சீனாவின் பட்டுப்பாதை, கரடுமுரடானா பாதையாக மாறுமா? | இதயச்சந்திரன்சீனாவின் பட்டுப்பாதை, கரடுமுரடானா பாதையாக மாறுமா? | இதயச்சந்திரன்

1950 ஆம் ஆண்டு சீனக்குடியரசினை அங்கீகரித்தது முதல் , 1952 இல் ‘இறப்பர்-அரிசி’ (Rubber -Rice Pact ) என்கிற வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதிலிருந்து ஆரம்பமாகிறது சீன-இலங்கைஇருதரப்பு உறவு.
இவையெல்லாம் யு.என்.பி ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது என்று பெருமை கொள்கிறார் ரணில் விக்கிரமசிங்க. சீன அதிபர் சி ஜின்பிங் இனை வரவேற்று ஐ.தே. கட்சியின் தலைவர் விடுத்த செய்தியில், 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத்தினை அழிக்க சீனா பேருதவி செய்தது என்கிற உண்மையையும் கூறியுள்ளார்.
தமிழ் தேசிய இனத்தின் உரிமைபோரினை ( அது எந்த வடிவத்தில் இருந்தாலும்) அழிப்பதில், பேரினவாதக் கட்சிகள் ஒன்றுக்கொண்டு சளைத்தவையல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் ரணில்.
இதில் கவலைக்குரிய உண்மை என்னவென்றால், இந்த ஆளும்- எதிர் கட்சிகளெல்லாம், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்கே சர்வதேச நட்பு நாடுகளின் ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இதனை நிரந்தரமாகாத் தீர்க்கும் பொறிமுறை குறித்தும், அதற்கான ஆதரவினை வழங்குமாறும் இவர்கள் கேட்பதில்லை.
ஆதரவு வழங்கும் நாடுகளும், தமது பிராந்திய- தேசிய பாதுகாப்பிற்கு  இலங்கை ஒத்துழைத்தால் போதும் என்பதன் அடிப்படையில், இன அழிப்பிற்கும் அதனை மேற்கொள்ளும் அரசிற்கும் சகலவிதமான உதவிகளையும் புரிகின்றன.
ஐ.நா.சபை அழுத்தங்களெல்லாம் முத்தரப்புக்களின் முறுகல் நிலையால் வந்த பக்கவிளைவுகளே. மூடிய கதவிற்குப் பின்னால் பேரம்பேசும் நிகழ்வு நடக்கும்.
அதற்கு உக்ரைன் விவகாரம் நல்லதொரு சமகால அனுபவம்.

இப்போது இலங்கை வந்துள்ள சீன அதிபருக்கு ஒரு நிகழ்ச்சிநிரல் உண்டு.
அந்த நிகழ்ச்சிநிரலில், இலங்கையை தனக்குச் சார்பாக எப்படித் திருப்பலாம் என்கிற தந்திரோபாயம் நிற்சயம் இருக்கும்.
கிழக்கையும் மேற்கையும்  இணைக்கும் கடற்பாதையில், பாதுகாப்பான நிரந்தரமான பட்டுப்பாதையை (Silk Road ) அமைப்பதுதான் சீனாவின் மூலோபாயத்திட்டம். இது காஞ்சிபுரம் பட்டோ அல்லது பனாரஸ் பட்டோ கிடையாது. இனி இந்த கடல்பாதையில் பட்டுத் துணிமணிகள் பயணம் செய்யப்போவதில்லை.
வழமைபோன்று ஆபிரிக்காவிலிருந்து கனிம வளங்களும், மத்தியகிழக்குப் பிரதேசங்களிலிருந்து   கறுப்புத் தங்கமும், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களை அழிக்க உதவும் ஆயுதத்தளபாடங்களும், அணுக்கழிவுகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களும் எந்த இடையூறுமற்று பயணம் செய்யப்போகின்றன.
தென்சீனக் கடலில் ஆரம்பித்து மலாக்கா நீரிணை  ஊடாக நகரும் ‘பட்டுப்பாதை’ மொரோக்கோ வரை செல்லலாம்.

இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய சொல் ‘பாதுகாப்பான பயணம்’ என்பதுதான்.
இதற்குள் ஆயிரம் மூலோபாயங்களும், பொருளாதார ஆக்கிரமிப்புக்களும், இராணுவக்கூட்டுக்களும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களும் அடங்கும். பயணத்தைப் பாதுகாப்பானதாக அமைப்பதற்கு, பட்டுப்பாதையில் இருக்கும் நிரந்தர நட்புநாடுகளை ஒரு விதமாகவும், நிலப்பரப்பின் எல்லையோடு இருக்கும் நாடுகளை வேறு விதமாகவும் அணுகவேண்டும்.

சீனாவுடன் நிலத்தொடர்புள்ள  இந்துசமுத்திரக்கடற் பிராந்தியத்திலுள்ள அணுஆயுத வல்லரசு    நாடு இந்தியா. அந்நாட்டிற்கும் சி ஜின்பிங் பயணித்துள்ளார். டஜிகிஸ்தானில் ஆரம்பித்த சீன அதிபரின் பட்டுப்பாதைப் பயணம் மாலைதீவு, இலங்கை மற்றும் இந்தியாவையும் உள்ளடக்கியுள்ளது.
டஜிகிஸ்தான் பட்டுப்பாதையில் இல்லாவிட்டாலும், சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO ) முக்கிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நான்கு நாட்டுப் பயணத்தையும் ஒரே மூச்சில் மேற்கொள்ளும் சீன அதிபரின் விரிந்த மூலோபாயத் திட்டம் என்னவாக இருக்கும் என்கிற விவாதம், பல அரசறிவியலாளர்கள் மத்தியில் உருவாகியிருப்பதை அவதானிக்கலாம்.
டஜிகிஸ்தானைத்தவிர ஏனைய மூன்று நாடுகளும் தென்னாசியாவின் கடல்வழித் தலைவாசலில் அமைந்துள்ள நாடுகள்.

சீனாவின் அண்மைக்கால செயற்பாடுகள், அதன் கூட்டணிகளாக பிரிக்ஸ் (BRICS)மற்றும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ( Shanghai Cooperation Organization )  என்பவற்றில் அதிகரித்திருப்பதை காணலாம்.
சீன எல்லையில் அமைந்துள்ள ரஷ்யா, டஜிகிஸ்தான், கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், போன்ற  நாடுகள் இணைந்து 2001 ஆம் ஆண்டு உருவானதே இந்த SCO என்ற சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு.

அதாவது சீனாவானது, தீவிரமான இராணுவ-பொருளாதார இருவழி மூலோபாய நகர்வினை பட்டுப்பாதை ஊடாகவும், மறுபுறமாக SCO ஊடாகவும் முன்னெடுப்பதை அவதானிக்கலாம். சீனாவின் இத்தகைய ‘இரு வழி நகர்வு’ குறித்து, ஒரு புதிய ஆரோக்கியமான விவாதத்தினை உருவாக்குவதில் இப்பத்தி அக்கறை கொண்டிருக்கிறது என்பதனை சுட்டிக்காட்ட முனைகின்றேன்.

சீனாவின் ஆசிய மேலாண்மைக் கனவிற்கு, இவ்விரு மூலோபாய திட்டங்களும் மிக முக்கியமானவை.
அதாவது பிரிக்ஸ் கூட்டமைப்பானது G8 மற்றும் G20 நாடுகளில் உருவாகும் இராஜதந்திரச் சிக்கல்களை முகம்கொடுக்கும் பொருண்மிய  சக்தியாக இருந்தாலும், SCO வும் ,பட்டுப்பாதையுமே சீனப் பொருளாதாரப்பசிக்கு வள வழங்கலை தடங்கலின்றி உறுதிசெய்யும் அமைப்பாகவும் திட்டமாகவும் இருக்கிறது.

அதேவேளை ‘மேற்குலக விஸ்தரிப்புக் காட்டாறு’ தென்சீனக்கடலைவிட, ஏனைய சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் ஊடாக தன்னை நெருங்கும் சாத்தியங்கள் அதிகமென சீனா கணிப்பிடுவதால், SCO வை ஒரு முக்கிய பாதுகாப்பு  அரணாகவே அது நோக்குகிறது.

