2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து நலிவுற்றவர்களின் எண்ணிக்கை இவ்வாறு படிப்படியாக அதிகரித்துக்கொண்டு சென்றது. 2008 ஆரம்ப பகுதியில் போர் வெகு தொலைவில் நடைபெற்றுக்கொண்டு இருந்தாலும் மிகையொலி விமானத்தின் பறப்பு நகரங்களின் மீதான சத்தம் அனைவருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தியது. சத்தம் கேட்க ஆரம்பித்தவுடன் பலர் பதுங்கு குழிகளை நோக்கி ஓடுவார்கள். வீதியோரங்கள், பாடசாலைகள், அரச கட்டடங்கள், வீடுகள் அனைத்திலும் பாதுகாப்பான பதுங்கு குழிகள் வெட்டப்பட்டிருந்தன. 2008ம் ஆண்டு பங்குனி 5ம் நாள் வைத்தியர்களாகிய நாங்கள் வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட்டுக்கொண்டு இருந்தபோது மிகையொலி விமான சத்தம் அமைதியை குலைத்தது. இந்த பயங்கர சத்தம் கேட்ட பின் அப்பகுதியில் இருப்பவர்கள் யாராயினும் அந்த சத்தம் ஓயும்வரை வேறு வேலைகள் செய்ய முடியாத நிலையில் காணப்பட்டனர். மிகையொலி விமானம் அநேகமான சந்தர்ப்பங்களில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட விமானங்கள் ஒரே தடவையில் வட்டமிட்டு பின்னர் குண்டுகளை வீசி செல்வது மட்டுமல்லாது அதிகளவான சத்தத்தையும் வெளியிடுவதனால் மக்கள் பாரிய அசௌகரியத்தை அனுபவித்தார்கள். அதேநேரம் இந்த மிகையொலி விமானங்களை மிக அரிதாகவே காணக்கூடியதாகவே இருக்கும்.
பங்குனி 5ம் நாள் இவ்வாறு சுற்றி வட்டமிட்ட விமானங்கள் கணேசபுரம் பகுதியில் குண்டுகளை வீசி சென்றன. அப்போது கடமையில் இருந்த மகேந்திரனும் நானும் அம்புலன்ஸ் வண்டியில் அப் பகுதிக்கு சென்றோம். அங்கு கோகுலன் என்பவரது வீட்டில் பெரும் அழுகுரல் கேட்டது. அவரது மனைவி பிள்ளைகள் பெரும் அவலக்குரல் எழுப்பினார்கள். பின்னர் அவரது மனைவியையும் பிள்ளைகளையும் அதே அம்புலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்து வந்தோம். வைத்தியசாலையில் மனநல சிகிச்சை பிரிவு மண்டபத்தில் அவர்களை தங்கவைத்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க ஆவண செய்யப்பட்டது. இரவு பகலாக உறவினர்கள் அங்கு வந்து அழுது புலம்பினார்கள்.
சூரியன் அஸ்தமித்த பின்னர் பங்குனி 6ம் திகதி விடிந்தது. அன்றும் பலருடைய மனதிலே பதட்ட நிலை காணப்பட்டது. ஆங்காங்கே மக்கள் ஒன்றுகூடி கதைத்துக்கொண்டு இருந்தார்கள். வழமைபோல மாணவர்களும் பாடசாலைக்கு சென்றார்கள். அன்றைய தினம் சிறப்பான நாள். முதலாம் ஆண்டு மாணவர்களை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மாலையிட்டு வரவேற்கும் நாள். இதனை “கால் கோள் விழா” என அழைக்கலாம். அநேகமான பாடசாலைகளுக்கு முதலாம் ஆண்டு மாணவர்கள் பெற்றோர்களுடன் சென்றிருந்தனர். கிளிநொச்சி மகாவித்தியாலயத்திலும் இவ் விழாவிற்கான ஆயத்தம் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் பாடசாலையின் அதிபரினால் திடீரென எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து மிகையொலி விமான சத்தம் கேட்டது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பணியாற்றிய நான் விரைவாக கிளிநொச்சி மகா வித்தியாலயம் சென்றடைந்தேன். அங்கு ஆயிரக் கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்களும் பாதுகாப்பு நிலைகளைத்தேடி ஓடியவண்ணம் இருந்தனர்.
சிறிய வகுப்பு மாணவர்கள் சிலர் பயத்தினால் அந்தரித்தார்கள். எனினும் சில மாணவர்கள் பயமின்றி மிகையொலி விமானத்தின் சத்தம் கேட்கும் திசையை நோக்கி பார்த்து அது பற்றி கதைத்துக்கொண்டு இருந்தார்கள். மிகையொலி விமானங்கள் குண்டுகளை வீசியது. அக்குண்டுகள் கனகபுரம் பாடசாலையில் இருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் வீழ்ந்து வெடித்தன. மாலை சென்று குண்டு விழுந்த இடத்தை பார்த்தபோது பாரிய குன்று போன்று தோற்றமளித்தது. அக் குன்றில் நீர் ஊற்று எடுத்து காணப்பட்டது.
சிதறி ஓடிய மாணவர்கள் மீண்டும் தனது வகுப்பறை நோக்கி வந்தார்கள். முதலாம் தர மாணவர்கள் பாடசாலையின் வாயிலுக்கு அருகில் கூடினார்கள். இரண்டாம்தர மாணவர்கள் அவர்களை அழைத்து வந்தனர். அவர்களுடன் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதே இடத்தில் கூடினர். பாரிய மிகையொலி விமானத்தின் சத்தம், வெடிப்புச்சத்தத்தின் பின்னால் பய உணர்வுடன் கால்கோள் விழா நடந்தேறியது. இருப்பினும் ஏற்பட்ட பயப்பீதி பலரின் மனதிலேயே ஆழமாக பதிந்தது. அன்றைய தினம் முதலாம் ஆண்டில் கல்வி கற்க வந்த மாணவர்களில் டாக்டர்.பிறைட்றனின் மகன் ஜோயலும் மேற்படி சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டது. ஒரு சில மாணவர்கள் மீண்டும் அப் பாடசாலைக்கு வர மறுத்தனர். ஜோயலும் “நான் கனிஷ்ட மகா வித்தியாலயத்திற்கு போக மாட்டன்” என விடாப்பிடியாக கூறினார். எனவே அவர் கிளிநொச்சி நகரில் இயங்கி வந்த ஆங்கில பாடசாலையில் கல்வியை தொடர்ந்தார்.
போரின் நேரடி விளைவுகள் தவிர அதனால் ஏற்பட்ட மனப் பாதிப்பு பயம், பதட்டம் என்பனவற்றுக்கு சிகிச்சை அளித்து
ஆறுதல் அளிக்க பல உதவிகள் தேவைப்பட்டது.
தொடரும்……….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/