Wednesday, April 17, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை நேர்காணல் | தமிழ்த்துறை பேராசிரியர் கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் | ஆவூரான் நேர்காணல் | தமிழ்த்துறை பேராசிரியர் கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் | ஆவூரான்

நேர்காணல் | தமிழ்த்துறை பேராசிரியர் கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் | ஆவூரான் நேர்காணல் | தமிழ்த்துறை பேராசிரியர் கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் | ஆவூரான்

7 minutes read

கலைமாமணி  முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் பட்டிமன்ற நடுவர், நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர், நடிகர், சினிமாவுக்குப் போகலாம் வாங்க, இலக்கியச் சித்திரங்களும் சினிமாவும், கல்லூரி அதிசயங்கள், வாழ்வியல் நகைச்சுவை போன்ற நூல்களையும் எழுதியவர்  இவர் ஆஸ்திரேலியா ஈழத்தமிழ் சங்கத்தின் முத்தமிழ் விழாவுக்கு சிறப்பு பேச்சாளராக வருகை தந்தவரை எமது  தமிழ் அவுஸ்திரேலியன் சஞ்சிகைக்காக வழங்கிய நேர்காணலை  வணக்கம்LONDON இணையத்தில் தருகின்றோம்.

 

நீங்கள் நாளாந்தம் செய்யும் தமிழ் பணிக்கு எப்படி உங்களை தயார் செய்து கொள்கிறீர்கள் ? 

நான்  எப்போதும் தயார் நிலையிலேயே இருப்பேன் தமிழ் நாட்டில் ஒரு வழக்கம் சொல்வார்கள் படித்து முடித்த ஆசிரியரிடம் மாணவனை சேர்ப்பதை விடவும் படித்துக்கொண்டு இருக்கின்ற ஆசிரியரிடம் கொண்டு போய் சேர்ப்பது மிகவும் நல்லது என்று அடுப்பில் அணல்லாக தணலாக இருந்தால் எப்போதும் சமையல் செய்லாம் என்று  நான் எப்போதும் படித்துக் கொண்டும் படிப்பித்துக் கொண்டும் இருப்பதால் தான் எபோதும் தயார் நிலையில் இருக்கிறேன். அதோடு தொலைக்காட்சியிலும், மேடைப் பேச்சிலையும், பட்டிமன்றப் பேச்சிலையும் நிகழ்ச்சிகளை செய்து கொண்டும் இருக்கிறேன்.

 

உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை எப்படி நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள் அல்லது யார் அறியத் தருகிறார்கள்?

கவிப்பேரசு ஒருமுறை சொன்னார்கள் நான் என்னையே பிரசவிக்கிறேன் என்று இது கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறதல்லவா, தாய் தான் எம்மை பிரசவிப்பவள் ஆனால் இங்கே நாம் எம்மையே தினம் தினம்  பிரசவிக்கிறோம். ஒரு கதையை எழுதிக் காட்டி அவர் அதைப் பார்த்து நன்றாக இருக்கிறதே  நீங்கள் தொடர்ந்து கதை எழுதலாமே என்று சொல்கின்ற போது எம்முள்ள எழுத்தாளான் எமக்குத் தெரிகிறான் இதே போல் கவிதை எழுதும் போதும், நான் பேசுகின்ற போதும் என்னை ஊக்குவித்த எனது ஊர் மக்கள், முக்கியமாக எனது நண்பர்கள் எனது ஆசான்கள் என்னுள் இருந்த சின்னச்சின்ன விசயங்களை ஊக்கப்படுத்தி சொல்லச் சொல்ல நான் என்னையே பட்டை தீட்டிக் கொண்டேன்.

 

நீங்கள் எப்போதாவது நீனைத்ததுண்டா நீங்கள் செய்து கொண்டிருக்கும் தமிழ்ப்பணி சரியான பாதையில் போகவில்லை இதை மாற்றவேண்டும் என்று?

