அமெரிக்காவின் புதிய போர்வீரர்கள்! | ச.ச.முத்துஅமெரிக்காவின் புதிய போர்வீரர்கள்! | ச.ச.முத்து

 

Terminator (டேர்மினேற்றர்) திரைப்படத்தில் அந்த காட்சி அடிக்கடி அந்த நேரங்களில் (1984) ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது. அந்த காட்சிக்காகவே அந்த படமும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. என்னதான் சுட்டாலும், வெடிவைத்து தகர்த்தாலும், எரியும் தீச்சுவாலைக்குள் வீழ்த்தினாலும் மீண்டும் அந்த உருவம் எழுந்து இயந்திர மனிதனாக, மனிதனாக மாறி எதிரிகளை வேட்டையாடும். ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேகர் இந்த பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.
‘ரைற்றானிக், அவதார்’ படங்களை எடுத்த ஜேம்ஸ் கமரூனின் அருமையான ஒரு பாத்திரப்படைப்பு அது. அதைப்போலவே, புதிய ரோபோ போர்வீரர்களை களங்களில் இறக்கும் ஒரு திட்டத்தை பென்ரகன் கொண்டிருப்பதாக அண்மையில் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.
அழுத்தங்களும், தேவைகளும் ஏற்படும்போதெல்லாம் புதிய புதிய பாதைகளும் கதவுகளும் திறக்கும் என்பதே விதி. அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதனையே காட்டி நிற்கின்றன. 1993 ஒக்டோபர் 3-4ம் திகதிகளில் சோமாலியாவின் போர்க்குழுதலைவர் மொகமட் அய்டீயை பிடிக்க அல்லது கொல்ல என்று தலைநகர் மொகடீசுக்கு பறந்துசென்ற எம்எச்-60- எல் பிளாக்கவாக் (ஆர்-60L-BLACKHAWK) உலங்குவானூர்திகளுக்கு நடந்ததும் அதன் விமானியும் அதில் சென்றவர்களும் எவ்வாறு பிடித்து கொல்லப்பட்டார்கள் என்பதும்தான் அடுத்த வருடங்களில் ஆளில்லாத விமானங்களை இன்னும் கூர்மையாக்கி நடிவடிக்கைகளுக்கு ஏற்றதாக ஆக்கும் கரிசனையை அமெரிக்காவுக்கு கொடுத்தது.

terminator8
புதிய கண்டங்களை, புதிய நாடுகளை கண்டுபிடிக்கும் கடற்பயணங்கள் நடாத்தப்பட்டது வெறுமனே சாகசங்களுக்காகவோ, மனிதகுல நன்மைக்காகவோ அல்லவே. பொருளாதார நலனுக்காகவும், ஆட்சியின் பரப்பை நீட்டுவதற்காகவுமே. உலக ஒழுங்கு என்பது ஆதிக்கசக்திகள் வரையும் கோடுகளில்தானே இருக்கிறது – இயங்குகிறது.
இப்போதைய உலக ஒழுங்கு என்பது நிலத்தை துளைத்து எவ்வளவு வளங்களை அள்ளமுடியுமோ அவ்வளத்தையும் வாருவதுதான். என்னதான்- ஐக்கிய நாடுகள் பட்டயம், மனித உரிமைகள், நாடுகளுக்கான இறைமை என்பனவெல்லாம் சட்டவாக்கமாக எழுதப்பட்டிருந்தாலும் இன்றும் அதே நாடுபிடிக்கும், காலனிகளை உருவாக்கும் ஆதிக்கமனோபாவம் கொஞ்சமும் குறையவே இல்லை. அமெரிக்கா இதில் முன்னிலையில் இருக்கிறது.

