September 22, 2023 6:59 am

உள்ளூர் ராசாக்களின் தந்திரங்களும், வெளியூர் ராசாக்களின் மந்திரங்களும் – இதயச்சந்திரன் உள்ளூர் ராசாக்களின் தந்திரங்களும், வெளியூர் ராசாக்களின் மந்திரங்களும் – இதயச்சந்திரன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நவிபிள்ளை அம்மையார், விடுதலைப்புலிகள் மீது பகிரங்கமாக விமர்சனங்களை வைத்தாலும், அவரைக் காப்பாற்றுவதற்கென்றே நம்மிடையே ‘ராசதந்திரம்’ பேசும் ராசாக்கள் தோன்றிவிடுவார்கள்.

வரிக்கு வரி வியாக்கியானங்களும், பொழிப்புரைகளும் கொட்டப்படும். அத்தோடு, ‘மக்களின் எதிர்ப்புணர்வுகளை தணித்துவிட்டோம்’ என்று சுயதிருப்தி கொள்வார்கள்.
இதுவும் ஒருவகையில், மக்களின் போராடும் உணர்வினை மழுங்கச் செய்யும், ஒடுக்குமுறையாளர்களின் உத்திதான்.

முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர், புலம் பெயர் நாடுகளிலேயே திட்டமிட்ட வகையில் இவை முன்னெடுக்கப்படுகின்றன.
உண்மையிலேயே, தலைவரோடு நீண்ட காலமாகக் களத்தில் நின்று போராடியவர்கள், வேறு இயக்கங்களில் இருந்து சிங்களத்தின் ஒடுக்குமுறைக்கெதிராக களமாடியவர்கள் எவரும், போராட்டங்களிலிருந்து மக்கள் தனிமைப்பட்டுப் போகும் வகையில் செயல்படுவதில்லை.

நான் முதல் batch , இரண்டாம் batch என்று சுய பிரகடனம் செய்து, தான்தான் அண்ணையின் ஒரே வாரிசு என்பது போலொரு தோற்றப்பாட்டினை செயற்கையாக உருவாக்கும் அதேவேளை,  நவிப்பிள்ளையின் ‘விடுதலைப்புலிகள்’ மீதான விமர்சனத்திற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு , மக்கள் மத்தியில் இரட்டை வேடம் போடும் சிலர் இன்னமும் எம்மிடையே இருக்கின்றார்கள்.

ஒடுக்குமுறையாளர்களின் உள்ளூர் இராசதந்திரிகள் போல் தொழிற்படும் இந்தப் பிரகிருதிகள், எந்தத் தளத்தில் ,எந்த முகாமின் பின்னணியில் இயங்குகிறார்கள் என்பதை உடனடியாக மக்களால் புரிந்து கொள்ள முடியாது.
‘விடுதலை’ வேஷம், ‘ புலி’ வேஷம் போட்டபடியே அவர்கள் உலவுவதால், இந்தத் தடுமாற்றம் ஏற்படுகிறது. 2009 இற்கு முன்னர் யாருமே இவர்களைத் தரிசித்திருக்க முடியாது.

களத்தில் நின்ற எவருக்குமே இவர்களைத் தெரிந்திருக்காது.
அதேவேளை, மக்களுக்கும் அதுபற்றியதான கவலைகள் கிடையாது என்பதை இந்தத் தனிநபர்கள் புரிந்து கொள்வதில்லை. தாங்கள்தான் இனி அடுத்த ‘அண்ணை’ என்பது போலவும்,  கிளிநொச்சி பத்திரிக்கையாளர் மாநாட்டில் பதிலளிப்பது போலக் கற்பிதம் கொண்டு ,எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.

இவைதவிர, வல்லரசு ராசாக்களின் மந்திரங்களை, மக்களிடம் கொண்டுசெல்லும் உள்ளூர் தந்திரவாதிகளாக தாம் செயற்படுவதாக நினைத்து உள்ளூர மகிழ்ச்சியடைவார்கள்.
ஆனால் அந்த மந்திரவாதிகள், இந்த உள்ளூர் தந்திரவாதிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பது வேறு கதை.

எங்கள் தந்திர ஈசர்கள், இயங்கும் முறை மிகவும் வித்தியாசமானது.

