நடிகர் அபிஷேக் குமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் புதிய நகைச்சுவை இணைய தொடர் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி வெளியாகிறது.
இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் நகைச்சுவை இணைய தொடரில் அபிஷேக் குமார், சேத்தன், தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி, பால்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த நகைச்சுவை இணைய தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுதி இருக்கிறார். இந்த இணைய தொடரை பிரைன் வீடியோ டிஜிட்டல் தளத்திற்காக தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
டிஜிட்டல் தள பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றிருக்கும் அசல் இணையத் தொடர்களின் பட்டியலில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இணையும் புதிய அசல் நகைச்சுவை தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் படைப்பிற்கும் கூடுதலான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இணைய தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், ”சென்னையில் சகல வசதிகளுடன் வாழ்க்கை நடத்தும் சித்தார்த் எனும் பொறியாளர், சென்னையில் இருந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்படுகிறார். அந்த கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வியலோடு.. சித்தார்த் பொருந்தி போக முடியாமல் தவிக்கிறார். இதனால் ஏற்படும் சூழலை நகைச்சுவையாக விவரிப்பது தான் இந்த இணைய தொடர்” என்றார்.