என்னதான் பொருளாதாரத்தில் வானத்தை தொட்டுநிற்கும் வளர்ச்சி கண்டாலும் பலம் என்பது இல்லாதுவிட்டால் அனைத்துமே கானல்நீர்போல போய்விடும் என்பது முன்னேறிய நாடுகளுக்கு நன்குதெரியும் ஒரு சேதியாகும். பலத்தின் மூலம் கிடைக்கும் ஒருவிதமான மேலாதிக்க அங்கீகாரமே பொருளாதாரத்துக்கு இன்றி அமையாதது என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இதற்கு இடைஞ்சலாக இருப்பது உயிர் இழப்புகள்தான்.
மக்களது இழப்புகளை எப்போதுதான் ஆதிக்கசக்திகள் ஒரு பொருட்டாக எண்ணிணிருக்கின்றன. அவர்களுக்கு இருக்கும் பிரச்சனையே அவர்களின் இராணுவ வீரர்களின் உயிர் இழப்புகள்தான். வியட்நாம் போரில் தமது இளையோர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட கொந்தளிப்பும், எதிர்ப்பும்தான் அமெரிக்க தோல்வியுடன் முகம் நிறைய மண்ணுடன் திரும்பக் காரணம். இன்றும்கூட ஆப்கானிஸ்தானில் இழப்புகள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான தீர்ப்பை தேர்தல்களில் சந்திக்க நேரிடும் என்பதே மேற்குலக அதிபதிகளின் கவலை.

நாடுகளின் வரையறுக்கப்பட்ட வான்பரப்பு, இறைமை என்பதை எல்லாம் துலாவி எறிந்துவிட்டு அட்டகாசமாக எங்கும் புகுந்து தாக்கி திரும்ப உயிருள்ள விமானிகள் இல்லாத ஆளில்லாத விமானங்கள் இப்போது இவர்களின் வானத்தை பற்றிய கவலையை சற்றே தணித்துள்ளது. வானம் அவர்கள் வசமாகிவிட்டது.
ஒரு பெரிய தொகுதி போர்விமானங்கள் செய்யும் வேலையை – அழிவை – மிக நுட்பமாக இந்த ஆளில்லாத விமானங்கள் செய்து தருவதில் ‘விமானிகள் கைது, எவ்-16 விமானி கொல்லப்பட்டார், விமானியைக் காணவில்லை’ போன்ற குடைச்சல்கள் ஆளும் தரப்புக்கு இப்போது இல்லை.
தரையில் வீட்டுக்கு வீடு சென்று சோதனை இடும் இராணுவத்தினரும், ரோந்து செல்லும் இராணுவத்தினருமே அதிகமாக மிதிவெடிகள், கிளைமோர் தாக்கு, சினைப்பர் தாக்கு, தற்கொலைத் தாக்கு என்பனவற்றால் உயிரிழப்பதால் அமெரிக்காவில் எழும் எதிர்ப்பு நாளுக்கு நாள் கூடிய வண்ணமே இருக்கிறது.
நவீன போர்முறையில் துருப்புகளின் எண்ணிக்கையைவிட திறமையான திட்டமிடலும், அதனை செயற்படுத்த மிக நவீனமான உபகரணங்களும் (ஆயுதங்கள் உட்பட) என்பனவே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

