April 2, 2023 3:43 am

தேர்தல் ஆரவாரத்தில் தேசத்தின் புதல்வர்களை மறக்க முடியுமா? | இதயச்சந்திரன் தேர்தல் ஆரவாரத்தில் தேசத்தின் புதல்வர்களை மறக்க முடியுமா? | இதயச்சந்திரன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

செப்டெம்பர் 26, ஈழத்தமிழினத்தின் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.

காந்தியின் அகிம்சைப்போராட்ட வடிவத்தின் உச்சத்தை தொட்டுச் சென்ற, லெப்.கேணல்.திலீபன் மரணித்த நாள்.

ஆயுதப்போராட்டத்தின் ‘வான்’ பரிமாணத்தை எட்டிவிட ,முப்பொழுதும் உழைத்த கேணல். சங்கரை, எதிரியின் ஆழ உடுருவும் கோழைப்படையணி  முள்ளியவளையில் வீழ்த்திய நாள்.

அந்த நாள்….ஒடுக்குமுறைக்கு எதிராக வீறு கொண்டெழும் தேசங்களுக்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கும் விடுதலை உணர்வினை ஊட்டும் நாள்.

266 மணி நேரம், மரணத்துள் வாழ்ந்த திலீபனின் ஒருமுகப்பட்ட சிந்தனை 5 அம்சக் கோரிக்கைகளிலேயே நிலைத்து நின்றது. சாவினை அரவணைத்தபடியே இலக்கோடு வாழ்ந்தார் திலீபன்.

இனத்தின் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு, எமை அழிப்பவனோடு நல்லிணக்க அரசியல் பேசும் அடிபணிவாளர்களுக்கு மத்தியில், காந்தி தேசத்தோடு 12 நாட்களாக அகிம்சை மொழியில், விடுதலை அரசியல் பேசியவரே எங்கள் திலீபன்.

தேச விடுதலைக் காட்டில், தன் உயிர்ப்பூவை அக்கினிக்குஞ்சாக வைத்தவரே திலீபன் என்கிற ராசையாவின் பார்த்தீபன்.

தம்மை இழந்து, தடைகளை அகற்றிய ஆயிரமாயிரம் மாவீரர்களை எமதினத்தின் வரலாறு பெருமையுடன் பதிந்திருக்கிறது.

பார்த்திபனின் மொழி சற்று வித்தியாசமானது. அமைதிகாக்க வந்த படையிடம் ஆயுத எழுத்தை ஒப்படைத்து, உயிர் எழுத்தினை ஆயுதமாக்கி ,விடுதலை இலக்கணத்தில் புது மரபினைப் புகுத்தினான்.

ஒவ்வொரு தடவையும் திலீபனைப்பற்றி எழுதும்போது, அர்த்தங்கள் புரியாத ஒளிமிகுந்த மறைவிடங்கள் வந்து மறைகின்றன.  தமிழ்த்தேசிய இனத்தின் அறம் சார்ந்த கூட்டுமன உளவியலின் குறியீடாக திலீபனை ஏற்றுக்கொள்ளும் பொதுப் பார்வையுமுண்டு.

வரித்துக்கொண்ட இலட்சியத்திலும், சொல்லிலும் செயலிலும், சலனமற்ற தெளிந்த பார்வையும் நேர்மையும் கொண்டோரே, வரலாற்றினை புரட்டிப்போடும் உந்து சக்தியாக மாற முடியும்.

தியாகி நடராசன், சார்ல்ஸ் அண்டனி போன்ற, போராட்ட வரலாற்றின்போக்கினை மாற்றிய மாவீரர்களின் வரிசையில் திலீபனும் இணைகின்றார்.

ஆனால் விடுதலைப்பாதையாய், தற்காப்பு வன்முறை வடிவத்தை ஏற்றுக்கொண்ட திலீபன், தனை வருத்தும் அகிம்சையை ஆயுதமாக உள்வாங்கிக்கொண்டது , முன்னெப்பொழுதும் பரீட்சித்துப் பார்க்கப்படாத முறைமையாக ஈழப்போராட்ட வரலாற்றில் அமைந்துவிட்டது.

உலகின் பிகப்பெரிய மக்கள் திரள் கொண்ட சனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவுடன் நட்புறவினை பேண வேண்டும் என்பதனை உலகிற்கு உணர்த்தவும், அதேசமயம் இனத்தின் பிறப்புரிமை மற்றும் பாதுகாப்பு என்பது தொடர்பாக எவருடனும் சமரசமோ அல்லது விட்டுக்கொடுப்போ இல்லை என்பதனை தெளிவாக வலியுறுத்தவும், திலீபன் இந்த அகிம்சைப்போரினை ஆரம்பித்தார்.

