Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை உதிரும் மாகாணசபை அதிகாரங்கள் – இதயச்சந்திரன் உதிரும் மாகாணசபை அதிகாரங்கள் – இதயச்சந்திரன்

உதிரும் மாகாணசபை அதிகாரங்கள் – இதயச்சந்திரன் உதிரும் மாகாணசபை அதிகாரங்கள் – இதயச்சந்திரன்

5 minutes read

ftfஅரசின் மீதான வெறுப்பினைக் கொட்டித்தீர்த்து விட்டார்கள் வடக்கு வாக்காளப் பெருமக்கள்.
ஏறத்தாள 85 சதவீத வாக்குகள் என்பது, பேரழிவின் பின்னான 4 வருடங்களில் தமிழ் மக்களின் மனங்களில் பெரிதளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை  என்பதைக் காட்டுகிறது.

அரசு மேற்கொள்ளும் அபிவிருத்திகள், இழப்பினால் வந்த இரணங்களை ஆற்றாது. கம்பள நெடுஞ்சாலைகள் யாவும் அந்நியமான கோடுகளாக வாழ்விழந்த மனிதருக்குத் தெரியும்.

தமிழ் மக்களின் கூட்டுமன உளவியலில் குவிந்திருந்த எதிர்ப்பரசியலின் உச்சத்தை மாகாணசபைத் தேர்தல் ஆழமாகப் பதிவு செய்துள்ளது.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும், ‘மாவீரன் பிரபாகரன்’ என்கிற மேடை முழக்கமும், மாவீரர் துயிலுமில்லங்களை மீள நிர்மாணிப்போம் என்கிற வாக்குறுதிகளும் மக்களை அலையலையாக வாக்குச் சாவடிகளை நோக்கி நகர்த்தியிருக்கிறது.

போலிப் பத்திரிகைகளைக் கண்டு மக்கள் ஏமாறவில்லை. எத்தனையோ தடையரண்களையும் துரோகங்களையும் கடந்து வந்துள்ள மக்களுக்கு, சரியானது எது என்பதை உணர்ந்து கொள்ளும் ஆளுமை இருக்கும்.

விக்கினேஸ்வரன் அவர்களைத்தவிர, ஏனைய விருப்புவாக்கு தெரிவிலும் மக்கள் தெளிவாகத்தான் இருந்திருக்கிறார்கள்.  யாழ்.மாவட்டத்தில் நடந்த சகல தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் ஒரு விருப்பு வாக்கினை விக்கினேஸ்வரன் அவர்களுக்கு அளிக்குமாறு கட்சி பேதமின்றி எல்லோரும் கேட்டுக்கொண்டார்கள்.
ஆகவே அவர் முதலாம் இடத்திற்கு வந்தது ஆச்சரியமான விடயமல்ல.

இருப்பினும் அரசியல் தளத்தில் அறிமுகமற்ற , விடுதலைப்புலி தளபதியின் மனைவி என்கிற அடையாளத்தோடு, தேர்தலில் இறங்கிய திருமதி. அனந்தி சசிதரன் அவர்கள் பெற்ற விருப்பு வாக்கு பல செய்திகளைச் சொல்கிறது.
அடிப்படை அரசியல் கோட்பாட்டில் மக்கள் உறுதியாக இருப்பதையே அச்செய்தி எடுத்துக்காட்டுகிறது.

SRI_LANKA_ELECTIONdesi

தற்போது, கட்டடம் இல்லாத மாகாணசபைக்கு 4 அமைச்சர்களைத் தெரிவு செய்யும் பணி தொடர்வதாக சொல்லப்படுகிறது. அவை முடிந்த கையேடு, சபை இயங்குவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து இலங்கை அதிபரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்  என்று எதிர்பார்க்கலாம்.

வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மத்தியவங்கி புளகாங்கிதம் அடைவதால், வடமாகாணசபைக்கு நிதி ஒதுக்குவதில் பெரிய சிக்கல் எதுவும் இருக்காது என்று நம்புவோம்.

இனி, வடக்கின் சகல அபிவிருத்தி வேலைகளையும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களுடன் கலந்தாலோசித்தே   முடிவெடுப்போம் என்று கூறும் சுதர்சன நாச்சியப்பன், சம்பூரில் அனல்மின்நிலையம் அமைக்கும் விவகாரத்தை, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி (கூட்டமைப்பு) அவர்களோடு பேசிக் கலந்தாலோசித்தால், வெளியேற்றப்பட்ட மக்களின் அடிப்படைப்பிரச்சினை தீர உதவியாக இருக்கும்.

சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை சந்தித்த ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளை அம்மையாரிடம், ‘தமது நிலம் தமக்கு வேண்டும்’ என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 7ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் அவர்கள், விக்கினேஸ்வரன் அவர்களோடு, கிழக்கின் எதிரணித்தலைவர் தண்டாயுதபாணியையும் சந்திக்க  வேண்டும்.

அதேவேளை, வடகிழக்கில், மக்களின் காணிகளில் இராணுவம் இருக்கிறது என்கிற உண்மையை ஐ.நா சபையில் போட்டுடைத்த நவிபிள்ளை அம்மையார், அபிவிருத்தி என்ற போர்வையில் பன்னாட்டுக்கம்பனிகளுக்கு தனியார் காணிகள் ஒதுக்கப்படுவது குறித்து பேசியிருக்க வேண்டும். அனேகமாக மார்ச்சில் நடைபெறவுள்ள பேரவை மாநாட்டில் அம்மையார் இதுகுறித்து பேசுவாரென்று நம்புவோம்.