070519-N-9706M-004

அமெரிக்காவும் 2019ல் தனது படையினரின் எண்ணிக்கையை 420,000 ஆக குறைக்க உள்ளதாக பாதுகாப்புவெளியீட்டு செய்தி தெரிவிக்கிறது. ஆட்களை குறைத்து அந்த இடைவெளியில் ரோபோர்ட்களை பணிக்கு (போருக்கு) அமர்த்தும் திட்டம்பற்றி இப்போது பகிரங்கமாகவே அமெரிக்கா கதைக்க ஆரம்பித்துவிட்டது. முன்னாள் அமெரிக்கப் படைத்தளபதியும், ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் தலைமை தளபதியுமாக இருந்த ஜெனரல் ஸ்ரான்லி மெக் க்கிறிஸ்ரல் போன்றவர்கள் இதனைப்பற்றி வெளிப்படையாகவே கருத்துக்கூற ஆரம்பித்திருப்பது அமெரிக்கா ரோபேர்ட் யுத்தத்தின் பிரகடனம் என்றே பார்க்கலாம்.
மனிதனால் கணடுபிடிக்குப்பட்ட அனைத்து பொருட்களும் மனிதனது கரங்களின் நீட்சி என்றே கருதலாம். விரல்களின் நீட்சி துப்பாக்கியின் ரிகரில் விரலை வைத்தபடி எதிரி தேசத்தில் வலம்வருவதற்கு பதிலாக இப்போது அதே விரல்கள் வீட்டின் அறையிலோ முகாமின் கட்டுப்பாட்டு அறையிலோ ரிமோற் கொன்ரோலின் மீது. அவ்ளோதான். தான் நேரடியாக எல்லாவிதமான ஆபத்துகளுக்குள்ளாகவும் மிதந்துசென்று செய்துமுடிக்க வேண்டியதை தனது கருவியின் மூலம் செய்துமுடிக்கிறான். அதான். ஈராக்கிய யுத்தத்தில் வருடக்கணக்காக ஈடுபடும் ஒரு போர்வீரன் அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலத்தைவிட்டு புறப்பட்டதே இல்லை. எப்படி இது சாத்தியமாகிறது? அங்கிருக்கும் முகாமில் இருந்தபடியே ஆளில்லாத விமானங்களை இயக்கிய அவர் தினமும் நிறைய பறப்புகளை மேற்கொண்டு ஏராளமானோரை ஈராக்கிய தரப்பில் கொன்று, ஈராக்கிய-அல்குவைடா நிலைகளை படம் எடுத்து தரை அணிகளுக்கு வழங்கிவிட்டு, ஒரு சில நிமிடங்டகளில் தனது பிள்ளைகளின் வீட்டுப் பாடங்களை கவனிக்கவும் முடிவது நிச்சயமாக இந்த ரோபேர்ட் யுத்த தொழில்நுட்பத்தினாலேயே.
இப்போது அதற்காகவே ரோபோட்கள் வீதி ரோந்துகளுக்கும் மற்றும் சமர் பிரயோகங்களுக்கு என்று வரப்போகிறது. (ரோபேர்ட்களை அஃறிணையாக அழைப்பதா இல்லை உயர்திணையா… அது பிறகு..) அமெரிக்க பூர்வாங்கமாக செய்தி வெளியிடுகிறார்கள் என்றால் அதற்கு நிறைய காலத்துக்கு முன்னரேயே அதனை தமது சோதனைகள், முயற்சிகள், நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபடுத்தி இருப்பார்கள். பிறகு, 1969களிலேயே தமது இராணுவத் தொடர்பாடலுக்காக அமைத்திருந்த ‘இன்ரநெற்’ என்ற உலக அதிசயத்தை எவ்வளவுகாலம் இரகசியமாகவே வைத்திருந்தார்கள். அது பொதுப் பாவனைக்கு வந்தது என்னவோ 80களின் இறுதியிலேயே… எவ்வளவு காலம் ‘இன்ரெநெற்’ என்ற தொடர்புமுறையை தமது இராணுவத் தேவைகளுக்காக பாவித்து அதன்பிறகே பகிரங்கமாக்கியது போலவே, இப்போதும் ரோபேர்ட் யுத்தமுறை பற்றிய அமெரிக்காவின் அறிவிப்புகள் மற்றும் கருத்துபகிர்வுகள் இருக்கின்றன.
அவர்கள் இந்தத் துறையில் மிக இரகசியமாக மிகமிக முன்னே நிற்பார்கள் என்பது தெரிகிறது. இந்த ரோபோட்களை உருவாக்கும் முயற்சியில் ஏற்கனவே 43க்கும் மேற்பட்ட நாடுகள் இறங்கியுள்ளன. சுவாரசியமானவிடயம் என்னவென்றால், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்றவையும் அடங்கும். நாடுகள் மட்டுமல்லாமல்  போராட்ட அமைப்புகளும்கூட இந்த புதியபோர்முறை – அதுதான் மனிதர்கள் நேரடியாக செல்லாமல் இயந்திரங்களை – இலத்திரனியலை உபயோகப்படுத்தும்முறையை கவனித்தே வருகிறார்கள்.
இஸ்ரேல் என்ற அங்கீகரிக்கப்பட்ட தேசத்துக்கும் தேசம் என்ற வரையறைகள் அற்ற போராட்ட அமைப்பான கிஸ்புல்லாவுக்குமான இறுதி யுத்தத்தில் கிஸ்புல்லா அமைப்பு நான்குவிதமான ஆளில்லாத விமானங்களை பயன்படுத்தி இருப்பதை காணலாம்.