இப்போதெல்லாம், திலீபன் உரத்துக்கூறிய ‘ மக்கள் புரட்சி’ பற்றி , அவரின் நினைவு நாட்களில் மட்டுமே பேசுகின்றார்கள்.

போராட்டத்தில் மக்களின் மகத்தான பங்கு குறித்து பேசுவதைத் தவிர்த்து, ‘இராசதந்திரப்போராட்டம்’ என்று இலகுவான மொழியில், ஓரிருவரின் கரங்களில் பொறுப்பினை ஒப்படைத்து ஒதுங்கிக்கொள்ளும் நடைமுறையே இங்கு காணப்படுகிறது.

அவர்களும், புவிசார் அரசியலின் நெளிவு சுழிவுகளைப் புரிந்து கொள்ளாமல், வல்லரசுகளின் நலன்களோடு இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு, அதுதான் ராசாக்களுடனான இராசதந்திரப் போர் என்று நம் மக்களுக்குச் சொல்கிறார்கள்.

மறுபடியும் திலீபனின் ‘ மக்கள் புரட்சி’ என்கிற விடுதலைப்பாதை பற்றி நோக்கினால், அதற்கு சரியான பரந்துபட்ட மக்களை உள்ளடக்கிய அரசியல் வேலைத்திட்டம் அவசியம் என்பது உணரப்படும்.
அதனை குறுகிய இனவாத, பிரதேச, சாதிவாத அடிப்படைகளில் இருந்து கட்டமைக்க முடியாது என்கிற யதார்த்தமும் புரியப்படும்.

இனப்பரம்பலை சிதைக்கும் தீவிர செயற்பாட்டில் பௌத்த சிங்களப் பேரினவாதம் இயங்கும்போது, தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
மக்கள் புரட்சிக்கான அத்திவாரமே இங்கிருந்துதான் எழுப்பப்படும்.

ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை , நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ளும் சக்திகளின் இணைவால்தான் இப்புரட்சி சாத்தியமாகும்.

இந்த தர்க்கீகரீதியான இயங்கியல் உண்மையை மறுதலித்து, கட்டமைப்புரீதியான இனவழிப்பில் நம்பிக்கை கொண்டுள்ள சிங்களத்தோடு பேசித்தீர்க்கலாமென்று சொல்வது, காலத்தை இழுத்தடிக்க மட்டுமே உதவும்.

சிங்களத்தோடு முரண்பாடு ஏற்படும்போது, சர்வதேசம் உதவிக்கு வருமென்று எதிர்பார்ப்பதை மக்கள் நம்பவேண்டும் என்கிறார்கள். நில அபகரிப்புக் குறித்துப் பேசிப்பார்ப்போம் என்கிறார்கள். மாவீரர் துயிலும் இல்லங்களை மீளவும் அமைப்போம் என்கிறார்கள்.

இவையனைத்தும் சாத்தியமாகும் வகையில் செயற்படுவோம் என்பதுதான் , புதிதாகத் தெரிவானவர்கள் மக்களுக்குக் கூறும் வாக்குறுதி.
மாகாணசபைக்குரிய அதிகார வரையறைகளைப் புரிந்துதான் இவர்கள் பேசுகின்றார்கள். ஆகவேதான் அரசோடு பேவோம் என்கிறார்கள்.

இவர்களின் இராசதந்திர முயற்சிகள் தோல்வியடையும் போது, மக்கள் போராட்டத்திற்கான வெளி உருவாகும் என்கிற பேச்சுக்களும் தேர்தல் காலத்தில் வந்தன.

ஆனால் தோல்வியின் விளிம்பில் நிற்கும் போது இன்னொரு தேர்தல் திணிக்கப்படும்.
மறுபடியும் இறைமை, தேசம், சுயநிர்ணயம் எல்லாம் பேசப்படும்.
அப்போது மக்களின் நிலங்கள், பன்னாட்டுக் கம்பனிகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும்.

அந்த வேளையில் ,எங்கள் இராசாக்களின் இராசதந்திரங்களைக் கேட்க யாரும் விரும்ப மாட்டார்கள்.

திலீபன் கண்ட கனவு , ஒரு பெரும் நீண்ட கனவாக மாறிவிடும்.

ithaya   இதயச்சந்திரன் | அரசியல் ஆய்வாளர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்