1950ம் ஆண்டுகளில் மன்னார் மாவட்டத்தின் பிரதான தேவாலயமாக விளங்கி புனித மரியாள் ஆலய பங்குத்தந்தையாக கடமையாற்றிய வண பிதா S பீற்றர் OMI அவர்கள், மக்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக, சற்று மேடான பகுதியாக விளங்கிய பனங்கட்டுக்கொட்டு பகுதியை தெரிந்தெடுத்து அதில் ஓர் அழகிய பிரமாண்டமான தேவாலயத்தை அமைத்துக் கொடுத்தார்.
இதற்கு அப்பகுதியில் வாழும் மீனவ குடும்பங்கள், சிறு வர்த்தகம் செய்வோர், யாழ் கொழும்பு கத்தோலிக்கர்கள், வெளிநாட்டு நலன் விரும்பிகள், இந்திய வர்த்தக கத்தோலிக்கர்கள் போன்றோர் உதவி புரிந்தனர்.
வண பிதா S. பீற்றரின் அயராத முயற்சியினாலும், திடமான நம்பிக்கையினாலும் மூன்று ஆண்டுகளில் வேத சாட்சிகளின் சத்தியத்தை எடுத்துக்காட்டும் முகமாக 800 பேரை உள்ளடக்க கூடியதாக குருசு வடிவிலான கம்பீரமான ஒரு தேவாலயம் 3-10-1953 அமைக்கப்பட்டது.
1953களில் இத்தேவாலயம் வடமாகாணத்தின் யாழ் மறை ஆயரினால் அபிசேகம் செய்யப்பட்டது இதன் முதல் பங்குத்தந்தையாக வண பிதா S பீற்றர் OMI கடமையை பொறுப்பேற்றார். பழைய ஏடுகளின் படி மன்னார் மாவட்டத்தில் 85% கத்தோலிக்கர் வாழ்ந்ததாகவும் இப்பங்கில் 317 குடும்பங்கள் இருந்ததாகவும் 6 பங்கு கோவில்கள் இருந்ததாகவும் சரித்திரங்கள் கூறுகின்றது.
தற்பொழுது 2013ல் மன்னார் மறைமாவட்டம், 1981ல் தொடக்கம் புதிய மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டு அதன் முதல் ஆயராக மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களும் , இரண்டாவது ஆயராக மேதகு இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களும் பொறுப்பேற்றதுடன் , இவர்களின் அயராத முயற்சியினாலும் கத்தோலிக்கர்களின் ஆன்மீக தாகத்தினாலும் 40 க்கும் மேற்பட்ட பங்கு ஆலயங்கள் வவுனியா, மன்னார் நிர்வாக பிரிவின் கீழ் மன்னார் மறைமாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.
தற்பொழுது புனித செபஸ்தியார் பேராலயத்தில் 2100 குடும்பங்களிற்கு மேல் பங்காளிகளாக உள்ளனர். அக்காலத்தில் பரவிய வாந்தி பேதி தொற்று நோய்களின் போதும், வறட்சியின் போதும், சூறாவளியின் போதும் அக்காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் புனித செபஸ்தியாரின் திருச்சுரூபத்தை பெரும் வீதியூடாக எடுத்துச் சென்றதாகவும் அதன் பின் நோய்கள், ஆபத்துக்கள் , விபத்துக்கள் குறைந்ததாகவும் சரித்திரம் கூறுகின்றது.
மேலும் ஆண்டில் ஒரு தடவை சகல மக்களும் புனித செபஸ்தியாரின் சம பந்தி போசனத்தில பங்கு பற்றுவதற்காக சாதி ,சமயம் வேற்றுமைகளை மறந்து பால் கஞ்சி காய்ச்சி சகலரும் உண்டதாகவும் , புனித செபஸ்தியார் பேராலயத்தில் இருக்கும் 14 சிலுவைப்பாதை ஸ்தலங்களின் கண்ணாடி கூடுகளின் மரச்சட்டங்கள் மன்னார் புனித மரியாள் ஆலய வழவில் உள்ள மகோகனி, வேம்பு போன்ற மரங்களில் இருந்து அமைக்கப்பட்டதாகவும் வண பிதா S. பீற்றரின் காலத்தில் கடமையற்றிய திரு ஆரோக்கியம் உபதேசியாரின் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 27.10.2013ல் மன்னார் வேத சாட்சிகளின் மைந்தராகிய தற்போதைய கத்தோலிக்க மக்கள் வெகு சிறப்பாக பக்தி பரவசத்துடன் தமது மூதாதையரின் இரத்த மண்ணில் கம்பீரமாக எழுந்திருக்கும் புனித செபஸ்தியார் பேராலயத்தின் 60ம் ஆண்டு வைர விழாவை கொண்டாடினர்.
முன்னைய சரித்திரங்கள் ஏடுகளில் எழுதப்பட்டு இனி வரப்போகும் இளம் சமுதாயத்தினருக்கு பகிரப்படல் வேண்டும் எனும் நல்நோக்குடன் இக் கட்டுரையை எழுதுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மன்னாரிலிருந்து சின்கிளேயர் பீற்றர்
Mr.Peter Sinclair | Freelance Project Consultant & Trainer,
26, Hospital Rd, Mannar. Srilanka.
M.No +094 – (0) 77-2131-652 | E-Mail ; petsinclair@gmail.com