Sunday, March 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 46 | “கப்பு முக்கியம்” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 46 | “கப்பு முக்கியம்” | டாக்டர் ரி. கோபிசங்கர்

11 minutes read

“ கப்பு முக்கியம் “

“வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருக்கும் தாழமுக்கம் ரெண்டு நாளில் வலுப்பெற்று கொட்டும் மழையோடு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்” எண்டு வானிலை அறிக்கையை radio வில சொல்லிக் கொண்டிருந்திச்சினம். இதைக் கேட்ட மனிசி “சூறாவளி வந்தாலும் வரும் கொஞ்ச நாளைக்கு வள்ளம் போகாது இண்டைக்காவது மீன் வாங்கித்தரலாம் தானே“ எண்டு கேக்க, சரியெண்டு வெளிக்கிட்டன்.

எங்க மீன் வாங்கினாலும் பாசையூர் மீன் மாதிரி ருசி இருக்காது. அதோட சந்தைக்குப் போய் விடுப்புப் பாத்த படி, வள்ளம் வாறதை, மீன் இறக்கிறதை , அதைக் கூறிறதை எல்லாம் ரசிச்ச படி, wholesale விலை வாசியை தெரிஞ்சு கொண்டு அப்பிடியே சந்தையில சில்லறை வியாபாரத்தில மீனை வாங்கி வெட்டிக்கொண்டும் வரலாம். மாரிகாலத்தில பிடிக்கிற மீன் ருசி கூட , அதிலேம் மழைவெள்ளம் கடலில கலக்கிற நேரம் வாற குதிப்பு மீன் தனி taste.

கைபிடீல மூண்டு shopping bag உள்ள வைச்சு கொழுவின படி இருந்த plastic கூடையோட சைக்கிளை உழக்கினன்.

மெல்லப் போய் அந்தோனியாரைத் தாண்டி கடற்கரைப் பக்கம் திரும்பின உடனேயே ஒரு காலநிலை மாற்றம் வந்த மாதிரி இருந்திச்சுது. கடற்கரை ரோட்டில திரும்பக் கடல் எங்க முடியுது மேகம் எங்க தொடங்குது எண்டு விளிம்பு தெரியாம இருந்த கடலுக்குள்ள மழை பெய்யிறது மட்டும் தெரிஞ்சுது.

மழை பெய்யிறதை ரசிக்கிற மாதிரி மழை இந்தா பெய்யப் போறன் எண்டு மேகம் மூடிக்கொண்டு வரேக்கேம் ர(ரு)சிக்கலாம் . காலமை கருமையாகி காகம் பறக்கிறது தெரியாமல் கொக்கு மட்டும் வெள்ளை வெளேர் எண்டு தெரியிற மேகம். இன்னும் கொஞ்சம் உழக்க அடிக்கிற குளிரில காது மட்டும் சூடாக, முகத்தில படுற குளிர் காத்து காதில படேக்க சுள்ளெண்டு குத்திற இன்பமான வேதனை, முயற்சி செய்தும் நிறுத்தேலாமல் கிடுகிடுக்கிற பல்லு , இழுத்த மூச்சு சுவாசப்பையோட நிக்க அடிவயித்தால காலுக்குள்ள இறங்கி காலை மட்டும் நடுங்கப் பண்ணிற குளிர், ஒடிற எங்களை விட்டிக் கலைச்சுக்கொண்டு சடசடவெண்டு சத்தத்தோட கலைச்சுக்கொண்டு வாற மழை எண்டு ரசிச்சுக்கொண்டு போக , அதை ரசிக்கவிடாம ஒண்டுரெண்டு மழைத்துளி தலையில விழ இன்னும் கொஞ்சம் இறுக்கி உழக்கினன்.

