

அலுமினிய பொருட்களை திருடி விற்பதுதான் அடக்கா ராஜூவின் முக்கியத் தொழில். இந்த வழக்கில் அடக்காராஜூ எப்படி முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார் என்பதன் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. அடக்கா ராஜூவும் சமீர் என்பவரும் நண்பர்கள். அடக்கா ராஜூ, தான் திருடும் அலுமினிய ராடுகளை சமீரிடத்தில்தான் விற்று வந்துள்ளார்.

அபயா கொலை நடந்த 1992 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கோட்டயத்தில் அபயா தங்கியிருந்த பயஸில் கன்னியாஸ்திரிகள் மடத்தின் மாடியில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கியில் இருந்து அலுமினிய ராடுகளை அடக்கா ராஜூ கழற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, பின்பக்க மாடி வழியாக மொட்டை மாடிக்கு இரண்டு பேர் டார்ச் லைட் வெளிச்சத்தில் வந்ததை பார்த்துள்ளார்.

உடனடியாக தன்னை மறைத்து கொண்ட அடக்கா ராஜூ , அவர்களின் நடவடிக்கையை கண்காணித்தார். அப்படி வந்தவர்களில் ஒருவர் தாமஸ். இவரின் முகம் ராஜூவின் மனதில் நன்றாக பதிந்து விட்டது. மற்றோருவர் பாதிரியார் ஜோஸ் புத்ரருகையில் என்று சொல்லப்படுகிறது. பின்னர், பாதிரியார்கள் அங்கிருந்து சென்றதும் காலையில் தான் திருடிய அலுமினிய கம்பிகளை சமீரிடத்தில் கொண்டு சென்று விற்றுள்ளார் ராஜூ.

இந்த நிலையில், மடத்தில் உள்ள கிணற்றில் கன்னியாஸ்திரி விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. பின்னர், தற்கொலை அல்ல கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதும் தானே நேரில் சென்று சாட்சி சொன்னவர்தான் இந்த அடக்கா ராஜூ. சாட்சி சொன்னால் உடனே ஏற்றுக் கொள்ள முடியுமா? நீ திருடியதற்கு என்ன ஆதாரம் என்கிற கேள்வி எழுந்தது. தான் மடத்தில் திருடிய அலுமினிய கம்பிகளை அடுத்த நாள் சமீரின் கடையில் விற்றதாக ராஜூ கூறினார். தொடர்ந்து, சமீரின் கடையில் போலீஸார் ரெய்டு நடத்தினர். அங்கிருந்து , அடக்கா ராஜூ விற்ற அலுமினிய கம்பிகளை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து, அடக்கா ராஜூவிடத்தில் விசாரணை நடத்தினர்.

ஆனால், இந்த வழக்கு அரசியல் செல்வாக்கு, பணபல ஆதிக்கத்துக்கிடையே நடைபெற்று வந்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் கூட நேர்மையாக விசாரணை நடத்த முடியாத நிலை காணப்பட்டது. அடக்கா ராஜூவை 58 நாட்கள் அடைத்து வைத்து பிறழ் சாட்சியாக மாற்ற முயன்ற சம்பவமும் நடந்தது. வேண்டிய அளவு பணம், வீடு, மனைவிக்கு வேலை, பிள்ளைகளுக்கு இலவச கல்வி என்றெல்லாம் ஆசை காட்டி பார்த்துள்ளனர். ஆனால், அடக்கா ராஜூ தன் வாக்குமூலத்தில் கடைசி வரை உறுதியாக நின்றார். நீதிமன்றத்தில் சாட்சியாகவும் ஏறி பாதிரியார் தாமஸை அடையாளம் காட்டியும் விட்டார். இதில், ஜோஸை அடையாளம் காட்ட முடியாததால், அவர் ஏற்கெனவே கேரள ஐகோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டார்.

அழுத்தத்தால் அடக்கா ராஜுவை கொலை செய்ததாக ஒப்புக் கொள்ள வைக்க காவல் துறையினரே முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. வழக்கை விசாரித்த காவலர் குழு 2 லட்சம் தருவதாகக் கூறி ராஜுவை குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு மிரட்டியுள்ளது.

இரண்டாவதாக வழக்கை விசாரித்த கிரைம் பிராஞ்ச் போலீசார், ராஜு மடத்தில் இருந்து திருடி விற்ற செப்புத் தகடுகளை வாங்கிய பழைய பொருட்கள் வாங்கும் தொழில் செய்து வந்த சமீரையும் அவரது சகோதரரையும் ராஜுவுக்கு எதிராக பொய் சாட்சி கூறுமாறு கொடுமைப்படுத்தி உள்ளனர்.

சமீரையும் அவரது சகோதரர் ரியாசையும் கைது செய்து சிறையில் அடைத்த கிரைம் பிராஞ்ச் பிரிவினர், ராஜு அபயாவைக் கொலை செய்ததாக சாட்சியம் கூறுமாறு அவர்கள் இருவரையும் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

அடக்கா ராஜு மீது தொடுக்கப்பட்ட 28 வழக்குகளில் 25ல் ராஜு மீது குற்றம் இல்லை என்று சகோதரர்கள் வாக்குமூலம் அளித்தனர். இது ராஜுவின் சாட்சியத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில்குமார், தன் தீர்ப்பில் அடக்கா ராஜூவின் உறுதி குறித்து புகழாரம் சூட்டியுள்ளார். 229 பக்கமுள்ள அந்த தீர்ப்பில்,” ராஜூ திருடுபராக இருந்தாலும் நேர்மையான மனிதர். சூழல் காரணமாக திருட்டில் ஈடுபட்டாலும் உண்மையை தவிர வேறு எதையும் அவர் பேசுவதில்லை. எத்தனையோ சலுகைகள் தருவதாக வற்புறுத்தியும் தன் வாக்குமூலத்தில் உறுதியுடன் நின்ற மனிதர் ” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

தீர்ப்புக்கு பிறகு மீடியாக்களிடத்தில் பேசிய அடக்கா ராஜூ, ” எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இப்போதும் குடிசையில்தான் நான் வசிக்கிறேன். அந்த இளம் பெண்ணின் இறப்புக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டுமென்பதில் நான் தீர்க்கமாக இருந்தேன் ”  என்றார்.
தற்போது, திருட்டு தொழிலில் அடக்காராஜூ ஈடுபடுவதில்லை என்பது கூடுதல் தகவல். மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள அவர் இப்போது கேரளாவில் ரோல் மாடலாகியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More