செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை மீண்டும் சூடுபிடிக்கும் நாடாளுமன்றத்தெரிவுக்குழு விவகாரம் – இதயச்சந்திரன் மீண்டும் சூடுபிடிக்கும் நாடாளுமன்றத்தெரிவுக்குழு விவகாரம் – இதயச்சந்திரன்

மீண்டும் சூடுபிடிக்கும் நாடாளுமன்றத்தெரிவுக்குழு விவகாரம் – இதயச்சந்திரன் மீண்டும் சூடுபிடிக்கும் நாடாளுமன்றத்தெரிவுக்குழு விவகாரம் – இதயச்சந்திரன்

5 minutes read

சர்வதேச உறவுநிலை குறித்து அதிகமாகப்பேசப்படும் இன்றைய காலகட்டத்தில், அதனை இயக்கும் சக்திகளாக பாதுகாப்பும் பொருளாதாரமும் இருக்கின்றது என்பதனை மறந்துவிட முடியாது.
நாடுகளுக்கிடையிலான உறவுநிலை என்பதனை, நாட்டின் அதிகார உச்சநிலையில் இருப்பவர்களுக்கிடையிலான உறவாக பார்க்கும் பழக்கம் அண்மைக்காலமாக பெருகிவருவதை காண்கிறோம்.

உதாரணமாக கமலேஷ் சர்மா, விஜய் நம்பியார் போன்றோர் ஓர் அதிகாரமையத்தின் நலன்களைப் பிரதிபலிக்கும் நபர்களாக இருப்பதை, அவர்களின் செயற்பாடுகளால் பாதிப்புறும் ஈழத்தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது கமலேஷ் சர்மா மீது கனடா அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டூ, விஜய் நம்பியார் மீது யுத்தம் முடிவுற்றதும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான விமர்சனங்கள் என்பன, சர்வதேச உறவில் சிறிதளவு அதிர்வினையே ஏற்படுத்தும்.

ஐ.நா. சபை மீதான உலக மனிதாபிமானச் சங்கங்களின் கடும் கண்டனங்களும், சார்ல்ஸ் பெற்றியின் அறிக்கையும், எதனை மாற்றியுள்ளது?. தவறு நடந்துள்ளது எனக்கூறி பாண் கி மூனும் நழுவிவிட்டார். இருப்பினும், சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற நவிபிள்ளை அம்மையாரின் கோரிக்கைகளால், இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா.வின் நிலைப்பாடு சரி என்று ஆகிவிடாது.

முள்ளிவாய்க்கால் இன அழிவிற்குப் பின், இலங்கை குறித்து அக்கறை கொள்ளும் நாடுகள், அமைப்புக்கள், அவற்றிடையே உள்ள உறவுகள் குறித்து, தெளிவான புரிதல் ஒன்று எமக்கு அவசியம். ஓட்டுப்போடும் அரசியல் உறவுக்கு அப்பால் உள்ள வெளியில் என்ன நடைபெறுகிறது என்பதை வாக்கினைப் பெற்றவர்கள் மக்களுக்குச் சொல்வதில்லை.

ஆதலால், அதனை மக்களுக்கு புரியவைக்க வேண்டிய தார்மீகக் கடமை ஊடகங்களுக்கு உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். மந்திரத்தால் மாங்காய் விழுத்துவோரின்
கைகளைப் பிடித்து இழுக்கிறார்கள் என்று சகட்டுமேனிக்குத் திட்டக்கூடாது.

முதலில்,  ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப்பிரச்சினை, அதாவது இலங்கையின் தேசிய இனமுரண்பாடு, பிராந்திய-சர்வதேச உறவுநிலையில் எத்தகைய தாக்கங்களை உருவாக்குகின்றது? என்பதோடு,  மறுதலையாக சர்வதேச உறவுநிலை தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன? என்பதையும் ஆழமாகப் பார்க்க வேண்டும்.