வடமாகாணசபைத்தேர்தல் முடிவுகள் வந்த பின்னர், மிகுந்த அவதானத்துடன் இதனை பலர் வரவேற்றார்கள். வரலாற்று அனுபவங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், ஏட்டில் இருப்பதைக்கூட நடைமுறைப்படுத்த இயலாது என்று ஒதுங்கிக்கொண்டார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்போர் சிலர்.

ஆனால் எந்த விமர்சனங்களுமின்றி , ‘இதோ தமிழ் மக்களுக்குத் தீர்வு வந்து விட்டது’ என்று குதூகலிக்க ஆரம்பித்துவிட்டது ஒரு கூட்டம். அவர்கள் வேறுயாருமில்லை. 23 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தமிழக காங்கிரஸ்காரர்களே, தமக்குக் கிடைத்த வெற்றிபோல் இதனைக் கொண்டாடுகின்றார்கள்.

தம்மால் மட்டுமே ஈழமக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வினை வழங்க முடியுமென்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கூற ஆரம்பித்துள்ளார். நாணய மதிப்பிறக்கத்தால் குழம்பியிருக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்,  கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியை தனது வெற்றிபோல் மக்களுக்கு எடுத்துக்காட்ட முயல்வது தெரிகிறது.

Sri_Lanka_Elections-2013-09-20_1_540_355_100

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 58 தொகுதிகளில் தோல்வியுற்று, 5 தொகுதிகளில் மட்டுமே அரும்பொட்டில் வெற்றி பெற்ற காங்கிரசார், அந்த மாபெரும் தோல்வியிலிருந்து மீண்டெழமுடியாமல் இதுநாள் வரை தவித்து வந்தனர்.

‘கூட்டமைப்பின் வெற்றி’ என்கிற தடியை  ஊன்றிப்பிடித்தபடி, காங்கிரசின் அரசியல் செல்வாக்கினை மறுபடியும் தமிழகத்தில் தூக்கி நிமிர்த்த இதை விட்டால் வேறு வழியில்லையென்று முடிவெடுத்துவிட்டார்கள்.
இது, தமது தலைவர் இராஜீவ் காந்தியினால் கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவான மாகாணசபை என்பதால், அந்த வெற்றி தமக்கானது என்கிற கற்பிதத்தில் அவர்கள் வாழ்கின்றார்கள்.

அடுத்த வருடம் மே மாதமளவில், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் இருப்பதால், முதலில் தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவு சக்திகளின் ஆதரவுத் தளத்தினை உடைக்க வேண்டிய தேவை காங்கிரசாருக்கு உண்டு.
அதற்கான வியூகங்களை இப்போதே வகுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழக சட்டசபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை ஓரங்கட்டும் வகையிலும், தீர்வு குறித்து வடகிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்கிற தமிழக மாணவர்களின் கோரிக்கையை மழுங்கடிக்கும் வகையிலும், ‘வட இலங்கையில் தமிழர்களின் ஆட்சி வந்து விட்டது’, ‘இனி எந்தப்போராடங்களும் இங்கு தேவையில்லை’ என்று பரப்புரை செய்ய விரும்புகிறார்கள் இந்தக் காங்கிரசார்.
இது அவர்களின் அரசியல் வாழ்வுப்பிரச்சினை. ஆனால் ஈழத்தமிழ் மக்களுக்கோ அடிப்படை வாழ்வுரிமைப் பிரச்சினை.

ஆனாலும் சிதம்பரம் துள்ளிக்குதிப்பது போல, ‘ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் இருக்கும்  13வது திருத்தச்சட்டத்தைக் கொண்டு, இரு தேசங்களின் இறைமை என்பதன் அடிப்படையில் அதிகாரங்களைப் பகிர முடியாது’ என்பதை முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரன் அவர்களும், சட்டவாளர் சுமந்திரன் எம்.பி.அவர்களும் புரிந்து கொள்வார்கள்.

அதேவேளை, கடந்த வியாழனன்று, மாகாணசபைக்கான காணி உரிமை தொடர்பாக உயர் நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு, 13வது திருத்தச் சட்டத்தின் பலவீனமான முக்கிய பக்கங்களை சுட்டிக்காட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.

அரசியலைப்புச் சட்டத்தின் பிரகாரம், மாகாணங்களின் காணி உரிமையானது மத்திய அரசின் ஆதிக்கத்தில் இருக்கும் என்கிற நீதிமன்றத் தீர்ப்பினை பிரதம நீதிபதி மோகான் பீரீஸ் வெளியிட்ட விவகாரமே, இப்போது புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுயாட்சிக்குரிய அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது என்று அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பெருமிதமடைந்த ஓரிரு தினங்களில், இந்த நீதிமன்றத்தீர்ப்பு வெளிவந்துள்ளது.

அத்தோடு, பிரதம நீதிபதியாகவிருந்த சரத் என்.சில்வா அவர்கள், வட- கிழக்குப் பிரிப்பிற்கான தீர்ப்பினை வழங்கி, 13வது திருத்தச்சட்டத்தை பலவீனமாக்கிய முதல்படியையும் இப்போது நினைவுகூருவது பொருத்தமானது.

ஆகவே தமிழக மக்களின் ஆதரவினை இழக்கும்வகையில், தமிழ்தேசிய அரசியலின் நகர்வுகள் அமைவது சரியானதல்ல.  சர்வதேச ஆதரவு என்கிற தளத்தில், தமிழகத்தின் வகிபாகம் மிக முக்கியமானது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ithaya   இதயச்சந்திரன் | அரசியல் ஆய்வாளர்

நன்றி | வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More