Saturday, April 13, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை இறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? – இதயச்சந்திரன் இறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? – இதயச்சந்திரன்

இறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? – இதயச்சந்திரன் இறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? – இதயச்சந்திரன்

5 minutes read

தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், இரண்டு விடயங்கள் குறித்து ஊடகப்பரப்பில் அதிகமாகப் பேசப்படுவதைக் காண்கிறோம்.
ஒன்று, வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள். இரண்டாவது, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தென்னிலங்கையில் எழும் விமர்சனங்கள்.

இதில் முதலாவது விடயத்தை நோக்கினால், பிரச்சாரக் கூட்டங்களுக்குத் தடை போடப்படுகிறது என்கிற பொதுவான குற்றச் சாட்டுக்களைவிட, வேட்பாளர் மீதான நேரடித்தாக்குதல்களும், வீட்டின் வாசலில் கழிவு எண்ணெய் அபிசேகம் செய்வதுமே முக்கிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.
சூழலியலாளர் பொ.ஐங்கரநேசனின் காரியாலய வாசலிலும், இந்த எண்ணெய் அபிசேகம் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில்  போட்டியிடும், தமிழீழ விடுதலைப்புலிகளின் திருக்கோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் எழிலனின் துணைவியார்  அனந்தி அவர்கள், வாக்குச் சீட்டில் முதலாம் இடத்தில் ( எண் 1) இருக்கின்றார். முதன்முதலாக இவர்மீதுதான் தாக்குதலும் நிகழ்த்தப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரையை முடித்து வீடு திரும்பும் வழியில், ஐந்து சந்தியில் வைத்து அனந்தி எழிலனின் மீது கல் வீச்சுத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. வடக்கில் வசந்தம் வீசுகிறதோ இல்லையோ, கல் வீச்சு மட்டும் ஒழுங்காக நடைபெறுகிறது.

இவைதவிர,  தேர்தல் மேடைகளில், ‘சோறா..சுதந்திரமா?’, ‘ அபிவிருத்தியா…அதிகாரப்பகிர்வா?’ என்கிற பட்டிமன்றங்களுக்கும் குறைவில்லை.

இரண்டாவது விவகாரத்தை எடுத்துக் கொண்டால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றியே , பௌத்த சிங்கள கடும்போக்குவாதிகளும், ஆளும் தரப்பினரும் அதிகமாகப் பேசுகின்றனர் என்கிற யதார்த்தம் புரியும்.

அண்மைக்காலமாக, 13 வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று ஒரு சாராரும், இல்லை அறவே அதனை ஒழிக்க வேண்டுமென இன்னொரு தரப்பினரும், அறிக்கைபோரில் ஈடுபட்டதைக் காணலாம். ஒரு வழியாக அந்த விவாதமும், தேர்தல் நாள் அறிவிப்போடு அடங்கி விட்டது.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்கிற அழுத்தம் மேற்கிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் வந்ததால், தவிர்க்க முடியாமல் வடமாகாண சபைத்தேர்தலை வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசிற்கு ஏற்பட்டது.
130818170426_elilans_wife_ananthi_sasiharan_304x171_bbc_nocredit
அப்படியொரு அழுத்தம் வரவில்லை என்பதைச் சிங்கள மக்களுக்குக் காட்டவே, ஏனைய இரண்டு மாகாணங்களில் தேவையற்ற தேர்தலை நடாத்துகின்றது அரசு.

மாகாணசபை உருவாக்கத்திலும் இதுதான் நடந்தது.
தமிழ் அரசியல் அமைப்புக்களாலும், பெரும்பாலான விடுதலைப்போராட்ட இயக்கங்களாலும் 13வது திருத்தச்சட்டம் நிராகரிப்பட்டாலும், வட- கிழக்கு இணைந்த மாகாணசபை முறைமையினை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியா முன்வைத்தது.

இந்தியாவின் அழுத்தத்தால், தமிழ் மக்களுக்கென்று தனியான தீர்வினை வழங்கி விட்டோமென்று சிங்கள தேசம் எண்ணி விடக்கூடாது என்பதற்காகவே , சகல மாகாணங்களிலும் சபைகளை உருவாக்கினார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா. தென்னிலங்கை மக்கள் கேட்காத சபை அது.

ஆனாலும் இன்னொருவகையில் பார்க்கும்போது, ‘தமிழ் தேசிய இனம்’  என்பதை ஏற்றுக்கொள்ளாத, அத் தேசத்திற்கு (Nation ) இறைமை உண்டு என்பதை நிராகரிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில், வட-கிழக்கிற்கு என்று தனியான சபைகளை உருவாக்க முடியாது என்பதால் எல்லா மாகாணங்களிலும் சபைகள் உருவாக்கப்பட்டது என்பதுதான் நிஜம்.

மாகாணசபைத் தேர்தலுக்காக, கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுதப்பட்ட எந்த  விடயங்கள் குறித்து, இந்த சிங்கள கடும்போக்குவாதிகள் துள்ளிக்குதிக்கிறார்கள் என்று பாருங்கள்.

ஒஸ்லோ பிரகடன கதைகள் குறித்த விவாதத்தில் அவர்கள் ஈடுபடவில்லை. தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களுடன் இது பற்றிப் பேசிய பேராசிரியர் ஜி.எல்.பீரிசும் அதனை எப்போதோ மறந்து விட்டார்.
அடிப்படையில் உறுதியாக இருந்தவாறு , எதனையும் ஆலோசிப்பதற்கு தயார் என்பதே விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாக அன்று இருந்தது.