மக்களைப் பற்றிய அக்கறை இவர்களிடம் துளியளவும் இருக்காது. எந்தப்போராட்டத்திலும் இவர்களை நீங்கள் காணமுடியாது. ஆனால் போராட்ட அமைப்புகள் பலவற்றோடு தொடர்புகளைப் பேணுவார்கள். அதிலும் மேல்மட்டத்தோடுதான் அந்த உறவு இருக்கும். சில நிதி உதவிகளைச் செய்து மேல்மட்டத்தினரின் நன்மதிப்பினையும் பெற்றுவிடுவார்கள்.

இந்தப் புல்லுருவிகள் வெளித்தோற்றத்தில் விடுதலைப்பயிர் போன்றே காட்சியளிப்பார். தேசிய விடுதலைப்போராட்டத்தை இனவாதப் போராட்டமாக திசை திருப்பும் காரியத்தை கட்சிதமாக மேற்கொள்வார்கள்.
பிரதேசவாதம், மதவாதம் போன்ற, தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான, அத்தனை சீர்குலைவு சித்தாந்தங்களையும் முன்வைப்பார்.

எமது விடுதலைக்கு ஆதரவான முஸ்லிம்களை ‘ தொப்பி பிரட்டி’ என்று கேவலப்படுத்தி , ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையே விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்களாக மாற்றி விடுவார்கள்.
இதைவிட மோசமானதொரு சிதைவு செயற்பாட்டில் இவர்கள் ஈடுபடுவதே மிகவும் ஆபத்தான விடயமாகும்.
அது வேறொன்றுமில்லை… 2004 இல் ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்கு காரணமாக  கருணாவால் சொல்லப்பட்ட ‘ பிரதேசவாதம்’ என்கிற நச்சுக் கருத்தே அதுவாகும்.

‘புதுவை’ இரத்தினதுரை, ‘முல்லை’ அமிழ்தன், ‘திருமலை’ நவம், ‘வல்வை’ தேவன் என்கிற பெயர்களெல்லாம் , அவர்களாகவே தங்களுக்கு சூட்டிக்கொண்ட எழுத்துலக அடையாளப்பெயர்கள். வேறு யாரும் அவர்களுக்கு இந்தப் பெயர்களை வைத்ததில்லை.

ஆனால் இந்த முதலாம் batch வாசிகள், இதயச்சந்திரனின் பேருக்கு முன்னால் ஊரின் பெயரை போட்டு, அவர் வேறு பிரதேசத்தைச் சார்ந்தவர் என்று அடையாளப்படுத்த முற்படுவார்கள். அதனூடாக மக்கள் மனங்களில் ,அவர் ஒரு வேற்றுக்கிரகவாசி என்பது போலானதொரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி , மக்களிடையே பிரதேச உணர்வுகளை மறைமுகமாகத் தூண்ட வழிகோலுவார்கள் அண்ணையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தும் தம்பிகள்.

இவையெல்லாம் சிறிய உதாரணங்கள்.
இதைவிட மக்களை மூளைச் சலவை செய்ய முனையும், பல சங்கதிகள் உண்டு.

‘ இராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு துன்பியல்  சம்பவம்’ என்று பத்திரிக்கை மாநாட்டில்  தேசியத்தலைவர் கூறியதால், விடுதலைப்புலிகளே அக்கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று ஒரு கருத்துத் திணிப்பினை மேற்கொள்ள இவர்கள் விரும்புகிறார்கள்.
சுப்பிரமணிய சுவாமியின் வலது கையாகத் திகழ்ந்த ‘ திருச்சி ‘ வேலுச்சாமியின் நூலை இந்த ‘ தம்பிகள்’ படிக்கவில்லை போல் தெரிகிறது. இவைதவிர, ரகொத்மனின் கேள்விகளுக்கு உயர் நீதிமன்றம் இன்னமும் பதில் வழங்கவில்லை.

இந்த வழக்கின் துன்பியல் வரலாறு தெரியாதோர், சுப்பிரமணிய சுவாமியின் வாரிசுகள் போல், நிரூபிக்கப்படாத குற்றத்தை ஏற்று, குனிந்து செல்ல வேண்டுமென மக்களுக்கு அடிபணிவு அரசியலின் தத்துவத்தை போதிக்க விரும்புகிறார்கள். அதுவும் அண்ணையின் பெயரால்.

