பொது நலவாய மாநாடு கலவையான உணர்வுகளை இரு தரப்பினரிடையேயும் விட்டுச் சென்றுள்ளது. உண்மையில் இலங்கையில் இரண்டு தரப்புகள் இன அடிப்படைப் பிளவுடன் செயற்படத் தொடங்கிவிட்டன என்பதே உண்மை. அதனை உலகிற்கு தெளிவாக வெளிக் காட்டிய செயற்பாடாகவே பொதுநலவாய மாநாடு அமைந்திருந்தது.
தமிழ்த் தரப்பானது ஒட்டுமொத்த மாகவே இம் மாநாட்டை புறக்கணித்து விட்டது. அத்துடன் சர்வதேசத் தலைவர் ஒருவரை வடக்கிற்கு வரவழைத்து அங்கேயே அவரைச் சந்தித்துள்ளது. பொது நலவாயப் புறக்கணிப்புடன் உள்நாட்டில் தமிழ்த் தரப்பின் செயற் பாடானது ஓர் ஸ்திரமான நிலையை நோக்கி நகர்வதாகவே தெரிகின்றது. அதனைச் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டு வருவதையும் உணர முடிகின்றது. ஏனெனில் எந்த ஒரு சர்வதேச நாடுமே பொதுநலவாயத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தரப்பின் மீது அழுத்தம் எதனையும் பிரயோகிக்கவில்லை. அவ்வாறு அழுத்தம் தரக் கூடிய நாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர் தரப்புக்களின் செயற்பாடுகளும் அவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதை தவிர்ந்து நின்றன என்றதும் ஒரு காரணம் ஆகும்.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் முன் எழுந்து நிற்கும் அடுத்த நகர்வு யாதெனில் 2014ம் ஆண்டில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரே! அக் கூட்டத் தொடரில் நிச்சயமாக இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவே தெரிகின்றது.
ஏனெனில் பிரித்தானிய பிரதமர் பொது நலவாயத்தில் வைத்தே இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை யொன்று தேவைப் படலாம் என கோரியிருந்தார்.
அடுத்து வரும் ஐந்து மாதங்க ளுக்குள் இலங்கை அரசானது நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியி ருந்தார். பல காரணிகளால் இலங்கை தன்னிச்சையான பக்கச்சார்பற்ற நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணையொன்றை உள்ளக வளங்களைக் கொண்டு எப்போதுமே மேற்கொள்ள முடியாது. எனவே சர்வதேசத்தால் சர்வதேச விசாரணைக்கான முன்மொழிவொன்றையோ அல்லது அதற்கு முற்பட்ட நிலையொன்றையோ மனித உரிமைப்பேரவையில் முன்மொழியப்படும் என்றே எதிர்பார்க்க முடியும்.
எனவே அவ்வாறு முன்மொழி யப்படும் போது அம் முன்மொழிவைப் பெரும் எடுப்பில் வெற்றியடையச் செய் வதற்கான முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளியுறவுக் கொள்கை அமைய வேண்டியது அவசியம். இங்கு நாம் கருத்திற் கொள்ள வேண்டிய விடயம் யாதெனில் யுத்தம் நிறைவுற்ற 2009 மே மாதத்தைத் தொடர்ந்து அதே மாதம் 26 மற்றும் 27ம் திகதிகளில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானத்தை இலங்கை வெற்றி கொண்டது.
அத் தீர்மானத்தை சுவிஸ் -ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்தது. அன்று கியூபாவின் பிரநிதியின் தந்தி ரோபாய நகர்வுகள் இலங்கைக்கு பெரும் ஆதரவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் கியூபா புதிதாக மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளதால் மீண்டும் இலங்கைக்குப் புத்துணர்வு ஏற்படுத்தும் அங்கத்துவமாக அது அமைந்துள்ளது. இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறையாக, கட்டமைக்கப்பட்ட வெளியுறவுத் தந்திரோபாய நகர்வு தமிழர்களின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் நகர்வாக அமையப் போகின்றது. உண்மையில் மனித உரிமைப் பேரவையின் அனைத்து அங்கத்துவ நாடுகளையும் நோக்கிப் பயணிக்க வேண்டிய தேவை த.தே.கூ முன் இல்லை. சுயமாகவே இலங்கையின் நடவடிக்கைகளுக்கு எதிராக சுமார் 23 நாடுகள் கூட்டாகியுள்ளன. 13 நாடுகள் இலங்கைக்கு ஆதாரவாகவும், இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை எதிர்ப்பவையாகவும் உள்ளன. எஞ்சிய 11 நாடுகளின் நிலையே இங்கு தீர்மானிக்கப்பட வேண்டும்.
இவற்றுள் அப் 11 நாடுகளின் முடிவுகளில் தாக்கம் செலுத்தக் கூடிய மூன்று நாடுகள் உள்ளன. அவை முறையே இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய மூன்றுமே. இம் மூன்று நாடுகளையும் நோக்கித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராசதந்திரத் தந்திரோபாய நகர்வுகள் இருக்க வேண்டும். இங்கு இந்தியாவின் நிலைப்பாட்டில் என்றுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தாக்கம் செலுத்த முடியாது. இந்திய நிலைப்பாட்டில் தாக்கம் செலுத்தும் ஒரே காரணி தமிழ் நாடாகவே இருக்கின்றது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர்வானது தமிழ் நாட்டிலுள்ள தமிழ் ஆதரவுச் சக்திகளை நோக்கியதாகவே இருக்க வேண்டும். அவ் ஆதரவுச் சக்திகளுடன் வெளிப்படையாகவா? அல்லது உட்கிடையான நிழல் உறவினையா? பேண வேண்டும் என்பதை த.தே.கூ தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வெளிப்படையான உறவுகளை தமிழ்நாட்டுடன் வைத்திருப்பது தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சில உறுதியான சாதிய வெளிப்பாடு கொண்ட வலுக்கொண்ட தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படப் போவதில்லை. அத்துடன் யாழ்ப்பாண மீனவர் சமூகம் எதிர்கொள்ளும் இந்திய மீன்பிடி அச்சுறுத்தல்களும் வெளிப்படையான தென்னிந்திய உறவுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதாலேயே உட்கிடையான, நிழல் உறவு தொடர்பாக இக் கட்டுரையில் குறிப்பிட வேண்டியுள்ளது.
அடுத்து த.தே.கூ நெருங்கக் கூடிய நாடுகளில் உணர்வு பூர்வமாக அண்மையில் இருப்பது தென் ஆபிரிக்கா ஆகும். தென் ஆபிரிக்கா மிக அண்மையில் இலங்கை அரசிற்கும் தமிழ்த் தரப்பிற்கும் இடையே நடு நிலையாளர்களாக கலந்து கொள்ளும் விருப்பை அறிவித்துள்ளது. எனவே இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கூட்டமைப்பு தனது இராசதந்திர உறவுக்கரத்தை தென்னாபிரிக்காவை நோக்கி நீட்டிக் கொள்வதன் ஊடாக சர்வதேச விசாரணையின் முக்கியத்துவத்தை மனித உரிமைச் சபையில் அணிசேராதிருக்கும் 11 நாடுகளுக்கும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு உணர்த்தலாம். எனவே காலம் கனியும் போது த.தே.கூவின் சர்வதேச நகர்வின் காத்திரத் தன்மையால் ஜெனிவாவின் ஊடாகச் சர்வதேச விசாரணையை தமிழத் தேசியக் கூட்டமைப்பு சாத்தியமாக்கலாம்.
மாயன் | இலங்கையிலிருந்து