அதேவேளை ,’தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் கொள்கையையே ,தமிழ் தேசியக்கூட்டமைப்பும் பின்பற்றுகிறது ‘என்று எதனடிப்படையில், தேசப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவரும், அமைச்சருமாகிய விமல் வீரவன்ச கூறுகின்றார் என்பதைப் பார்க்க வேண்டும்.

நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் இதுவென்று கூறி, வழக்குப் போட முற்படும் சட்டத்தரணிகள் சங்கத்தின் நியாயப்பாடு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் எழுப்பப்படுகிறது.
ஆனாலும் விஞ்ஞாபனத்திலுள்ள,  ‘சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய தேசம்’ என்கிற சொல்லாடல்கள், 83 இல் கொண்டுவரப்பட்ட 6வது திருத்தச்சட்டத்திற்கு முரணானது  என்று விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்ற பௌத்த சிங்கள கடும்போக்காளர்கள் போர்க்கொடி தூக்குவார்கள்.

ஆங்கிலத்தில் nation ( தேசம்) என்று இருந்தது, தமிழில் தேசியமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அதை சிங்களத்தில் வாசித்த விமல் வீரவன்ச எப்படிப் புரிந்திருப்பாரென்று தெரியவில்லை. அது எவ்வாறு இருந்தாலும், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட nation என்கிற சொல்லையே அனைத்துலகம் உள்வாங்கிக்கொள்ளும்.

ஆனாலும்,  சுயநிர்ணய உரிமையைக் கோரிக்கையைக் கைவிடச் சொல்லும் அனைத்துலக நெருக்கடிக்கான குழு ( International Crisis Group ), இதனை எவ்வாறு சகித்துக்கொள்ளும் என்கிற கேள்வியும் எழுகின்றது.

அதேவேளை, தாங்கள் குறிப்பிடுவது பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமை அல்ல, ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ என்பது போன்ற புதிய விளக்கங்களும் , கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து வருவதை கவனிக்க வேண்டும்.

6 வது திருத்தச் சட்டமானது, உள்ளக சுயநிர்ணய கோரிக்கையை அனுமதிக்குமா என்பதல்ல இங்கு பிரச்சினை. வட- கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், ஒரு  இறைமையுள்ள பூர்வீக தேசிய இனம் என்பதை ஏற்றுகொள்ளாத அரசியலமைப்பில், உள்ளக உரிமைகளை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்பதே விவாதத்திற்குரிய முக்கிய விடயமாகும்.

தற்போதைய அரசியலமைப்பில் இதனை உள்வாங்கி மாற்றங்களைச் செய்யாமல், இரு தேசங்களின் பகிரப்பட்டஇறைமையின் அடிப்படையில், அதிகாரப் பகிர்வுப் பொறிமுறை ஒன்றினை நிறுவ முடியாது.

TNA-1

ஆகவே, தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிட்ட, ‘ஒரு தேசத்தின் சுயநிர்ணய உரிமை’ என்கிற அடிப்படைப் பிறப்புரிமையை , சிங்களத்திற்கு ஏற்றவாறோ அல்லது சில சர்வதேச நாடுகளுக்கு ஏற்றவாறோ மாற்றியமைக்காமல், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள இந்த விவகாரத்தை வைத்து, வடமாகாண சபையைக் கலைக்க, வட- கிழக்கைப் பிரித்த ஜே.வி.பியே , உயர்நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யலாம் (தற்போது அதனை கலாநிதி.குணதாச அமரசேகர முன்னெடுக்கின்றார் ).

ஒற்றையாட்சி மற்றும் சிங்களதேசத்தின் முழுமையான நாட்டிறைமை என்கிற மேலாதிக்க கருத்துருவத்திற்கு அச்சுறுத்தல் எந்த வடிவத்திலும் வந்தாலும், அதனை பெரும்பான்மை இனத்தின் அனைத்து கட்சிகளும் சேர்ந்தே எதிர்க்கும் என்பதுதான் இலங்கையின் வரலாறு.

ஆதலால் இதனைக் கருத்தில் கொண்டு,  இது போன்ற தேர்தல்கால எழுச்சி, நிலஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்களிலும் உருவாக்கப்பட வேண்டும்.

ஏனெனில், 13வது திருத்தச்சட்டத்தில் உள்ள சிறிய அதிகாரங்களைக்கூட மாகாணசபைக்கு அரசு வழங்காது. வரதராஜப் பெருமாளின் வரலாற்று அனுபவங்கள், நிகழ்கால அரசியல் தளத்தில் திரும்பவும் வரப்போகிறது.

இந்தியாவின் பூரண ஆதரவோடு, பக்கபலத்தோடு, இணைந்த வட- கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராகவிருந்த வரதரால், ஈழப்பிரகடனத்தை மட்டுமே செய்ய முடிந்தது.
பின்னர், கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட ஆயுத இயக்கமே ( கூட்டமைப்பின் மொழியில்), அந்த அடிப்படை பிறப்புரிமையை 2009 வரை கொண்டு சென்றது என்கிற உண்மையை மறக்க முடியாது.

 

ithaya   இதயச்சந்திரன் | அரசியல் ஆய்வாளர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More