இல்லை நான் அப்படி நினைத்தில்லை ஏன் என்று கேட்டால் , முன்பு ஒரு முறை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் இப்படிகேட்டது. பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளன், பட்டிமன்றப் பேச்சாளன் நடிகன் இதில் நீங்கள் யார் என்று கேட்டார்கள் நான் சொன்னேன் நான் எப்போதும் பேராசிரியன், நான் நடித்தாலும், பேசினாலும் நகைச்சுவையாளனாக இருந்தாலும் எல்லாத்துக்கும் என்னை அடையாளப் படுத்தி நிற்பது பேராசிரியர் தான்  நான் தொலைக்காட்சியில் நேர்முக வர்ணனை செய்கின்ற போது வெறுமனையே சொல்லிக் கொண்டு போகாமல் கந்த புராணத்தில் இருந்தோ அல்லது பெரிய புராணத்தில் இருந்தோ தோத்திரங்களையும் தேவாரங்களையும் பாடி மக்களுக்கு எடுத்துச் செல்வேன் இதனை கேட்கின்ற மக்கள் நேரடியாக இந்த நிகழ்ச்சியில் நிற்பது போன்று உணர்வதாக கூறியிருக்கிறார்கள். அதனால் எனது பணி சரியான பாதையில் தான் போகிறது என்று கருதுகிறேன்.

 

இஸ்லாம் மதத்தவருக்கு குர்றான், கிறிஸ்தவ மதத்தவருக்கு பைபிள், அதுபோல் இந்து மதத்தைப் பின் பற்றும் இந்த நாட்டில் பிறந்த பிள்ளைக்கு என்ன நூலை என்று கேட்டால் ….

இந்து மதம் என்றால் தனியான ஒரு மதமாகப் பார்க்காமல்  ஆறு மதங்களின்  கூட்டாகப் பார்க்க வேண்டும், சிவபெருமானை வழிபடுகின்ற  சைவம், திருமாலை வழிபடுகின்ற, வைணவம், சக்தியை வழிபடுகின்ற சாத்தம் முருகப் பெருமானை வழிபடுகின்ற கெளமாரம், கணபதியை வழிபடுகின்ற காணாபதியம். அதோடு நெருப்பு, காற்று, பூமி, சூரியன், ஆகாயம், என்று வழிபடுகின்றவர்களும் இந்துக்களாகத்தான் இருக்கிறார்கள். முருகப்பெருமானை வழிபடுகிறவர்கள் கந்தபுராணத்தையும், சிவனை வழிபடுகிறவர்கள். பெரிய புராணத்தையும், சக்தியை வழிபடுகிறவர்கள் அபிராமி அந்தாதியும் படிக்கலாம். இப்படி ஒவ்வொரு வணக்கத்துக்கும் இந்து மதம் இடம் கொடுக்கிறது  ஆன்மீகப் பாதையில் செல்கிறவர்களுக்கு ஆன்மீக நூல்கள் இருக்கிறது  இந்து மதம் பன்முகக் கடவுள்களை கொண்டது இதனால் இந்து மதத்திற்கு என்று தனியான ஒரு நூல் இல்லை.

 

சிலப்பதிகாரம், கம்பராமாயணம்,தேவாரம்,திருவாசகம் போன்றவற்றை புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பிள்ளைகளுக்கு இலகுவாக கற்பிக்க என்ன வழி?

இதற்கு இலகுவான வழி எது என்று கேட்டால் திருமுருக கிருபானந்தவாரியார் போன்றோர்கள் எழுதிய கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருவாசகம், போன்றவற்றை வேண்டி நாம் பிள்ளைகளுக்கு முன் உரத்து வாசித்துக் காட்ட வேண்டும் அல்லது அவர்கள் வாசிக்க வைத்து அதற்கான விளக்கத்தை நாம் விளங்கப்படுத்தவேண்டும் இது ஒரு நாளுக்கு ஒரு தடவையாக தொடர்ந்து செய்து வரவேண்டும்.

எனது தந்தையார் அப்படித்தான் என்னை தயார்ப் படுத்தினார் நான் பேசவும் நகைச்சுவையாகப் பேசவும் எனது உரத்து வாசிக்கும் பழக்கம் தான் காரணமாச்சுது, சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்று சும்மாவா சொன்னார்கள் அதனால் வாசிப்பை பிள்ளைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

 

தமிழ் அழிகிறதா வளர்கிறதா உங்கள் பார்வையில் ?