அண்மையில் நடைபெற்ற SCO மாநாட்டில், அவ்வமைப்பின் ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களுக்காக, 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க அதிபர் சி ஜின்பிங் உறுதியளித்திருந்தார்.
ஜோர்ஜியா உக்ரேய்ன் ஊடாக SCO நாடுகளை நோக்கி  விரிவுபடுத்தப்படும் மேற்குலகின் ‘ ஏவுகணை பாதுகாப்பு மண்டலம்’ எனும் பொறிமுறைக்கு எதிரான படைத்துறை சார்ந்த திட்டத்திற்கு இந் நிதி பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதேவேளை உலக பாதுகாப்பிற்கும் அதன் ஸ்திரத்தன்மைக்கும், மேற்குலகின் இப்பொறிமுறை விரிவாக்கம் பாதிப்பினை ஏற்படுத்துமெனக்கூறும் இவ்வமைப்பு,  பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடப்போவதாக 2001 இல் பிரகடனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த SCO அமைப்பில் இந்தியா,மங்கோலியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் பார்வையாளர் அந்தஸ்தினைப் பெற்றுள்ளன. விரைவில் இக்கூட்டினுள் பாகிஸ்தானும் இந்தியாவும் இணையலாமென ரஷ்யா  எதிர்பார்க்கின்றது. அவ்வாறு நிகழ்ந்தால், சமநிலையற்று காணப்படும் உலக மூலோபாய வரைபடமானது புதிய வடிவம் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மோடியின் அமெரிக்க விஜயத்தின் பின்னரே, இது சாத்தியமாகுமா இல்லையா என்பது குறித்து பேச முடியும்.

இவை தவிர, தென்னாசியாவில் பட்டுப்பாதை அமைப்பது போன்று சீனா, மங்கோலியா, ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்த பொருளாதார குறும்பாதை ஒன்றினை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, சீன அதிபர் சி ஜின்பிங் அவர்கள் முன்மொழிந்த செய்தியொன்றும் அண்மையில் வெளிவந்தது. இப்புதிய கூட்டு உருவாகும் வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது.

சீனா, ரஸ்யாவின் எல்லைகளைக்கொண்ட, நிலத்தால் சூழப்பட்ட ,கையிருப்பில் நிலத்தடி கனிமவளங்கள் பெருவாரியாக உள்ள ஒருநாடு மங்கோலியா என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆசியாவில் மியன்மாருக்கு அடுத்ததாக, கனிமவளங்கள் செறிவாக உள்ள நாடு மங்கோலியாவென புவி அமைப்பு ஆய்வுகள் கூறுகின்றன.

அடுத்ததாக, பட்டுப்பாதையை அண்மித்த நாடுகளுக்கு விஜயம் செய்த சீன அதிபர் சி ஜின்பிங் , அப்பாதையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு என்னவிதமான அணுகுமுறைகளைக் கையாள்கின்றார் என்று பார்ப்போம்.
இவ்விவகாரம் மிக ஆழமாக பார்க்கப்பட வேண்டிய விடயம். இது குறித்து இனிவரும் பத்திகளில் விரிவாகப் பார்க்கலாம்.

இங்கு  சீனாவின் பிரயோக அணுகுமுறையில் இருதரப்பு நாணயப் பண்டமாற்று ( Currency Swap ) ஒப்பந்தம் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியதொரு முக்கிய விவகாரமாக  காணப்படுகிறது.
அதாவது வர்த்தக பரிமாற்றங்கள்  மற்றும் ஏனைய உடன்பாடு காணப்பட்ட விடயங்களில், இலங்கையின் தேசிய நாணயத்தை (ரூபாய்) சீனாவின் தேசிய நாணயத்தால் (யுவான்) மாற்றீடு செய்யலாம் என்று இவ் ஒப்பந்தம் கூறுகிறது.
அதாவது 3 வருட கால எல்லைக்குள், 225 பில்லியன் ரூபாய்கள் ( US $1.63 பில்லியன்) , 10 பில்லியன் சீன யுவானுடன் நாணய பண்டமாற்றிக்கு பயன்படுத்தப்படலாம்.

அதேவேளை, இந்தியாவுடனான  நாணயப் பண்டமாற்றின் அவசியம் (, அதாவது பிரத்தியேகமான ஒப்பந்தம்) சீனாவிற்கு இருக்கப்போவதில்லை. ஏனெனில் பிரிக்ஸ் அமைப்பு,  100 பில்லியன் டொலரில் உருவாக்கும், சாங்காயைத் தளமாகக் கொண்டு இயங்கப்போகும்  ‘புதிய அபிவிருத்தி வங்கி’ ,  நாணயப் பண்டமாற்றினை அந்நாடுகளிடையே கட்டாயம் அறிமுகம் செய்யும். சீனாவின் நீண்டகால நோக்கமும் அதுதான்.

