நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரம் மறுபடியும் கொதி நிலையை அடைந்திருக்கிறது. கன்னியா வெந்நீரூற்ற்றில் தமது மரபுரிமையைப் பாதுகாப்பதற்காகவும் நமது வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவும் தன்னியல்பாக சுமார் இரண்டாயிரம் பொது சனங்கள் திரண்டார்கள். குழந்தைகளும் பெண்களும் முதியவர்களுமாக அது தானாகத் திரண்ட கூட்டம். எனினும் அதற்காக சில கிழமைகளுக்கு முன்னரே ஒரு பகுதி செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக உழைத்தார்கள்.
ஆனால் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் திரண்ட கூட்டம் பல நாட்கள் திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல. ஒரிரவுக்குள் கிளர்த்தெழுந்த ஜனத்திரள் அது. திங்கட் கிழமை நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் உடல் எரியூட்டப்பபட்டதையடுத்து கொதிப்படைந்த தமிழ் மக்கள் தாமாகத் திரண்டு தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
தகன அரசியலுக்கு ஒரு பண்பாடுப் பரிமாணம் உண்டு. இது தமிழ்க் கூட்டு உளவியலைக் கொதிப்படையச் செய்து விட்டது. ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட அநேகர் எப்பொழுதும் இது போன்ற ஆர்பாட்டங்களுக்கு தவறாமல் வருபவர்கள்தான். என்றாலும் எந்தவித முன்னேற்றபாடுமின்றி அதுவும் சனத்தொகை அடர்த்தி மிகக் குறைந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓரிரவுக்குள் இவ்வளவு தொகை திரண்டமை எதைக் காட்டுகிறது? “தமிழ்மக்கள் ஒன்று திரள ஞானசார தேரர்கள் தேவை” என்பதையா ?
நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரம் என்பது கடந்த பல மாதங்களாக அரங்கில் ஊடகக் கவனிப்பைப் பெற்ற ஒன்றாகும். எனினும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம். காணிக்கான போராட்டம், அரசியல் கைதிகளுக்கான போராட்டம் போன்றவற்றோடு ஒப்பிடுகையில் இது பிந்தியது. கன்னியா வெந்நீரூற்று விவகாரம் கூட ஒப்பீட்டளவில் இதற்கு முந்தியது.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் இப்படியே ஒவ்வொரு பிரச்சினையாக மேல் எழும் பொழுது தமிழ் மக்களின் கவனமும் செயற்பாட்டாளர்களின் கவனமும் அரசியல் வாதிகளின் கவனமும் குறிப்பிட்ட அந்தப் பிரச்சினையின் மீது குவிகிறது. அது கொஞ்ச காலம் கொதிக்கும். அதன்பின் புதிதாக ஒரு பிரச்சினை ஏழும் அல்லது ஏற்கனவே இருக்கிற ஒரு பிரச்சினை புதிய திருப்பத்தை அடையும். அது மறுபடியும் தமிழ் மக்களின் கொதிப்பைக் கூட்டும். ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறும். பின்னர் பின்னர் சிறிது காலத்தின் பின் அதன் கொதிப்புத் தணிந்து விடும்.
கடந்த பத்தாண்டுகளாக இப்படி பல விடயங்கள் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளன. தமிழ் பொது மக்களும் காலத்துக்கு காலம் வெவ்வேறு விவகாரங்களில் மீது தமது கவனத்தை குவிப்பதும் பின்னர் ஒரு கட்டத்தில் அதைக் கடந்து போவதுமாக காணப்படுகிறது. இதில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதில் பெரும்பாலான போராட்டங்களில் தமிழ் மக்களுக்கு உரிய வெற்றி கிடைக்கவில்லை.
தொகுத்துப் பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் வெவ்வேறு விவகாரங்களை முன்வைத்து தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். ஆனால் எந்த ஒரு விவகாரத்திலும் அவர்களுக்கு இறுதி வெற்றி கிடைக்கவில்லை. தமிழ் மக்களின் போராட்ட சக்தி இவ்வாறு தெட்டம் தெட்டமான போராட்டங்களில் சிதறடிக்கப்படுகிறது. மாறாக அதை ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பது யார்?