இக் கேள்வி ஒவ்வொரு காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது கிபி 3 நூற்றாண்டில் இருந்து கிபி 7ஆம் நூற்றாண்டு வரையும் கலப்பர் இனம் எம்மை ஆண்டதாக வரலாறு உண்டு தமிழ் நாட்டில் கலப்பர்  ஆட்சியை இருண்ட காலம் என்று சில பேரும் இல்லை அதுவும் நல்ல காலம் தான் என்று இன்னும் சில பேரும் சொல்வார்கள் அந்த முன்னூறு ஆண்டு காலமும் தமிழ் நாட்டை தமிழ் அரசர்கள் ஆழவில்லை ஆனாலும் தமிழ் அழியாமல் தாக்குப் பிடித்து கொண்டுதான் இருந்திருக்கிறது.

இப்போது கூட வேற்று மொழியின் வரவும் விஞ்ஞான உபகரணங்களின் அதீத வளர்ச்சியும் தமிழின் அடிப்படையில் தமிழ் தேய்கிறதோ என்ற தோற்றப்பாடு தெரிகிறது ஆனால் தமிழின் அறிவியல் பாய்ச்சலின் வேகத்தில் சில குறை பாடுகள் இருக்கலாம். இருந்த போதும் நான் கூட முன்பு மேடையில் பேசியது, பின்பு  வானொலி என்றும்  T.V   என்றும் இருந்தது  இன்று  இணையமாகி  பல்லாயிரமாக பெருகிக் கொண்டிருக்கும்  காலத்தில் தமிழ் வளர்ச்சி கண்டு  வருகின்றது என்று தான்  சொல்ல வேண்டும்.

 

வெளிநாட்டுப்  பயணங்களால்  நீங்கள்  கற்றுக்  கொள்வதையும்  பெற் றுக் கொள்வதிலும் உள்ள அனுபவங்கள்?

2000 ஆம் ஆண்டில் இருந்து தொடர்கிறேன். மதுரையில் சோளவந்தான் என்னும் கிராமத்தில்  இருந்து ஆரம்பக் கல்வியை அங்கே கற்று அப்படியே தொடர்ந்து உயர்ந்து இன்று பேராசிரியராக நான் பயணப்படுகின்ற போது இன்னொரு மொழி தெரிந்திருக்க வேண்டும்  என்ற  ஆதங்கம் ஒவ்வொரு பயணத்திலும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது . ஒவ்வொரு பயணமும் எனக்கு அனுபவத்தையும் புதிய புதிய செய்திகளையும் சேகரிப்பேன். இவைகளை எழுதி நான் தொலைக் காட்சியில்  பேசுவேன்.  புத்தகமாகக் கூட  எழுதியிருக்கிறேன்.

அண்மையில் நான் போய் வந்த   வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி ஒருவருக்குச் சொன்னபோது   அவர்  அந்த நாட்டுக்குப்  போய்  வந்தது போன்று இருக்கின்றது  என்று சொன்னார்,

இப்படி வெளிநாட்டுப் பயணத்தை பயணப் பதிவுகளாகவும்  நான் எழுதி வைத்திருக்கிறேன். மணியன் அவர்கள் முன்பு பயணக் கட்டுரை என்று மிகத் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார்.

 

நீங்கள் வாசித்த  புத்தகத்தில் இன்னமும் நீங்கள் பிரமிப்பாக நினைத்துக் கொண்டிருக்கும் படைப்பு என்று கேட்டால்?

கல்கியின் பொன்னியின் செல்வன் , இராமாயாணம், இதிகாசங்கள்  எல்லாமே பிரமிப்புக்கள் தான். அதேபோல் திருக்குறள், திருக்குறளை எந்த வயதிலும் படிக்கலாம், எந்தக் காலத்திலும் படிக்கலாம், அதுவும் பிரமிப்புத்தானே.

உ.வே சாமிநாதனுடைய  என் சரித்திரம் போன்ற நாவல்களும் ஒவ்வொரு முறையும் படிக்கின்ற போது  நாம் முதலில் படிக்காமல் விட்டு  விட்டோமே  என்று  சொல்லும் அளவுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

நான் மேலே சொன்ன புத்தகங்களைப் போலே பொன்னியின் செல்வன் எனக்கு  இன்றும் பிரமிப்பாக இன்னும்  இருக்கிறது. நான் தினமும் வாசிப்பேன்,

 

திருக்குறள்  1330   குறள்களையும்  திருவள்ளுவர்   வாழ்ந்து அனுபவித்து எழுதினாரா? அல்லது கற்பனையாக சித்தரித்தாரா?