இந்த ஈழத்து ‘ கோயபல்ஸ்கள்’, நீண்டகாலமாகவே மக்கள் போராட்டங்களோடு தம்மைப் பிணைத்துக்கொண்ட பல ஊடகவியலாளர்களை குறிவைத்தே தமது உளவியல் பரப்புரைகளை செய்கின்றார்கள்.

மக்கள் மத்தியில் பரவலாக அவதானிக்கப்படும் நபர்கள், செயற்பாட்டாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் என்போரை நோக்கியே இந்த ‘அண்ணை’ முகமூடிகளின் தாக்குதல் தொடங்கும். பின்னர், தேசியத்தின் மீதும், மக்களின் விடுதலையின் மீதும் பற்றுறுதி கொண்ட ஊடகவியலாளர் மேல் தனிநபர் தாக்குதலை தொடுப்பார்கள்.

‘அடிக்க அடிக்க அம்மியும் நகரும்’ என்கிற முதுமொழிதான் இவர்களின் தத்துவம்.
ஆனால் உரத்து அடித்தால், அடித்தவனின் கையே உடைந்து போகும் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

எவ்வளவு அடித்தும் அம்மி நகர மறுத்தால், தனிநபர் தாக்குதலை ஆரம்பிப்பார்கள். மனைவியைக் கொடுமைப்படுத்துகிறார், கோத்தாவுடன் கொஞ்சிக் குலாவுகின்றார், அமெரிக்காவின் உளவாளி, வீட்டிற்கான வங்கிக் கடனை பசிலிடம் வாங்கினார் என்று கற்பனைக்குதிரைகளை தட்டி விடுவார்கள்.

இந்த உள்ளூர் ராசாக்கள், வல்லரசு மந்திரங்களால் கட்டுண்டு, மகுடி வாசிப்பது பற்றியும் பார்க்க வேண்டும்.

நவிபிள்ளை அம்மையாருக்கு மகுடி வாசிப்பதில் இருந்து ஆரம்பமாகி, ஐ.நா.சபையில் அமெரிக்க கொண்டு வந்த தீர்மானங்களுக்கு விளக்கம் கொடுப்பதுவரை, இந்த லோக்கல் ராசாக்களின் தந்திரோபாய விளக்கங்கள் களை கட்டும்.

ஐ.நா.சபையே, உலக மக்களின் உயர் நீதிமன்றம் என்கிற நம்பிக்கை இந்த உள்ளூர் தந்திரிகளிடம் உண்டு. பாதுகாப்புச்சபையில், 5 வெட்டு வாக்குச் சண்டியர்களால் அச் சபை ஆளப்படுவதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள். ஈராக் மீது ஆக்கிரமிப்பு யுத்தம் இரண்டு வல்லரசுக்களால் முன்னெடுக்கப்பட்ட போது, இந்த உயர் பீடம், விடுமுறையில் சென்ற விட்டது.
அதுமட்டுமா…’ஒரு நாளைக்காவது சிரியாவுக்கு அடிக்க விடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் உலக நாயகன். அவர் அடித்தாலும் கேட்க ஆட்களில்லை. ஐ.நா. சபையின் பலம் அத்தகையது.
அமெரிக்க வென்று தரும், நீங்கள் வீட்டினுள் முடங்கிக் கிடவுங்கள் என்பதுதான் , இந்த மகுடிகளின் அறிவுரை.

மக்கள் திரளின் மீது நம்பிக்கையற்று , வல்லரசுகள் எமக்கான உரிமைகளை பெற்றுத் தரும் என்கிற ,கானல் நீரினைக் கண்டடைவதற்கான பாதையைக் காட்டும் நபர்கள் குறித்து, மிகுந்த அவதானம் தேவை. நரி வேஷத்தை விட, புலி வேசமே மிகவும் ஆபத்தானது. யானைக்கு வெள்ளையடித்தாலும் அது வேஷந்தான்.

ithaya    இதயச்சந்திரன் | அரசியல் ஆய்வாளர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்