திரும்பிப் பாக்க கடலுக்க மட்டும் பெஞ்ச கன மழை அலையோட கரைப்பக்கம் வாறது தெரிஞ்சுது. காத்தோட மழை பெய்யிறதையும் அந்த இருட்டுக்குள்ள இருந்து வாற அலையில வள்ளங்கள் எழும்பி விழுந்து வாறதைப்பாக்க, “மெழுகுவர்த்தி ஏத்தி , மண்டியிட்டு “ மாதாவே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மகனை நீ தான் இந்தப் புயலில இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தாய் மன்றாடினாள் “ எண்டு ஐஞ்சாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில வாசிச்ச ஞாபகம் வந்திச்சுது.

கடற்கரை ரோட்டால அப்பிடியே போக , MGR சிலைக்கு போன கிழமை நடந்த விழாவுக்குப் போட்ட மாலை காத்துக்குப் பறந்து கொண்டிருந்திச்சுது. முன்னால இருக்கிற தேத்தண்ணிக்கடையில “ தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் “ எண்டு situationக்கு ஏத்ததாய் TMS பாடினார். சந்தையடியில மழைக்குளிர் எண்டால் என்ன எண்டு கேக்கிற சமூகம் , மற்றச் சனத்தின்டை சாப்பாட்டுக்காய் ஓடிஓடி வேலை செய்து கொண்டிருந்தது.

இந்த மழைக்கேம் நாலு பேர் காத்துப் போன பந்தைப் போட்டு அடிச்சுக்கொண்டு இருந்தாங்கள். பேருக்கு மட்டும் அது கடற்கரை ஆனாலும் முள்ளோ கல்லோ குத்தாம மண்ணில நடக்கவும் ஏலாது , முக்கிக் கடல்ல குளிக்கவும் ஏலாது . ஆனாலும் அலைக்கு கூட அரிக்காத கடற்கரை கல்லெல்லாம் கால் மிதிப்பில கரையிற அளவுக்கு அங்க விளயாட்டு நடக்கும் . இருட்டுக்க கடல்ல இருக்கிற மீனே தெரியிறவன் கண்ணுக்கு பந்து எப்பவும் தெரியும் எண்டதால விளையாட்டுக்கு நேரம் காலம் கிடையாது.

என்னதான் கிரிக்கட் நல்ல விளையாட்டா இருந்தாலும் அது நெச்ச உடன எல்லா இடத்திலேம் விளயாடேலாது. அதோட Cricketஐப் பற்றி அதை விளயாடினவங்கள் மட்டும் தான் கதைப்பாங்கள். ஆனால் football அப்பிடியில்லை விளையாடின ஆக்களிலும் பாக்க விளையாட்டைப் பாக்கிற ஆக்கள் கதைக்கிறது கூட . யாழ்ப்பாணத்தில கூடுதலா விளையாடிறதும் விரும்பிப் பாக்கிறதும் football தான். விளையாட்டுத் தொடங்க முதல் இருந்து முடிஞ்சு வீட்டை போனாப்பிறகு கூட பரபரப்பா பாக்கிறதும் கதைக்கிறதும் football தான்.

இந்த ஊரில வீட்டில என்ன தான் வசதி இல்லாட்டியும் ஒவ்வொரு வீட்டிலேம் ஒரு Maradona, Baggio, Ronaldo கனவோட ஒருத்தனாவது இருப்பாங்கள் . சாப்பாடே அவங்களுக்கு பந்தடிக்கிறது தான். நாவாந்துறையில இருந்து பருத்தித்துறை வரை இது தான் நிலமை . அவை இல்லாமல் யாழ்ப்பாணத்தில football இல்லை.