கற்பனை என்று சொல்ல முடியாது. இது திருவள்ளுவரின் அனுபவம். 2000  வருடங்களுக்கு  முன்னால்  நடந்த குறிப்பு   இப்படித்தான்  வாழ வேண்டும் . என்று எழுதி  வைத்தது. திருக்குறளுக்கு திருவள்ளுவர்  உரை எழுதி விட்டுப்  போயிருந்தார் என்றால்  அது அப்படியே  இருந்திருக்கும். திருவள்ளுவர்  திருக்குறளுக்கு  உரை எழுதாமல் விட்டது கூட ஒரு  பிரமிப்புத் தான்

எத்தனை பேர் திருக்குறளுக்கு  உரை எழுதுகின்றனர். இன்று  எழுதுவது போல் அல்லவா  இருக்கிறது, இன்றைய அறிவியலோடு ஒப்பிட்டுக் கூடப் பார்க்க  முடிந்தது என்றால்  அது கற்பனையான  அது அனுபவத்தின் பால் பிறந்தது.

 

கம்பன் எழுதிய கம்பராமாயணம்  வான்மீகி  எழுதிய  இராமாயணத்தை  விட  கற்பனை வளத்தில் சிறந்தது என்று சொல்கிறார்கள் எதனை வைத்து ?

வான்மீகி எழுதிய நூலை ஆதி காவியம் என்பார்கள். கம்பன்  தானே ஒரு காதல் காவியத்தைப்  படைத்திருக்கலாம்  ஆனால் கம்பன் தான் படித்த ஆதி காவியமான  இராமாயணத்தை மக்கள் வெகுமையாக விரும்புவார்கள். புதிய வடிவமாக்கிக் கொடுக்கவேண்டும். இராமாயனப் பாடல்கள் மக்கள் வழக்கில் இருந்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் வரும் பாடல்களில் இராமாயணம் பற்றிய குறிப்பு இருக்கிறது. அதனால் கம்பன் தன் கற்பனை வளத்தை அழகாக தமிழ் மண்ணின் அடையாளப் பண்போடு தருகின்றார்,

உ+ம் சீதையும் இராமனும் திருமணத்திற்கு முன் சந்தித்ததாக வால்மீகி இராமாயணத்தில் இல்லை ஆனால் கம்பராமாயாணத்தில் மிக அழகாக கம்பன் சித்திரிப்பார்.

இராமன் அரண்மனை வழியால் நடந்து போகிறார். அரண்மனையின் உப்பரிகையில் இருந்து சீதை பார்க்கிறாள். இந்தப் பார்வையை கம்பன் சொல்கிறார், அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள். பார்வையாலே இராமனும் சீதையும் காதல் வயப்பட்டு விட்டதை கம்பன் அழகான நயமிகு வார்த்தைகளைப் போடுகிறார் கம்பன்.

 

மதிப்புக்குரிய திருமுருக  கிருபானந்தவாரியார் அவரின் வாரிசு என்று யாரும் அவர் பணி தொடராமல் போனதற்குக் காரணம்?

அவர் அளவுக்கான தனித்தன்மைகளும் அவர் அளவிற்கான இசை, நகைச்சுவை, பாடல், ஞாபக சக்தி, பயணம், என்ற நிலையிலே யாரும் தங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ளவில்லை.