Talisman Battles IEDs in Helmand Province, Afghanistan
அதைப்போலவே ஜிகாத் இணையத்தில் ஈராக்கில் எங்கோ வைக்கப்பட்டிருக்கும் எல்ஈடி பொறிவெடியை அதற்கு பலபல மைல்கள் அப்பால் ஒரு அறைக்குள் இருந்து கணணிமூலம் வெடிக்கவைத்து அமெரிக்கப் படையினருக்கு இழப்பை ஏற்படுத்திய காட்சிகளும் அடுத்த கட்ட போர்முறையை அனைவரும் கையிலெடுக்க தயாராக உள்ளார்கள் அல்லது முயற்சிக்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஆயினும் அமெரிக்காதான் தற்போதைக்கு இதில் முதலாவதாகவும் முன்னணியிலும் உள்ளது. ரோபேர்ட் போர்வீரர்கள் மனிதர்களுக்கு பதிலாக களமிறக்கப்படும் காலத்தில் இருக்கிறோம். போர்வீரர்களின் இழப்புகள், அதை பயன்படுத்தி காய்நகர்த்தும் எதிர்க்கட்சி, ஆராய்ச்சிமணியை அடித்து நீதி கேட்கும் யாரோ என்ற எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் யுத்தங்களை செய்ய ரோபேர்ட்களே உகந்தவையாக ஆள்பவர்களுக்கு இருக்கிறது.
ரோபேர்ட் போர் வீரர்களில் இருக்கும் இன்னுமொரு அனுகூலம் என்னவென்றால் அது தனது பக்கத்தில் வரும் சக ரோபேர்ட்டின் இழப்பால் ஒருபோதும் ஆத்திரமடையாது. அதனால் அதற்காக பழிவாங்கவும் செய்யாது. போர் வீரனை இழந்த பெற்றோருக்கு எழுதும் அனுதாப – ஆறுதல்கடிதங்கள் இந்த ரோபோட்களின் இழப்புகள் ஏற்படும்போது தேவையே இல்லை.
ரோபேர்ட்களின் கண்களுக்கு பாடசாலைக்கு புத்தகபையை முதுகில் சுமந்துசெல்லும் சின்னஞ் சிறுமியும் இன்னொரு யுத்த டாங்கி வு-20யும் ஒன்றாகவே தெரியும் என்பதும் அதற்கான உத்தரவுகளில் பிழைகள் ஏற்படும்போது பெரிய மனித அழிவுகளை அது உண்டாக்கும் என்பதும் அதனுடைய மற்றைய பக்கம்.
20ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட யுத்தம் சம்பந்தமான சட்டங்கள் எதுவுமே 21ம் நூற்றாண்டில் இப்போது உருவாகிவரும் ரோபேர்ட்களுக்கு செல்லுபடியாகுமா தெரியவில்லை. கார் உற்பத்தியில் ஏறத்தாழ 70 வீதத்துக்கும் அதிகமான வேலைகளை மனிதர்களிடமிருந்து ரோபேர்ட்கள் பறித்து எடுத்துள்ளதை போன்று, யுத்தத்திலும் இனி ரோபேர்ட்களே ஆதிக்கம் செலுத்தும்.
தேச எல்லையும் யுத்தமுனையும் பல்லாயிரம் மைல்கள் வித்தியாச தூரத்தில் இருக்கும் ஆதிக்க நாடுகளுக்கு இந்த ரோபேர்ட்கள் வரப்பிரசாதம்தான் – நிச்சயமாக.ஆனால் தனது தேசவிடுதலைக்காக – தேசிய விடுதலைக்காக போரிடும் மக்களின் தர்மமான நியாயமான இலட்சியத்தை எங்கிருந்தோ ஏவிவிடப்படும் நான்கு ஐந்து ரோபேர்ட்கள் போய் அழித்துவிடலாம் என்றால் என்ன செய்வது?
யார் கண்டார்கள் வரும் காலத்தில் ஜெனீவா மனித உரிமை மண்டபத்திலும் ரோபேர்ட்களே தீர்மானங்களை சமர்ப்பித்து, விவாதித்து, வெட்டி, சுருக்கி நிறைவேற்றவும் செய்யலாம்.
மனிதர்கள் வெறும் பார்வையாளர்களாக இருந்தால் மட்டுமே போதுமானது…

 

ச.ச.முத்து | இலண்டன் –

ஆசிரியர்