செல்லடி, துவக்குச்சூடு, மழை எண்டும் பாக்காம ஒவ்வொரு நாளும் தொழிலுக்குப் போறவங்கள் ஆனாலும் தங்கடை ஊர் club விளையாடிற match எண்டா தொழிலுக்கும் போகாம வந்திடுவாங்கள். வந்தவனும் சும்மா நிக்கமாட்டாங்கள். உள்ள போட்டிருக்கிற shorts தெரிய சாரத்தை மடிச்சுக்கட்டீட்டு பந்து போற இடமெல்லாம் தானும் ஓடித்திரிவாங்கள் . coach க்கும் மேலால “ நல்ல தமிழில”சத்தம் போடுவாங்கள். ஆனாலும் தப்பித்தவறி தோத்திட்டால் referee, எதிரணி , தங்கடை அணி எண்டு எல்லாருக்கும் விழும் , பேச்சு மட்டுமில்லை சிலநேரம் அடியும் தான். இப்பிடியான match முடிஞ்ச உடனயே பாஞ்சு வீட்டை ஓடிப் போறது referee மாரும் tournament வைச்சவையும் தான். சிலவேளை பரிசளிப்பு விழா கூட நடக்குறேல்லை, பேப்பரில பாத்துத்தான் முடிவு தெரிய வரும். இயக்கம் இருக்கேக்க சண்டைபிடிச்சா விளையாடத் தடை எண்டு தொடங்கினாப்பிறகு தான் கொஞ்சம் குறைஞ்சுது.

இப்பிடி இருக்கேக்க தான் ஊரில போன கிழமை சமாசத்தின்டை வருசக் கூட்டம் வாசிகசாலையிலை நடந்தது. வரவு செலவுக் கணக்கு முடிய, இந்த முறை சேத்த காசில என்ன செயவம் எண்டு கதை்தொடங்கிச்சுது.

“ ஒரு வருசம் தடைக்குப் பிறகு போனகிழமை தான் விளையாட விட்டவங்கள் இவங்களை , பெரிய ரோயும் சின்ன ரோயும் என்ன விளயாட்டு , உவன் கெவின் அடிச்ச அடி விண் கூவிச்சுது எண்டாலும் கடைசீல ஒரு goal அடிச்சு அவங்கள் வெண்டிட்டாங்கள், இவங்ககளுக்கு நல்ல சப்பாத்தும் சாப்பாடும் தேவை ,நாங்கள் தான் இந்த முறை சமசத்தால வாங்கிக் குடுக்கோணும்” எண்டு மதி சொன்னதுக்கு கொஞ்சப் பேர் ஒமெண்ட, கனக்கப் பேர் புறுபுறுக்க சமாசத்தின்டை தலைவர் கையைத்தூக்கினார் . அந்தச் சலசலப்பு அடங்க முதல், “ ரெண்டு வருசமா ஊரில நிறையப் பிரச்சினை நான் எத்தினை தரம் சொன்னான் உந்தக் கோயிலை திருத்துங்கோ எண்டு” ஒரு ஆச்சி சொல்ல இளசுகள் கூக்காட்டத் தொடங்கிச்சுதுகள்.

“ கருவாடு காய வைக்க , வலை தைக்க இடம் வேணும்” எண்டு மகளிர் வேண்டுகோளும் வர முடிவெடுக்கேலாமல் கடைசியாய் ஓரமா இருந்த மாஸ்டரைக் கேட்டச்சினம். மாஸ்டர் ஊரில மரியாதைக்கு உரியவர் பழைய football விளையாட்டுக்காரன். “ பிள்ளைகளுக்குப் பிராக்கில்லை, விட்டால் கெட்டுப் போடுவங்கள் இப்பத்தை நிலமையில விளையாட்டுக்குச் செலவு செய்யிறது நல்லம்” எண்டார் மாஸ்டர் .

விளையாடிறதில்லை விளையாடி வெண்டாத்தான் ஊருக்கு மரியாதை எண்டு முடிவோட, இந்த மூண்டு மாதத்துக்கு சமாகத்துக்கும் , ஐக்கிய விளையாட்டுக் கழகத்துக்கு ஒண்டு காணாது ரெண்டு மீனாத் தாங்கோ, கழகத்துக்கு காசைக்குடுப்பம் ஆனா “ கப்பு “ முக்கியம் எண்ட condition ஓட meeting முடிஞ்சுது.