உதாரணமாக திரைத்துறையில் இவருக்குப் பிறகு இவர் என்போம் சிவாஜிக்குப் பிறகு கமல் தாங்க என்போம் ஆனால் வாரியாருக்குப் பிறகு அவர் போல் யாரும் வரமுடியவில்லை. நானும் கூட அவரிடம் இருந்து நிறையக் கற்றிருக்கிறேன். நான் கூட ஒரு இசைக் குழுவோடு வந்திருந்தால் தான் மக்கள் அதை ஏற்றிருப்பார்கள் இன்னொரு விடையம் சமயச் சொற்பொழிவாளர்களாக நாம், இதுவரையும் யாரையும்  தயார்ப் படுத்தவில்லை. நீங்கள் பார்த்தீர்களானால் மற்றைய மதத்தவர்கள் போதகர்கள் போல் நிறையபேர் படிக்கிறார்கள். கிருபானந்த வாரியார் பத்தாயிரம் பாடல்களையும், தேவார,  திருவாசகங்களையும்  நாக்கின் நுனியில் வைத்திருப்பவர், இசைப் பாடல்கள் சமயக்கதைகள் தோத்திரங்கள், என்று இன்னும் ஏராளம், ஏராளமானவையை  நினைவில் வைத்திருக்கக்கூடிய ஞாபகசக்தி அவரிடம் இருக்கிறது. அவருடைய அந்த வயதிலும் அவர் பயணம் செய்வதில் சலிக்காத மனப்பக்குவம் அவரைவிட யாருக்கு வரும் தமிழகத்தில்? இசைப் பாடகர்கள் என்று தனியாகவும்,சொற்பொழிவாளர்கள் என்று தனியாகவும், நகைச்சுவையாளர்கள் என்று தனியாகவும் இருக்கிறார்களே தவிர இது எல்லாமாக இருப்பவர்கள் என்று யாரையும் காணமுடியாததால் தான் கிருபானந்த வாரியாருக்குப் பின் அவரின் பாதையில் யாரும் வரவில்லை

 

கமல்ஹாசன் அவர்களின் இலக்கிய  ஆளுமை எப்படி என்று உங்களிடம் கேட்டால் ..?

பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி கவிஞராக நான் அவரை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். நிறையப் புத்தகங்கள் வாசிப்பார் வெளிநாடுகளுக்குப் போனால் இரண்டு புத்தகங்கள் வாங்கி எனக்கும் ஒன்று தருவார். அவருடைய கவிதைத் தொகுதி ஒன்றைக் கொண்டு வரவேண்டும் என்று முயற்சிகள் செய்கின்றார். விரைவில் வரும்.

அண்மையில் அவருடைய பிறந்தநாள் அன்று நடிகை ஜெயப்பிரதா வந்திருந்தார். அவருக்கு மிருதங்கம் ஒன்று பரிசு கொடுத்திருந்தார்கள். உடனே மிருதங்கத்தை வாசித்துக் காண்பித்தபோது எல்லோரும் மகிழ்ந்து ஆச்சரியப் பட்டோம்.

அவர் கவிஞர், பாடகர், நல்ல விமர்சகர், நமக்கு புத்தகம் கொடுத்தாலே வாசித்துக் காட்டமாட்டோம். அவர் மிருதங்கத்தை வாசித்துக் காட்டினார்.

 

நீங்கள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர், நகைச்சுவைப் பேச்சாளர் என்று இருக்கும்போது எப்படி நடிகராக வந்தீர்கள்.?

எல்லோரும் சொல்வது போல நானும் நடிகனாக வந்தது ஒரு விபத்து என்று  சொல்ல முற்படவில்லை விறுமாண்டி படம் கமல்ஹாசன் ஆரம்பிக்கப்பட்டதும் என்னையும் அழைத்து நீங்களும் என் கூட இருங்கோ இது ஒரு வரலாற்று சம்பந்தமான படம் நீங்களும் கூட இருந்தால் நல்லது என்று கேட்டுக் கொண்டார் ஆறு மாதங்கள் அவர் கூட இருந்தேன் ஒரு நாள் நீங்களும் இதில் நடித்தால் என்ன என்று கேட்டார் நான் மூன்று மாதங்களாக யோசித்த போது கமலே ஒரு முடிவாக நீங்கள் நீங்களாகவே வாருங்கள் என்று என்னை விருமாண்டி படத்தில்  என் பாத்திரத்தை எனது பேராசிரியர் என்ற நிலைமாறாமல், ஏன் என்றால் படம் நடித்து முடிய கற்பிக்க கல்லூரிக்குப் போக வேண்டுமே என்ற பக்குவத்தோடு என் நடிப்பாற்றலை வெளிக் கொணர்ந்தது  கமல் தான் அவருக்குத் தான் எல்லாப் புகழும்.

 

arooraan    ஆவூரான் | ஆஸ்திரேலியாவிலிருந்து

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More