‘எல்லா உறவுகளும் சார்புநிலை கொண்டவை’ என்கிற அறிவியல் உண்மையை நிராகரிக்காமல் பார்த்தால், ஒரு இயங்குதளத்தின் உள்ளீட்டினைப் புரிந்து கொள்வது இலகுவானதாகவிருக்கும்.  ஒரு நாட்டின் தேசியநலன் என்பது தனித்துவமானது  என்கிறவகையில் நோக்கும் ஒற்றைப்பரிமாணப் பார்வை , முரண்நிலையின் உட்பரிமாணங்களை மறைத்துவிடும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில், அதன் அதிகாரமைய வெளியுறவுச் சிந்தனை, உள்ளுறவுச்சிந்தனை என்பன, பேரினவாத அரசியலைத் தக்கவைப்பதன் அடிப்படையில் இருந்து கட்டமைக்கப்படுவதனை  காணலாம்.

நாட்டின் அரச இயந்திரத்தில் நாடாளுமன்றம், முப்படை, திறைசேரி, என்பவற்றோடு பௌத்த அதியுயர் பீடங்களும் தீர்மானகரமான சக்தியாக இருக்கிறது. அத்தோடு, நாட்டின் இறைமை என்பது நாடாளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் மற்றும் பௌத்த சங்கங்களிடமும் அதிகளவில் குவிந்திருக்கிறது. இருப்பினும் தேர்தல் காலத்தில் மட்டுமே, அந்த இறைமை மக்களிடம் இருப்பதுபோல் காட்டப்படுகிறது.

ஆகவே, நாட்டின் இறைமையைப் பாதிக்காமல் , இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவேண்டுமென ஆட்சியாளர்கள் அடிக்கடி சொல்லும் கூற்றின் அர்த்தங்கள் புரியப்பட வேண்டுமாயின், இந்த இறைமை யார் கையில் இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இந்நாட்டின் அரசியலமைப்புக்குள் எந்தவிதமான தீர்வுகளும் சாத்தியமில்லை என்கிற முடிவினை நோக்கியே அதற்கான பதில் எம்மை இட்டுச் செல்லும்.

இப்போது, வடமாகாணசபைத்தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்ட தீர்வு குறித்தும் , அதில் கையாளப்பட்ட தேசம், இறைமை என்கிற பதங்கள் குறித்தும் பார்க்க வேண்டும்.
‘பகிரப்பட்ட இறைமை என்பதன் அடிப்படையில் தீர்வு’ என்று  கூட்டமைப்பு குறிப்பிடும்போது, வடகிழக்கில் வாழும் தனித்துவமான தமிழ்தேசிய இனத்திற்கு, இறைமை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம். அதனை முதலில் சிங்களதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக,  ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்ளும், அதன் மத்திய அரசின் பூரண இறைமைக்குள்தான் இந்த மாகாணசபைகள் இயங்குகின்றன. ஆகவே 13 வது திருத்த சட்ட மூலத்தால் அமைக்கப்பட்ட மாகாணசபைகளும் நிறைவேற்று அதிகாரமுடைய அதிபரின் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான் என்கிற ஓரின இறைமைக் கோட்பாட்டினை மறைத்தல் தவறானது.

ஆகவே மாகாணசபை முறைமை என்பது, தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட இறைமைப்பகிர்வு நோக்கி இம்மியளவும் நகராது. அப்படி நகருமென்று அடம்பிடிப்பவர்கள், ஒன்றில் இதனைப் புரிந்துகொள்ள இயலாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது இவையனைத்தையும் தெரிந்து வைத்திருந்து, அதனை தமது நலனிற்காக பயன்படுத்தும் வித்தகர்களாக இருக்க வேண்டும்.

அலரிமாளிகையில் வடமாகாண முதலமைச்சர் சத்தியப்பிரமாணம் செய்த வேளையில், கொழும்பிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்கள் அரசிற்கு ஒரு தெளிவான செய்தியைக் கூறியிருந்தார்.
அதாவது ’13வது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக (?) நடைமுறைப்படுத்தி, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’ என்பதுதான் குர்ஷித் ஊடாக இந்திய நடுவண் அரசு இலங்கை அரசிற்கு சொன்ன செய்தி.