மிகக் கொடுமையான உண்மை இதுதான். தமிழ் மக்களின் போராட்ட சக்தியை, தமிழ் நிதியை, தமிழ் அறிவை, தமிழ் செயல் வீரத்தை, தமிழ்க் கலையை, தமிழ் ஆவணங்களை ஒருமுகப்படுத்தவும் ஒரு திரட்சிக்குள் கொண்டு வரவும் தமிழ் மக்கள் மத்தியில் பொருத்தமான ஒரு மக்கள் அமைப்பு கிடையாது. பேரவையை அப்படிப்பட்டதோர் அமைப்பாக புனரமைக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது. அது தொடர்பில் இப்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த எழுக தமிழிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் பேரவை தன்னை புனரமைக்க வேண்டும். அல்லது ஒரு புதிய அமைப்பு தோன்ற வேண்டும்.
முதலில் தமிழ் எதிர்ப்பை ஒன்று திரட்ட வேண்டும். இல்லையென்றால் தெட்டம் தெட்டமாக சிதறி நின்று போராடி வெல்வது கடினம். ஏனெனில் நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் எனப்படுவது உதிரியானது அல்ல. கன்னியா வெந்நீரூற்று விவகாரமும் உதிரியானது அல்ல. அரசியல் கைதிகளுக்கான போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டம், காணிகளுக்கான போராட்டம் போன்றவையும் உதிரியானவை அல்ல. அவை ஒட்டுமொத்த வழி வரைபடம் ஒன்றின் கீழ் முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒருங்கிணைக்கப்படாத போராட்டங்களே.
இதிலுள்ள பயங்கரம் என்னவென்றால் ஒடுக்குமுறையானது நன்கு நிறுவனமயப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் அதற்கு எதிரான நடவடிக்கைகளோ ஒருங்கிணைக்கப்படாதவை. தெட்டம் தெட்டமானவை. இப்படியே தொடர்ந்தும் தெட்டம் தெட்டமாக எதிர்ப்பை காட்டினால் அது தமிழ் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்துவிடும். முடிவில் சலிப்படையச் செய்து விடும். கன்னியாவில் திரண்டதைப் போல முல்லைத்தீவிலும் மக்கள் தன்னியல்பாகத் திரள்கிறார்கள். அதாவது உணர்ச்சிகரமான விவகாரங்களின் மீது தன்னியல்பாகத் திரள்கிறார்கள். இத்திரட்சியை ஓர் அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற அமைப்புகள் இல்லை. இந்த வெற்றிடமே சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு துணிச்சலையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது.
உதாரணமாக கன்னியா விவகாரத்தில் அந்தப் பிரச்சினையை தொடர்ச்சியாகக் கையிலெடுக்க சட்ட அமைப்புகள் எதுவும் இருக்கவில்லை. முதலில் விவகாரம் கொழும்பிலுள்ள மூத்த தமிழ் சட்டத்தரணிகளிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் போதிய அளவு விரைவாக வழக்கை நகர்த்தவில்லை என்று அதில் சம்பந்தப்பட்டவர்கள் கருதியிருந்திருக்கக் கூடும். அந்த விவகாரம் கொதி நிலையை அடைந்தபோது அதில் சம்பந்தப்பட்ட தமிழரசு கட்சியை சேர்ந்த சிலர் விவகாரத்தை சுமந்திரனிடம் கையளிப்பதற்கு விரும்பினார்கள்.
இதுபோன்ற விவகாரங்களை கையாளுவதற்கு பொருத்தமான கட்சி சாராத சட்டச் செயற்பாட்டு அமைப்புக்கள் தேவை என்று கடந்த பல ஆண்டுகளாக நான் எழுதி வருகிறேன். எல்லாத் தமிழ் கட்சிகளை நோக்கியும் வடமாகாண சபையை நோக்கியும் புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளை நோக்கியும் பேரவையை நோக்கியும் அவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டி ருக்கிறது.
