மொரிஷியஸ், ஓர் அழகிய தீவு. இஃது ஆபிரிக்காக் கண்டத்திற்கு அருகிலே, மடகஸ்கர் என்ற மிகப் பெரிய தீவுக்கு அருகில் உள்ளது. இலங்கையிலிருந்து தென்மேற்காக, 3370 கி.மீ தொலைவிலே இந்தச் சிறிய தீவு அமைந்திருக்கிறது.
உலகப் படத்தை உற்று நோக்கினால் தான் இந்தச் சிறிய புள்ளியை நாம் அடையாளம் காண முடியும். இந்தத் தீவின் நீளம் 65 கி.மீ, அகலம் 45 கி.மீ இதன் கடற்கரையின் நீளம் 160 கி.மீ, மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ.
வரலாறு :
இந்தத் தீவில் 16ஆம் நூற்றாண்டு வரை யாரும் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை. 16 ஆம் நுற்றாண்டுக்குப் பிறகே இங்கு மக்கள் வரத் தொடங்கினர். முதன் முதலாகப் போர்த்துக்கேயர், இந்தத் தீவைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, டச்சு நாட்டவரும் இங்கே ஆட்சி செய்தனர். பின் பிரான்ஸ் தேசத்தின் கீழ் இந்தத் தீவு வந்தது. கடைசியாக, இந்தத் தீவை பிரித்தானியர்கள் கைப்பற்றினர். அவர்களிடமிருந்து இந்தத் தீவு 1968 மார்ச் 12ம் திகதி சுதந்திரம் பெற்றது.
ஆகவே இந்த நாட்டின் பூர்வ குடிமக்கள் என்று சொல்லிக்கொள்ள யாரும் கிடையாது. இங்குள்ள மக்கள் அனைவரும் பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள். முக்கியமாக, ஆசியாவிலிருந்தும் ஐரோப்பியாவிலிருந்தும் ஆபிரிக்காவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த மக்களே இங்கே குடியேறினர்.
இந்தத் தீவுக்கும் இலங்கைக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. நம்மையும் பிரித்தானியர்கள் ஆண்டார்கள். இந்தக் குட்டித் தீவையும் அவர்களே ஆண்டார்கள். பிரித்தானியர்களிடமிருந்தே இலங்கையும் மொரிஷியஸ¤ம் விடுதலை பெற்றன.
மொரிஷியத் தீவின் முதல் பிரதம மந்திரி, சர் சிவசாகர் இராம்குலாம், அவரே அந்த நாட்டின் சுதந்திரத்திற்கு முக்கிய காரணகர்த்தர், அந்த நாட்டின் தந்தை என்று போற்றப்படுபவர். அவருடைய தலைமையின் கீழ்தான், இரத்தம் சிந்தாமல் மொரிஷியஸ் சுதந்திரம் பெற்றது.
இந்தத் தீவுக்கு முதலில் வந்தவர்கள், நிறைய அடிமைகளைக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அடிமை வியாபாரம் மிகுதியாக நடைபெற்றது காரணம் பிரெஞ்சுக்காரர்களே. இவர்கள், அடிமைகளை வாங்கி விற்பதையும் அவர்களை வைத்துக் கடுமையாக வேலை வாங்குவதையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தார்கள்.
அடிமைகளைக் கொடூரமாக நடத்தியது. மொரிஸியஸ் வரலாற்றின் கருப்புப் பகுதியாகும். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அடிமைகள் விடுதலை பெற்றனர்.
இந்திய வம்சாவளியினர் :
அதன் பின் நாட்டிலே தேயிலையும் கரும்பும் விளைவிக்கப் பிரரெஞ்சு அரசும் அதன் பின் வந்த பிரிட்டிஷ் அரசும் முயன்றன. இங்கே கடுமையாக உழைக்க, நிறைய வேலையாட்கள் தேவைப்பட்டார்கள். அவர்களுள் பெரும்பான்மையானவர்களை பிரெஞ்சு அரசும் பிரிட்டிஷ் அரசும் இந்தியாவிலிருந்து கொண்டு வந்தன.
இந்தியாவின் கேரளம், வங்காளம், புதுச்சேரி, மராட்டியம் ஆகிய பகுதிகளிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக இவர்களைக் கொண்டு வந்தன. அப்படி வந்த இவர்களைத் தேயிலைத் தோட்டங்களிலும் கரும்புத் தோட்டங்களிலும் வேலைக்கு அமர்ந்தினர்.
இந்த நாட்டின் 55 விழுக்காட்டினர். இந்திய வம்சாவளியினர், மொரிஷியஸ் தீவு. இந்தியாவிலிருந்து பல ஆயிரம் கி.மீ தொலைவில் இருக்கிறது. அடிக்கடி சென்று வரக்கூடிய வாய்ப்பு இல்லை.
இதனா இந்தியர்களுக்கு அவர்களின் தாய்நாட்டுடன் கூடிய தொடர்பு, வெகுவாகப் பாதிக்கப்பட்டது. எனவே இந்திய வம்சாவளியினர், மொரிஷியசில் இருந்த பழக்க வழக்கங்களையே ஏற்று, அதன்படி வாழத் தொடங்கினார்கள்.
அப்படி வாழும் இந்தியர்கள் இன்றைய மொரிஷியஸ் மக்கள் தொகையில், 55 வீதம் ஆவார்கள். இந்த நாட்டின் பணம், ரூபாய் என்ற பெயரிலேயே வழங்கப்பெறுகிறது. மொரிஷியஸ¤ ரூபாய்த் தாளில் அந்த ரூபாயின் மதிப்பு, தமிழ் எண்களிலும் எழுத்துகளிலும் எழுதப்பட்டுள்ளது.
மொரிஷியஸில் இந்துக் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் சிவராத்திரியை, மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இங்கே உள்ள சிவன் கோவில் ஒன்றில் அந்த நாளில் பல இலட்சம் பேர் கூடி வழிபடுகின்றனர். இங்குள்ள காளி கோவிலில் தீமிதி நடக்கிறது. சிறிய குன்றின் மேலே முருகன் கோவில் இருக்கிறது. தைப்பூச விழாவை, மிக விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். காவடி எடுத்து, அலகு குத்தி, முருகனை வழிபடுவதைக் கண்டால், நமக்கு வியப்பு மேலிடும்.
மொரிஷியஸில் தேவாரம் படிக்கின்றனர். தமிழில் வாசித்தாலும் அவர்களுக்குத் தமிழ் எழுத, படிக்கத் தெரியாது. தேவாரத்தைப் பிரெஞ்சு மொழியில் எழுதியே வாசிக்கின்றனர். தமிழ்ப் பெயர்கள் அனைத்து பிரெஞ்சு மொழியைச் சார்ந்த பெயர்களாகத் திரிந்துள்ளன. பிறர் தங்களை எளிதில் அழைக்க ஏதுவாக இவ்வாறு மாற்றிக்கொண்டுள்ளார்கள்.
மொரிஷியஸில் மக்களாட்சி அடிப்படையிலான அரசாட்சி நடைபெறுகிறது. முறையான சுதந்திரமான தேர்தல்களை நடத்துகிறார்கள். இந்திய வம்சாவளியினர் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரே பிரதமராகச் செயலாற்றும் வாய்ப்பு உள்ளது.
தொடரும்…
நன்றி : இன்று ஒரு தகவல் | உலகநாதன்