இங்கு இந்தியா கூறமுற்படும் அதிகாரப்பகிர்வு குறித்து நாம் அதிகம் அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இது குறித்துப் பேச, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் கூட்டமைப்பு வர வேண்டும் என்கிற நிபந்தனையை குர்சித்திடமே சனாதிபதி மகிந்த இராஜபக்ச கூறிவிட்டார்.

அண்மைக்காலமாக தன்னைச் சந்திக்க வரும் இந்திய மற்றும் மேற்குலக இராஜதந்திரிகள் ஊடாக, நாடாளுமன்றத்தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு அழுத்தம் கொடுக்க,சனாதிபதியும் ஜி.எல்.பீரிசும் பலத்த முயற்சினை மேற்கொண்ட விவகாரத்தை கவனிக்க வேண்டும்.

சர்வதேச அழுத்தங்களை முதலில் உள்வாங்கி, அதனை ஏற்றுக்கொள்வதுபோல் முதலில் தேர்தலை நடாத்தி, பின்னர் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தீர்வுப்பொறிக்குள் இழுத்து, மார்ச் மாதம்வரை காலத்தை இழுத்தடிப்பதுதான் , சர்வதேச உறவுநிலையில் இலங்கைஅரசு பிரயோகிக்கும் இராஜதந்திர நகர்வாகும்.
தேர்தல், வடமாகாணசபை என்பதெல்லாம் சிறிய மீன். இதைப்போட்டுத்தான், சர்வதேச அங்கீகாரம் கொண்ட பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பதவியை மகிந்த இராஜபக்ச பெறப்போகின்றார்.

இந்தியாவைப்பொறுத்தவரை, நீண்டகாலமாக இழுபறி நிலையிலிருந்த சம்பூர் அனல்மின்நிலைய விவகாரமும், வடமாகாணசபை கூட்டமைப்பின் கரங்களில் சென்ற கையோடு முடிவிற்கு வந்துள்ளது. அங்கிருந்து துரத்தப்பட்ட மக்களுக்குத்தான் இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அதிகாரநலன் போட்டியில் நசியுண்டுபோன சம்பூர்மக்களின் அவலநிலை குறித்து இனி வெகுசன அமைப்புக்களே பேசவேண்டும்.

‘காணி நிலம் வேண்டும் காவல்துறை வேண்டும்..பராசக்தி’ என்று இந்திய அரசிடம் நச்சரித்தாலும், அரசோடு பேசுங்கள் என்றுதான் குர்ஷித்தும் சொல்வார். நல்லிணக்கத்தை வெளிப்படுத்த யாழ் நகரில் சிங்கக்கொடியைபிடித்தாலும், அலரிமாளிகையில் பதிவிப்பிரமாணம் எடுத்தாலும், தமிழ் தேசத்தின் இறைமையை, ஒற்றையாட்சியில் உறுதியாகவிருக்கும் சிங்களதேசம் ஏற்றுக்கொள்ளாது.

அதற்கான எந்த சமிக்ஞையும் அரசதரப்பிலிருந்து வருவதுபோல் தெரியவில்லை. மாறாக, பௌத்த சிங்களப்பேரினவாத கருத்தியலில் ஊறித்திளைத்துள்ளவர்களை  பெரும்பான்மையாகக்கொண்ட தெரிவுக்குழுவிற்குள் வந்து தீர்வினைத் தேடுங்கள் என்கிறார் இலங்கை சனாதிபதி.

சிங்கக்கொடி….அலரிமாளிகை…வரிசையில், இனிமேல் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் இணைந்துகொள்ளும் போல் தெரிகிறது. அரசோடு இணங்கிச் சென்றே , அதிகாரங்களைப்பெறலாம் என்று முடிவெடுத்துவிட்ட கூட்டமைப்பின் தலைமைப்பீடம், இனிமேல் இன அழிப்பிற்கான சர்வதேச சுயாதீன விசாரணை, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு போன்ற விவகாரங்கள் குறித்து பேசாது. இவை குறித்துப் பேசினால் அரசிற்குப் பிடிக்காது என்பதால் பேசாது.

