மன்னார் உப்புக்குளத்தில் அமைந்துள்ள குருசுக்கோவிலின் 468 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரித்திர வரலாறுமன்னார் உப்புக்குளத்தில் அமைந்துள்ள குருசுக்கோவிலின் 468 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரித்திர வரலாறு

சரித்திரங்கள்: வருங்கால சந்ததியினருக்காக ஏடுகளில் எழுதப்படவேண்டும், எனும் உன்னத நோக்கத்திற்காக, பழைய பல ஏடுகளில் இருந்து ஆய்வுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டது.

 

01. 16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் யாழ் குடா நாடுகள், மாந்தை பெருநிலப்பரப்பு, மன்னார் தீவு, போன்றன யாழ்ப்பாண இராட்சியமாக விளங்கின அக்காலத்தில் யாழ்ப்பாண இராட்சியத்தை திரு. சங்கிலிய மன்னன் ஆண்டு வந்தான்.

02. இந்தியாவின் தென்கரையோரங்களில் வசித்துவந்த கிறீஸ்த்தவர்கள் யாழ்ப்பாண இராட்சியத்தில் கிறீஸ்த்துவைப் பற்றி அறிந்திராத பாமரமக்களுக்கு வேதவசனங்களை சிறிது சிறிதாக போதிக்கலாயினர்.

03. இவர்கள் மூலமாக அர்ச்சேட பிரான்சிஸ்கு சவேரியாரின் வேதம் போதிக்கும் ஆற்றலையும், புதுமைகளையும், கேள்வியுற்ற மன்னார் வாசிகள், 1544 இல் இவ் அர்ச்சேடவரை மன்னார் தீவுக்கு, வருமாறு ஓர் தூதுவர் மூலமாக ஒலை அனுப்பினார்.

DSCF8277

04. புனித சவேரியார் திருவாங்கூரில் சமய அலுவல்களில் மும்முரமாக இருந்த காரணத்தினால் தமது நாமம் பூண்ட ஓர் குருவானவரை யாழ்ப்பாண இராட்ச்சியத்திற்கு மன்னார் ஊடாக அனுப்பி வைத்தார்.

05. மன்னாருக்கு தோணி மூலம் வருகைதந்த சவேரியார் குருவானவர்; பள்ளிமுனை, எருக்கலம்பிட்டி அருகிலுள்ள “ஊசிமுக்கான்” துறையில் (முந்தல்) வந்து இறங்கி, கிறீஸ்த்தவர்கள் வாழும் பட்டிம் கிராமத்திற்கு செல்வதற்காக தற்போது மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பின்புறமாகவும், வடகிழக்கு திசையில் உள்ள கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஓர்கரையை அடைந்தார்.

06. இக்கரையை அடைவதற்கு அவர் சிறிய கடல் ஏரியை கடக்கவேண்டியிருந்தது. அவ்வேளையில் அவரின் கழுத்தில் தரித்திருந்த குருசு தவறுதலாக கடலில் விழுந்தது. அவர் பல முயற்ச்சிகள் எடுத்தும் அச்சிலுவையை கண்டுபிடிக்கமுடியவில்லை. கவலை அடைந்த சவேரியார் முழந்தால்படியிட்டு கடலைநோக்கி மனமுருக பிரார்த்தனை செய்தார்.

07. இதைத்தொடர்ந்து தன்னை வரவேற்க வந்த பட்டிம் கிறீஸ்த்தவர்களுடன் பட்டித் தோட்டத்தை நோக்கிச் சென்றார். சில நாட்களின்பின் ஏனைய கிராமத்திலுள்ள கிறீஸ்த்தவர்களை சந்திப்பதற்காக, தான்வந்து இறங்கி கழுத்தில் அணிந்திருந்த சிலுவையை தொலைத்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

08. அங்கு தனது குருசை தேடத்தொடங்கினார். அக்காலத்தில் கடல் ஏரியில் உள்ள நண்டுகள் கரையில் அமைந்துள்ள கற்குவியல்களில் வந்து சேர்வதுண்டு, அப்படி வந்த ஓர் நண்டின் கொடுக்கில் சவேரியார் குருவானவரின் சிலுவையும், நாடாவும், அதன்காலில் சிக்கி இருந்ததை கண்ணுற்ற, சவேரியார் இறைவனுக்கு நன்றி சொல்லி தனது சிலுவையையும், நாடாவையும் எடுத்து தனது கழுத்தில் அணிந்துகொண்டார். இதன்பின் அவ்நண்டுகளை ஆசீர்வதித்து கடலில் அனுப்பிவிட்டார். எமது மூதாதையரின் கூற்றுப்படி இங்குள்ள நண்டுகளின் மேலோட்டில் “குருசு அடையாளம்” காணப்படுவதாக நம்பிக்கை உண்டு.