தமிழ் கட்சிகளுக்குள் நிறைய வழக்கறிஞர்கள் உண்டு. பேரவைக்குள் உண்டு. இவர்கள் அனைவரும் திரண்டு சட்ட செயற்பாட்டு அமைப்புகளை உருவாக்க தவறியது ஏன்? ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னர் முஸ்லிம் சட்டவாளர்கள் எவ்வளவு விரைவாக திரட்சியடைந்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் கெட்டிக்கார வழக்கறிஞர்கள் உண்டு. தமிழ் புலம் பெயர்ந்த சமூகத்திலும் சட்டத்தை தமது புலமை ஒழுக்கமாக கொண்ட பலர் உண்டு. இவர்கள் அனைவரையும் தாயகத்திலிருந்து யார் ஒருங்கிணைப்பது?
அப்படி ஒருங்கிணைத்தால்தான் கன்னியா, நீராவியடி விவகாரங்களில் சட்டச் சவாலை ஏற்படுத்தலாம். சிறிலங்காவின் நீதி பரிபாலன கட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட நீதியை வழங்கும் என்பதனை உலக சமூகத்துக்கு உணர்த்தவும் சிறிலங்காவின் சட்டக் கட்டமைப்பை அம்பலப்படுத்தவும் சட்டச் செயற்பாட்டாளர்கள் ஒன்று திரண்டு உழைக்க வேண்டும். இது தாயகத்தில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒரு சட்டப் பொறிமுறை மட்டுமல்ல அதற்கும் அப்பால் இனப்படுகொலை நடந்தது என்பதனை அனைத்துலக அரங்கில் நிரூபிப்பதற்கும் அப்படி ஒரு கட்டமைப்பு தேவை.
நீராவியடியில் விக்னேஸ்வரனின் கட்சியில் எதிர்காலத்தில் வேட்பாளராக இறக்கப்படக் கூடுமென்று எதிர்பார்க்கப்படும் அன்டன் புனிதநாயகம் காணப்பட்டார். அவரோடு சேர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர்களான சுகாசும் மணிவண்ணனும் காணப்பட்டார்கள். அங்கே பிக்குகளுக்கு எதிரான உணர்வுகளின் மத்தியில் கட்சி அரசியல் இருக்கவில்லை. சட்டத்தரணிகள் ஓரணியில் ஒன்றாக நின்றார்கள்.
இது நீராவியடி பிள்ளையாருக்காக ஏற்பட்ட ஒரு தற்காலிக ஒற்றுமையாக இருக்கக் கூடாது. மாறாக கன்னியா பிள்ளையார் கோயிலும் உட்பட எல்லா தமிழ் மரபுரிமை சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான சட்டச் செயற்பாட்டு இயக்கத்தை தொடங்குவதற்கு உரிய அடிப்படையாக இதை மாற்ற வேண்டும். கட்சி பேதங்களுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குள்ள அன்றாட பிரச்சினைகள் அனைத்துக்கும் முகம் கொடுக்கத் தேவையான ஒரு சட்டச் செயற்பாட்டு இயக்கத்தை தமிழ் வழக்கறிஞர்களும் ஓய்வு பெற்ற நீதிபதிகளும் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு தொழில்சார் செயற்பாட்டு அமைப்புகளை உருவாக்கினால் அது சாதாரண ஜனங்களுக்கு தொண்டு செய்யும் அரசியல் பாரம்பரியத்தை பலப்படுத்தும். இவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லாத் துறை சார் ஆளுமைகளும் தமது துறைகளில் அர்ப்பணிப்போடு தொண்டு செய்ய முன்வந்தால் அது தமிழ் அரசியலை வேறொரு கட்டத்துக்கு திருப்பும். ஏனென்றால் தொண்டு அரசியல் அதன் இயல்பில் பிழைப்புவாத அரசியலுக்கு எதிரானது.