வலையை பாறையில காய வைக்க , ரோட்டோரமா மீனைக் காயப்போட , மாதா கோயில் கூரைக்கு ஆரோ பழைய தகரம் ரெண்டைக் கொண்டந்து போட சம்மதிக்க, சமரசம் வந்திச்சுது கூட்டத்தில.

வள்ளம் கிட்டவர முதலே இஞ்சின் சத்தத்திலையே உசாரான மதி ,“இந்தா வருது “ எண்டு சொல்லி கூற ஆய்த்தமானான். பாத்துக்கொண்டிருந்த வியாபாரிமார் கிட்ட வந்திச்சினம். வள்ளத்தை கரைக்கு கொண்டு வந்து நிப்பாட்டீட்டு வாயை மட்டும் வெட்டின பிளாஸ்டிக் bucket க்கு கட்டி இருந்த நைலோன் நூலைப் பிடிச்சு இறக்கிக் கொண்டு வந்திச்சினம் வள்ளக்காரர்.

கொண்டு வந்த பெட்டியோட கவிட்டுக் கொட்டின கும்பலில ரெண்டு மீன் சமாசத்துக்கும் ஒண்டு கூறிற ஆளுக்கும் எண்டு எடுத்து வைச்சிட்டு கூறத்தொடங்கினான் மதி. குவிச்ச மீன் கும்பலை பரவி விட , கண்ணால நிறை பாத்து , கலந்திருக்கிற மீன் பாத்து , அடிப்படை விலை பாத்து கையில இருக்கிற காசைப்பாத்து வியாபாரிமார் விலை கேட்டு காசைக் குடுத்துக் கணக்கை முடிச்சிட்டு சைக்கிளில இருந்த பெட்டீல கொட்டீட்டு விக்கிறதுக்கு வெளிக்கிட அடுத்த கூறல் தொடங்கிச்சுது.

இதைப் பாத்த படி, தாண்டிப் போய் சில்லறை வியாபாரீட்டை என்ன மீன் வாங்கிறது எண்டு குழம்பி கடைசீல “சீலையை வித்தாவது சீலா வாங்கோணும்” எண்டு முந்தி ஆச்சி சொன்ன ஞாபகத்தில, சீலாவும், விளையும் வாங்கி, அதோட கூனிறால் கூறும் , நூறு ரூவாய்க்கு காரலும் பொரிக்க எண்டு வாங்கிக் கொண்டு வீட்டை போக மனிசி மண் சட்டியை கழுவி அடுப்பை மூட்டீட்டு பாத்துக் கொண்டிருந்திச்சுது.

அம்மீல கூட்டரைச்சு சீலாத் துண்டைப் போட்டு வைச்ச மீன் குழம்பும், றால் வறையும், விளைமீன் பொரியலும் சோத்தோட மழைக் குளிருக்க சாப்பிட, அடுத்த நாளும் பாசையூருக்கு சைக்கிள் தன்டபாட்டை போகும்.

Dr. T. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 22 | பொறுப்பு துறப்பு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 24 | இந்த அடி நாளைக்கு… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 25 | பக்கத்து இலைக்கு பாயாசம்…. | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 27 | தலை கால் தெரியாம… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 28 | தாண்டாக்கடல் | டாக்டர் ரி. கோபிசங்கர் …

சுவடுகள் 29 | அழையா விருந்தாளி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 30 | உண்ட களை தொண்டருக்குமாம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 31 | சுயம் இழந்த சரிதம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 39 | இலக்கை நோக்கி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 40 | ‘பாலுமகேந்திரா’ | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 41 | ‘காய்ச்சல்’ | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 42 | ஏற்றுமதி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 43 | பாஸ் எடுத்தும் fail | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 44 | வெத்து இலை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 45 | பிரி(யா)விடை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More