09. இச்செயலின் ஞாபகமாக அவருடன் வந்த பக்தர்கள் அருகிலுள்ள மரக்கொப்புகளினால் சிலுவையொன்றை அமைத்து அவ்விடத்தில் நாட்டினர்;. சிறிது காலங்களின்பின் அவ்விடத்தில் ஓர்சில பக்தர்கள் மரங்கள், ஓலைகளினால் சிறிய கோவிலை கட்டி இறைவனை வணங்கத் தொடங்கினார். அன்றிலிருந்து இன்றுவரை அவ்விடத்தின் பெயர் “குருசுக் கோவிலாகும்”

DSCF8276

10. 1600 ம் ஆண்டுகளில் ஓலைக் கூரையுடன் கூடிய ஓர் சிறிய அடைப்பினுள் ஓர் மரச் சிலுவை ஒன்று காணப்பட்டதாகவும், கடலுக்கு மீன்பிடிக்கச்செல்வோர். இக்கோவிலை நோக்கி பிதா,சுதன் போட்டு தமது கடல்தொழிலுக்கு செல்வதாகவும், வீட்டுப் பாவனைக்காக விறகு வெட்டச்செல்லும் பெண்கள் இவ்விடத்தில் ஓய்வெடுப்பதாகவும், சரித்திர ஏடுகள் சான்று பகிர்கின்றன,

11. 1940 ற்கு முன் நமது கத்தோலிக்க மூதாதையர்கள்; குழுக்களாகவும், குடும்பங்களாகவும் இப்புனித கோவிலுக்குச் சென்று செபமாலை ஓதி மெழுகுவர்த்தி, கற்பூரம், எரித்து புகைஞ்;சான் தூபம் இட்டு. தமது நேர்த்திக்கடனை செலுத்தியதாகவும், அத்துடன் கடற்றரை ஓரங்களில் வந்து தங்கும் நண்டுகளை கம்பியினால் குத்தி சமைத்து ஏனையவர்களுக்கும் பரிமாறி உண்டதாகவும், சரித்திரம் கூறுகின்றது.

12. 1940 ற்கு பின் உப்புக்குளம், காட்டுப்பள்ளிவாசல், நளவன்வாடி, மூர்வீதி, போன்ற கிராமங்களில் முஸ்லீம்கள், இந்துக்கள். கிறீஸ்த்தவர்கள், குடியேறத்தொடங்கினர்.

13. 1990 ம் ஆண்டுகளில் வன்செயல் காரணமாக எமது முஸ்லீம் சகோதரர்கள் முற்றாக இடம்பெயர்ந்தனர்.

14. 1994 இல் விடத்தல்தீவு கிறீஸ்த்தவர்களும், இழுப்பைக்கடவை இந்துக்களும், வன்செயலினால் இடம்பெயர்ந்து மன்னார் தீவிற்கு வந்து, மேற்கூறிய கிராமங்களான உப்புக்குளம், காட்டுப்பள்ளிவாசல், நளவன்வாடி, மூர்வீதி, குருசுக்கோவிலடி, முத்தமிழ் நகர், போன்ற கிராமங்களில் முஸ்லீம் சகோதரர்களினால் கைவிடப்பட்ட வீடுகள், காணிகளை விலைக்கு பெற்று குடியேறினர்.

15. 1995 இல் மன்னார் பேராலய பங்கிற்கு பதிவிற்குட்பட்ட 180 கத்தோலிக்க குடும்பங்களும், 50 ற்கு மேற்பட்ட இந்து குடும்பங்களும், 30 ற்கு மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களும், 10 பிரிவினை சபைக் குடும்பங்களும், அப்பகுதியில் அந்நியோன்னியமாக வாழ்ந்து வந்தனர்.

16. 2009 ம் ஆண்டுகளில் பேராலய பங்குத்தந்தையர்கள், உதவிப் பங்குத்தந்தையர்கள், பவுல் அடியார் செபக்குழு, பள்ளிமுனை ஆலயசபை, ஏனைய நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் 600 வருட வரலாறு கொண்ட குருசுக்கோவில், புனர்நிர்மானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது,

17. 2011 ஆவணி மாத பகுதியில் பேராலய பங்குத்தந்தையாய் இருந்த வண பிதா யேசுராஜா அவர்களும், உப்பக்குள வலயப் பொறுப்பாளர் திரு ஏ.எம் அல்மேடா அவர்களும், எடுத்துக்கொண்ட அயராத முயற்ச்சியினால் நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் “குருசுக்கோயில் நிலப்பரப்பு” துப்பரவு செய்யப்பட்டு, வேலி அமைக்கப்பட்டு, ஓர்சிறிய மண்டபம் கட்டப்பட்டு வருகின்றது.

sd

18. மக்களின் ஒத்துழைப்புடன் பல நூற்றாண்டுகளின்பின் 2011 ஆவணி மாதம் முதலாவது திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் 2 ம் கிழமை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 5.00 மணியளவில் அவ்விடத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வருகிறது.

19. இதற்கு எமது தாராள மனசுடன் கூடிய மன்றாட்டுகள், உடல்உதவி, பணஉதவி, வியர்வை, போன்றவற்றை நாம் சிந்த வேண்டாமா?

20. உங்களின் தளராத நம்பிக்கை எமது வருங்கால சந்ததியினருக்கு சான்று பகர வேண்டாமா?

21. மேலும் குடும்பங்களாகவும், குழுக்களாகவும், 600 ஆண்டுகள், பழமை வாய்ந்த குருசுக்கோவிலுக்குச் சென்று, எமது வேத வைராக்கியத்தை மன்னாரில் நிலை நிறுத்தி எதிர்கால சந்ததியினருக்கு சான்று பகர்வோம் வாரீர்!

மன்னார் பேராலய பங்குத்தந்தையர்களும்,
குருசுக்கோவில் ஆர்வளர்களும்

Peter  தொகுப்பு | சின்கிலேயர் பீற்றர் | மன்னாரிலிருந்து | 14-09-2013.

TP : 0094 77-2131-652

Email : petsinclair@gmail.com

 

ஆசிரியர்