‘சர்வதேச நாணயம்’ என்று, இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்து சர்வதேசத்தால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்க டொலரிற்கு மாற்றீடாக,  யுவானைக் கொண்டுவரவேண்டுமென்பதே சீனாவின் பெருங்கனவு.
அக்கனவு மெய்ப்பட, இந்த நாணயப் பண்டமாற்று உத்தியைக் கையாளத் தொடங்கியுள்ளது சீனா. இதன் விளைவாக, இருதரப்பு வர்த்தகம் சீனா சார்பாக அதிகரிக்கும். சீனாவின் வர்த்தக உபரியும் கூடும்.

காலப்போக்கில், இவ்வாறான ஒப்பந்தங்கள் மேற்குலகின் ஆசீர்வாதம் பெற்ற அனைத்துலக நாணய நிதியத்தையும், உலக வங்கியையும் ஓரங்கட்டிவிடக்கூடிய நிலையைச் சாத்தியமாக்கிவிடலாம்.

இதேவிதமான 3 வருடகால ஒப்பந்தமொன்றினை, கடந்த ஜூலை மாதம், சுவிஸ் தேசிய வங்கியோடு மக்கள் சீன தேசிய வங்கி செய்திருந்தது. அதாவது 150 பில்லியன் யுவான் ( US $24.17 பில்லியன் ) இந்த நாணயப் பண்டமாற்றில் உடன்பட்ட தொகையாகும்.  இதனைப் பயன்படுத்தி சீன முறிச் சந்தையில் ( Bond Market ) சுவிஸ் வங்கியானது  15 பில்லியன் யுவான் வரை முதலீடு செய்யக்கூடிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

அடுத்து, சீன அதிபரின் இந்திய விஜயத்தை நோக்கினால், குறைவான கூலி பெறும் இந்தியத் தொழிலாளர்களை மனதில் இருத்தி , புதிய தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவிட சீன கம்பனிகள் விரும்புகின்றன என்கிற செய்தி வருகிறது. இவைதவிர, இந்தியாவின் உட்கட்டமைப்பிலும் ரயில்வே துறையிலும்,பாரிய முதலீடுகளைச் செய்ய சீனா விரும்புகிறது. வாக்குவங்கி அரசியலில் உணர்திறன் மிக்க விவகாரம் என்பதால், எல்லையோர முறுகல் பிரச்சினைகள் குறித்தும் பேசப்படும்.

21 உடன்படிக்கைகள், இருதரப்பு சுதந்திர வர்த்தக புரிந்துணர்வு என்பன ஏற்படுத்தப்பட்டாலும், அதற்கு அப்பால் இவையெல்லாவற்றையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமை கொண்ட சீனாவின் மூலோபாய திட்டத்தின் முக்கிய மையக்கூறுகள் பற்றியும், இவற்றினை இயக்கப்போகும் பட்டுப்பாதையின் மூலச் சூத்திரம் குறித்தும் மேலோட்டமாக இப்பத்தியில்
பார்த்தோம்.

‘ கிழக்கு நோக்கிய பார்வையில்’ ( Look East Policy ) தென்சீனக் கடலில் வியட்நாமிற்காக எண்ணெய் அகழ்வு பணிகளில் இந்தியா இறங்கியுள்ள இத்தருணத்தில், பட்டுப்பாதை அமைக்க இந்தியாவின் கொல்லைப்புறத்தில் வந்திறங்கியுள்ளார் சீன அதிபர். இனி சுப்பிரமணிய சுவாமிகளுக்குப்பதிலாக, ராம கிருஷ்ணன்களின் இலங்கைப் பயணங்களையே அடிக்கடி நாம் காணலாம்.

இனிவரும் நாட்களில்,  சீனாவின் பட்டுப்பாதை, கரடுமுரடானா பாதையாக மாறுமா? இல்லையா? என்பதை அமெரிக்காவும் இந்தியாவும் தான் தீர்மானிக்க வேண்டும். அமெரிக்காவின் ஆசிய- பசுபிக் கட்டளை மையமும் இனிமேல் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிடும்.

இதயச்சந்திரன் | அரசியல் ஆய்வாளர்

நன்றி | வீரகேசரி
21/09/2014

ஆசிரியர்