March 23, 2023 7:46 am

மொரிஷியஸ் தீவு | இருபத்திரண்டு மொழிகள் பேசப்படுகின்றன | பகுதி 2மொரிஷியஸ் தீவு | இருபத்திரண்டு மொழிகள் பேசப்படுகின்றன | பகுதி 2

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பூலோகச் சொர்க்கம்:

இந்தத் தீவு, மிக அழகானது. இதன் அழகை வர்ணிக்கும்போது, இறைவன், மொரிஷியத் தீவைப் படைத்துவிட்டு, அதன் சாயலில் சொர்க்கத்தைப் படைத்தான், என்று பெருமையாகச் சொல்வர்கள். அவ்வளவு அழகிய கடல். இந்தக் கடலின் பல இடங்களில் ஒரு குண்டூசியைப் போட்டாலும் அதைப் பார்த்து எடுத்துவிடலாம். அந்த அளவுக்குத் தெளிவான தண்ணீர்.

சில இடங்களில் நீங்கள், கரையிலிருந்து கடலுக்குள் ஒரு கி.மீ நடந்தாலும் இடுப்பளவு நீரிலேயே இருப்பீர்கள். கடல் மீன்களும் கடல் அழகும் உங்களைக் கவரும். இந்த நாட்டில் உல்லாசப் பயணிகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். காரணம், அந்தக் கடல், அவர்களை அவ்வளவு ஈர்க்கிறது. கடற்கரையை மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் பேணிக் காக்கின்றனர்.

மொரிஷியசில் அழகிய அருவி ஒன்றும் உள்ளது. பல வித நிறங்களில் மணல் உள்ளது. குறிப்பிட்ட ஓரிடத்தில் எட்டு நிறங்களில் மணல் உள்ளது என்றால் நம்புவீர்களா?

மொரிஷியஸில் ஒரு காலத்திலே அதிகமான தீப்பிழம்புகள் இருந்தன. அந்தத் தீப்பிழம்புகள், கற்பாறைகளாக உறைந்துள்ளமையை இன்றும் காணலாம்.

தொழில் வளர்ச்சி:

மொரிஷியஸில் முதலில் தேயிலையை அதிகமாகப் பயிரிட்டனர். ஆயினும் அந்தத் தேயிலைக்கு உலகச் சந்தையில் அதிக மதிப்பு கிட்டவில்லை. எனவே தேயிலையைத் தங்கள் தேவைக்கு மட்டும் வைத்துக்கொண்டு. கரும்பையே அதிகமாகப் பயிரிடுகிறார்கள்.

மொரிஷியஸில் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கரும்புத் தோட்டங்களையே காணலாம். இந்தக் கரும்புகள், கரும்பு ஆலைகளில் சர்க்கரையாக மாறி, உலகச் சந்தையில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. கரும்பும் சர்க்கரையும் மொரிஸியஸின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

மொரிஷியஸில் தைத்த ஆடைத் தொழிலும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மொரிஷியஸின் ஆடைத் தொழிலில் இலங்கையிலிருந்தும் சுமார் 4 ஆயிரம் பேர்கள் கடமை ஆற்றுகிறார்கள்.

உல்லாசப் பயணிகளின் உடனடித் தேர்வு:

மொரிஷியஸ் உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகளை அழகுறக் கட்டியுள்ளனர். இவை, மிக உயர்ந்த தரத்தைச் சார்ந்தவை. ஒரு நாளைக்கு ஓர் அறைக்குச் சுமார் 40-50 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் வாடகைக் கட்டணம் அமைந்துள்ளது. அவ்வளவு அழகான கடலும் கடற்கரையும் இருப்பதால் இவ்வளவு கட்டணம் விதிக்கப்படுகிறது. அதிக செலவில் உள்ள அறைகளைப் போலவே குறைந்த செலவிலும் அறைகள் உள்ளன.

கடல் நீர் தொடர்புடைய பல்வேறு விளையாட்டுகள், இங்கே உள்ளன. பல்வேறு விசைப் படகுகளில் பயணிக்கலாம். விமானத்திலிருந்து பராசூட் அணிந்துகொண்டு, தண்ணீரில் குதிக்கலாம். கடலுக்கு அடியில் நடக்கலாம். இவ்வாறு உல்லாசப் பயணிகளுக்குப் பலவித விநோதங்கள் இங்கே உள்ளன. இவை, அவர்களை வெகுவாக ஈர்க்கின்றன.

இந்தச் சிறிய தீவுக்கு ஓர் ஆண்டுக்கு, இப்பொழுது 9 இலட்சம் உல்லாசப் பயணிகள் வருகிறார்கள். இலங்கைக்கோ, இந்த நல்ல சூழ்நிலையில் 8 இலட்சம் பேர்கள் மட்டுமே வருகிறார்கள். இந்தச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஓர் ஆண்டுக்கு 20 இலட்சமாக உயர்ந்த, மொரிஷியஸ் அரசு முயன்று வருகிறது.