இப்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம், பகிரப்பட்ட இறைமை பற்றி பேச முடியாது. அவ்வாறில்லாமல் அதிகாரப்பகிர்வு குறித்து பேசுவதானது அதிகாரப்பிச்சையாகவே கருதப்படும். பிச்சை கொடுப்பவரின் மனநிலையைப் பொறுத்து சில விட்டுக்கொடுப்புக்கள் இருக்கும். அதற்கு ‘ அதிகாரம்’ என்கிற பெயர் சூட்டி சுயதிருப்தியடையலாம்.

விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்ட தேசம், சுயநிர்ணயம், இறைமை என்பன குறித்து, இலங்கை விவகாரத்தில் கரிசனை கொண்டுள்ள சர்வதேச நாடுகளின் நிர்வாகங்களுக்கு பெரியளவில் அக்கறை கிடையாது. மக்களிடமிருந்து வாக்குப்பெறுவதற்காக உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகளாக இவை இருந்துவிட்டுப் போகட்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். அனந்தியின் அரசியல் பிரவேசம்,  சகல தரப்பாலும் விரும்பப்பட்ட விடயமல்ல. இருப்பினும் வாக்குப்பலத்தினை அதிகரிக்கும் ஊக்கியாக மட்டுமே அவர் பயன்படுத்தப்பட்டார் என்பதில் உண்மையுண்டு.

ஏனெனில் சிங்களத்தோடு இணக்கப்பாட்டு அரசியலைச் செய்யவேண்டுமாயின், மேற்குறிப்பிடப்பட்ட சொல்லாடல்களும் நபர்களும் , தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டு அரங்கிலிருந்து முதலில் அந்நியப்படுத்தப்பட வேண்டும். அதனை சம்பந்தனும், சுமந்திரனும், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களும் கூட்டாக இணைந்து , மிகக்கட்சிதமாக நகர்த்துகின்றார்கள் போலிருக்கிறது.

சர்வதேசம் என்று அழைக்கப்படும் நாடுகளைப் பொறுத்தமட்டில், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைக் கையாளுதல் என்பது, அந்த அரசுடனான இராஜதந்திர உறவினை சீர்குலைக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதனை அடிப்படையாகக் கொண்டது.

சிங்கள தேசத்திற்குப் பிடிக்காத விடயங்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதை, தமிழ் தேசியக்கூட்டமைப்பு தவிர்க்க வேண்டுமென்பதிலும் இவர்கள் மிகுந்த அக்கறையாக இருக்கின்றார்கள். அதேவேளை கூட்டமைப்பின் அரசியல் தளம் பலவீனமடைந்து, வெகுஜன மக்களின் போராட்டங்கள் எழுச்சி பெறக்கூடாதென்பதிலும் கவனமாக இருக்கின்றார்கள்.

இலங்கை அரசின் மீது மட்டுப்படுத்தப்பட்ட அழுத்தங்களைப் பிரயோகிக்கும் கருவியாகவே, தமிழ் மக்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டம் கையாளப்படுகிறது.
இலங்கை அரசிற்கும் இந்த வல்லரசாளர்களின் பிராந்திய நலன்சார்ந்த  மூலோபாய நகர்வுகள் புரியும்.
ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் வியூகங்களில் தொடர் பின்னடைவுகளை எதிர்கொள்வதால், சிங்கள தேசத்தோடு இணங்கிப்போகச் சொல்லும் அழுத்தங்களும் அதிகரிக்கின்றன.

ஆகவே, இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் வல்லரசின் நலன்கள் நிறைவேறும்வரை, அழிவுகள் தொடரும். இதனை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது குறித்து மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நாடாளுமன்றத்தெரிவுக்குழுவின் ஊடாக எந்தத்தீர்வும் வரப்போவதில்லை என்கிற பழைய அனுபவங்களையும் இப்போது நினைவிற்கொள்வது நல்லது.

ithaya   இதயச்சந்திரன் | அரசியல் ஆய்வாளர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More