2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக்குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
முழங்காவில் பகுதியிலிருந்து சேவைகள் கிளிநொச்சி நகர் பகுதிக்கு முன்னர் குறிப்பிட்டவாறு நகர்த்தப்பட்டுக் கொண்டு இருக்கையில் கிளிநொச்சி பொது மருத்துவமனை முழு வீச்சுடன் இயங்கிக்கொண்டு இருந்தது.
2004ம் ஆண்டு சமாதான காலத்தில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை புதிய இடத்தில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான ரூபா 600 மில்லியன் நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கி இருந்தது. கட்டட வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு 2006 ஆடி மாதம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. டாக்டர்.சதானந்தன், வைத்திய அத்தியட்சகர் தலைமையில் மேற்படி வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு புதிய பரிணாமத்தை அடைந்தது.
2007,2008 காலப்பகுதியில் 20இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இரவு பகலாக கடமையாற்றினார்கள். மிகச் சிக்கலான ஒரு சில நோயாளிகள் வவுனியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் அநேகமான சேவைகள் வைத்தியசாலையில் பூர்த்தி செய்யப்பட்டது. இடப்பெயர்வு ஆரம்ப காலங்களில் இவ் வைத்தியசாலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துச் சென்றது. 300இற்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அதேவேளை 1000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் தினசரி வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவில் சேவையைப் பெற்றுக்கொண்டனர். வெளி நோயாளர் பிரிவில் வயோதிபத்திலும் துடிப்போடு டாக்டர்.சிதம்பரநாதன் கடமையாற்றிக்கொண்டு இருப்பார். எல்லோருக்கும் ஆறுதலும் அறிவுரையும் கூற எந்த நேரத்திலும் தயங்க மாட்டார். கடைசி நோயாளியை பார்வையிட்ட பின்னரே வீடு செல்வார்.
கடைசிக் காலங்களில் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் இல்லாத போதும் டாக்டர்.மனோகரன் தனியாக மாதாந்தம் 400 சுகப் பிரசவங்களை தாதியர்கள் மற்றும் மருத்துவ மாதுக்களோடு உறுதிப்படுத்தினார். போர் கடுமையாகிக் கொண்டு செல்ல மன நல சேவைகளைப் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. டாக்டர்.ஜெயராஜா விசேட கிளினிக்குகளை நடத்தி இருந்தார். இவ்வாறு சேவைகள் தொடர்ந்துகொண்டு இருக்கையில்………..
தொடரும்…..
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/