இலங்கையிலிருந்தும் இதர நாடுகளிலிருந்தும் புது மணத் தம்பதியினர் அநேகமானோர், தங்கள் தேனிலவுக்காக மொரிஷியஸ¤க்குச் செல்வது வழக்கமாகி வருகிறது. மனத்திற்கு மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் தங்கள் தேனிலவைக் கழிக்கலாம் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

இலங்கையில் கெளரவத் தூதரகம்:

மொரிஷியசின் கெளரவத் தூதரகம், இலங்கைத் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் செயல்படுகிறது. இலங்கையிலிருந்து மொரிஷியஸ் செல்ல விரும்புவோர். தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால், இந்தத் தூதரகத்திலேயே மொரிஷியசுக்குள் நுழைய அனுமதியை (விசா)ப் பெறலாம்.

மொரிஷியஸ் தீவை அடைவதற்குப் பல வழிகள் உள்ளன. சிங்கப்பூர், சென்னை, மும்பை, டில்லி, துபாய் ஆகிய மாநகரங்களின் வழியே செல்லலாம். இவற்றுள் துபாய் வழியே தினமும் மொரிஷியஸ¤க்குச் செல்லும் வசதி உண்டு.

இலங்கையிலிருந்து துபாய் செல்ல, 4 மணி நேரம் ஆகும். துபாயிலிருந்து மொரிஷியஸ¤க்குச் செல்ல 6 மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து வாரம் ஒரு முறை, மொரிஷியஸ¤க்குச் செல்ல விமானம் இருக்கிறது. இது, சுமார் 7 மணி நேரப் பயணமாகும். பயணக் கட்டணம் சுமார் 80 ஆயிரம் முதல் 1 இலட்சம் வரை இருக்கும். இந்த அழகிய தீவுக்கு நீங்களும் ஒரு முறை சென்று, அனுபவித்து வரலாமே.

கெளரவ தூதுவரின் செய்தி:

உலகப் படத்திலே மொரிஷியஸ் தீவு ஒரு புள்ளி. ‘கடுகு சிறிதானாலும் காரம் பெரிது’ என்று சொல்வது போல் இந்த சிறிய மொரிஷியஸ் தீவு பல பெருமைகளை உள்ளடக்கியது. இலங்கை தீவுக்கும் மொரிஷியஸ் தீவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

இந்தியாவிலிருந்து தேயிலை தோட்ட வேலைக்காக இலங்கைக்கு இந்திய மக்கள் அழைத்து வரப்பட்டார்கள். மொரிஷியஸ் தீவுக்கும் இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக மக்கள் அழைத்து வரப்பட்டார்கள். இரு தீவுகளுமே பிரித்தானியாவிடம் இருந்து தான் சுதந்திரம் பெற்றன.

இரு தீவுகளுக்கிடையே உள்ள ஒரு பெரிய வித்தியாசம் இலங்கை இந்தியாவுக்கு மிக சமீபத்தில் இருந்த காரணத்தினாலும், கப்பல் போக்குவரத்து இருந்த காரணத்தினாலும் இலங்கை இந்திய தமிழர்களுக்கு இந்தியாவுடனான தொடர்பு இருந்து வந்தது.

மொரிஷியஸ் தீவில் இருந்து இந்தியா பல ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தமையாலும், கப்பல் போக்குவரத்து இல்லாமை காரணத்திலும் அங்கு வாழ்ந்த இந்திய மக்களுக்கு தாய் நாட்டுடன் தொடர்பு அற்றுப் போய் விட்டது. அங்கு வாழும் பத்து வீதமான தமிழர்களுக்கு தமிழ் பேசவோ, படிக்கவோ தெரியாது ஆனால் தமிழ் மீது மிகுந்த பற்றுண்டு.

மொரிஷியஸ் தீவில் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன் மனித நடமாட்டம் இல்லாத போது ‘டோடோ’ என்ற வாத்து போன்ற பறவைகள் பல ஆயிரக்கணக்கில் இருந்தன இந்தப் பறவைகளுக்கு பறக்கவோ, ஓடவோ முடியாது. இந்தப் பறவைகளை அங்கு முதலில் வந்த மனித இனம் ஒழித்துக்கட்டியது.

இங்குள்ள எல்லா மக்களுமே எழுத்து அற்ற ‘கிரியோல்’ என்ற மொழியை பேசுகிறார்கள். இந்த மொழிக்கு இலக்கணம் இல்லாத காரணத்தினாலே மொரிஷியஸ் தீவுக்கு வருகின்ற எல்லோருமே இந்த மொழியை சுலபமாக கற்றுக்கொள்கின்றனர்.

இந்தக் குட்டித் தீவிலே இருபத்திரண்டு மொழிகள் பேசப்படுகின்றன என்றால் நம்புவீர்களா? தனி மனித வருட வருமானம் இலங்கை ரூபா ஒன்பது இலட்சத்தையும் தாண்டி நிற்கின்றது.

 

 

முற்றுப் பெற்றது…

 

 

 

நன்றி : இன்று ஒரு தகவல் | உலகநாதன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்