அப்படி ஒரு சட்டச் செயற்பாட்டு இயக்கம் இருந்திருந்தால் யாழ்ப்பாணம் நாக விகாரையின் அதிபதியின் உடலை முத்த வெளியில் தகனம் செய்ய முயற்சித்த பொழுது பலமான எதிர்ப்பை காட்டி இருந்திருக்கலாம். அதுதான் தகன அரசியலின் தொடக்கம். அதுபோலவே திருகோணமலையிலும் மாணவர் கொலை வழக்கிலும் குமாரபுரம் கொலை வழக்கிலும் பொருத்தமான விதங்களில் சட்டச் சவால்களை ஏற்படுத்தியிருந்திருக்கலாம். அந்த வழக்குகளில் முதல் கட்டமாக தமிழ்த் தரப்பு தோற்று விட்டது.
ஆனால் நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரத்தில் தமிழ் தரப்பு சட்டரீதியாக வெற்றி பெற்றது. ஆனால் தீர்ப்பை அமுல்படுத்த பொலிசார் போதியளவு முயற்சிக்கவில்லை என்பது மட்டுமல்ல அவர்கள் தீர்ப்பை மீறியவர்களை பாதுகாத்தார்கள் என்று சம்பவ இடத்தில் நின்ற சட்டவாளர்கள் கூறுகிறார்கள். சட்டவாளர் சுகாஸ் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைச் சன்னமாகக் கூறுகிறார்….“தமிழ் மக்கள் சட்டத்தை நீதிமன்றத்தை மதிக்கிறார்கள்” என்று. சட்டவாளர் மணிவண்ணனும் ஒரு சொல்லைத் திரும்ப அழுத்தமாகக் திரும்பக் கூறுகிறார்…. “கௌரவ நீதிமன்று” என்று. ஆனால் நீதிமன்றத்தின் கௌரவத்தையும் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய போலீஸ் நீதிமன்றத்தை அவமதித்தவர்களைப் பாதுகாத்தது. எப்படி சில மாதங்களுக்கு முன் மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை மன்னித்து விடுதலை செய்தாரோ அப்படி. இலங்கைத்தீவின் நீதி தமக்குக் கட்டுப்பட்டது என்று ஆமத்துறுக்கள் கருதுகிறார்கள். படைத்தரப்புக் கருதுகிறது.
இதை நீதிமன்ற அவமதிப்பாக மட்டும் சுருக்கலாமா? அப்படி சுருங்கினால் அதைத் தனிய ஒரு சட்ட பிரச்சினையாகவே கையாள வேண்டி வரும். ஆனால் அது ஒரு சட்டப் பிரச்சினை மட்டுமல்ல. நீராவியடியில் சட்டவாளர் சுகாசோடு வாதாடிய ஒரு பிக்கு கை விரலை உயர்த்திக் காட்டி என்ன கூறுகிறார்? “இலங்கைத் தீவில ஆமதுறுவுக்கு முதலாம் இடம். உங்களுக்கு தெரியாதா?” என்றல்லவா கூறுகிறார்?
அதுதான் பிரச்சினை. ஆமத்துறுக்கள் நீதி பரிபாலனக் கட்டமைப்பை விடவும் உயர்வானவர்களாக மாறியது என்பது அரசியல்தான். அது சட்டப் பிரச்சினை அல்ல. அதை ஒரு அரசியல் விவகாரமாகத்தான் அணுக வேண்டும். நீராவியடி பிள்ளையார் மட்டுமல்ல கன்னியா பிள்ளையார், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம், அரசியல் கைதிகளின் போராட்டம், காணிக்கான போராட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் அனைத்துமே அரசியல் விவகாரங்கள். அவற்றுக்கு அரசியல் தீர்வுதான் வேண்டும். அதற்காகத் தமிழ் எதிர்ப்பை, தமிழப் பலத்தை, தமிழ் நிதியை, தமிழ் அறிவை ஒன்று திரட்ட வல்ல ஒரு வெகுசன அமைப்பு வேண்டும். உடனடியாக வேண்டும்.
நிலாந்தன். அரசியல் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர்.