Saturday, May 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை நவ. 19 | இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு!நவ. 19 | இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு!

நவ. 19 | இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு!நவ. 19 | இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு!

4 minutes read

ஒரு அமைதியான பெண்மணியாக அரசியலில் வாழ வந்து , நாட்டின் அசைக்க முடியாத தலைவராக உயர்ந்து தானே அதை தகர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டு வந்த வரலாறு இந்திராவுடையது.

விடுதலை போரில் குடும்பமே கலந்து கொண்ட சூழலில்தான் இந்திரா பிறந்தார். அப்பாவும்,தாத்தாவும் அடிக்கடி சிறைக்கு போவதையும் விடுதலைப்போரில் ஈடுபடும் எண்ணற்றோர் வந்து போவதையும் பார்த்தே அவரின் இளமைக்காலம் நகர்ந்தது. கூடவே,அவரே வானர சேனை என்கிற அமைப்பை அமைத்து சிறுவர்களை கொண்டு விடுதலைப்போருக்கு உதவவும் செய்தார். சாந்தி நிகேதனில் பெற்ற கல்வி,நேருவின் கடிதங்கள் அவரை செதுக்கின. இந்திராவுக்கு ஜோன் ஆப் ஆர்க் மிகப்பெரிய ஆதர்சம் .

இந்திரா தன் அன்னை உடல்நலம் இல்லாத பொழுது அவரை கவனிக்க வந்த பெரோஸ் காந்தியுடன் காதல் பூண்டார். சில போராட்டங்களுக்கு பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். விடுதலை பெற்ற பின் நேரு இந்தியாவின் பிரதமர் ஆனதும் அவரின் பி.ஏ போலவே இந்திரா பங்காற்றினார். பெரோஸ் காந்தி காங்கிரஸ் எம்.பி யாக இருந்தாலும் முந்த்ரா ஊழல்,காப்பீட்டு ஊழல் என்று ஊழல்களை வெளியே கொண்டு வந்து காங்கிரசுக்கு சிக்கலை உண்டு செய்தார்.

நேருவும் முறையான விசாரனைக்கு உத்தரவிட்டு நடவடிக்கைகள் எடுத்தார். இந்திராவுக்கும்,பெரோஸ் காந்திக்கும் இடையே இருந்த விரிசல் ஒட்டுப்படுவதற்கு முன்னமே பெரோஸ் இறந்து போனார். கையில் இரண்டு குழந்தைகள் இருந்தார்கள்.

நேருவுடன் இந்திரா தொடர்ந்து செயலாற்றினார். ஒரு முறை அவரை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆக்கினார் நேரு. அப்பொழுது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள கம்யூனிஸ்ட் அரசை கலைக்கச்சொல்லி நேருவை கட்டாயப்படுத்தி அதை சாதிக்கவும் செய்தார். நேரு இவரை தனக்கு அடுத்து வாரிசாக ஆக்க எண்ணவில்லை. தன்னுடைய நெருங்கிய தோழிக்கு எழுதிய கடிதத்தில் சீக்கிரம் அமெரிக்காவில் வந்து செட்டில் ஆகலாம் என்று எண்ணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

நேருவின் மறைவுக்கு பின்னர் சாஸ்திரி பிரதமர் ஆனதும் இந்திராவை மொத்தமாக லண்டனுக்கு தூதுவராக அனுப்பி மொத்தமாக அரசியல் வாழ்வை அஸ்தமித்து விடலாம் என்று எண்ணினார். அவர் தாஷ்கண்ட்டில் இறந்து போக, சொன்ன பேச்சை கேட்பார் என்று நம்பி சிண்டிகேட்டின் காமராஜர், நிஜலிங்கப்பா முதலியோர் இந்திராவை பிரதமர் ஆக்கினார்கள்

நாடாளுமன்றத்தில் குங்கி குடியா (ஊமை பொம்மை ) என்று லோகியா குறிக்கிற அளவுக்கு ஆரம்ப காலங்களில் திணறிக்கொண்டுதான் இருந்தார் இந்திரா. சிண்டிகேட்டின் ஆதிக்கம் அவரை வெறுப்பேற்றியது. அவர்களை மீறி ரூபாயின் மதிப்பை குறைத்தார் ; மொரார்ஜி தேசாயை பதவி இறக்கம்செய்தார். ஜனாதிபதி தேர்தலில் ஜகஜீவன் ராமை இவர் ஆதரிக்க போக சிண்டிகேட்டோ இவருக்கு தொல்லை தரக்கூடிய சஞ்சீவ ரெட்டியை நிறுத்தியது. இவரின் ஆசி பெற்ற சுயேச்சை வேட்பாளர் வி.வி.கிரியை மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என்று சொல்லி வெல்ல வைத்தார் இவர். கட்சி உடைந்தது.

பிற கட்சிகளின் உதவியோடு ஆட்சி செய்து வந்த இந்திரா பின்னர் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி பெற்றார். நேருவின் காலத்தில் இருந்த உட்கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார். அவருக்கு ஆமாம் சாமி போடுகிறவர்கள் மட்டுமே முதல்வராக தொடர முடியும் என்கிற நிலை உண்டானது. நகர்வாலா ஊழல் தொடங்கி மாருதி திட்டம் வரை ஊழலின் உருவம் பெருத்துக்கொண்டே போனது.

பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு,பசுமைப்புரட்சி,வங்கதேச உருவாக்கம்,வங்கிகள் தேசிய மயமாக்கம் என்று சாதனைகளும் இந்திரா செய்தார். மாநில அரசுகளை ஒரு வகையான இறுக்கமான சூழலிலேயே இந்திரா தன் காலத்தில் வைத்திருந்தார்.
மொத்தமாக ஒன்பது,பத்து அரசுகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்துகிற அளவுக்கு ஜனநாயகத்தை மறந்தவராக போனார் அவர். உச்சபட்ச சோகம் ராஜ் நாராயண் வழக்கால் வந்தது

எம்.பி தேர்தலில் வெற்றி பெற்ற இந்திரா, அரசாங்க சம்பளம் பெற்ற அவரின் செயலாளரை தேர்தல் பணிக்கு பயன்படுத்தினார்,அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட அதிகமான உயரத்தில் கூட்டத்தில் பேசினார்,அரசாங்க நிலத்தில் அமைந்த மேடையை பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவரின் தேர்தல் வெற்றி செல்லுபடியாகாமல் போனது என்று அலகாபாத் கோர்ட் அறிவித்தது.

ஏற்கனவே கேசவனந்தா பாரதி வழக்கில் அரசு எண்ணிய மாதிரி அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியாது என்று தீர்ப்பு வாசித்து இருந்தார்கள். அதனால் மூன்று நீதிபதிகள் முன்னணியில் இருந்தும் தனக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னவரை தலைமை நீதிபதி ஆக்கி நீதித்துறைக்குள் அரசியலை கலந்தார் இந்திரா.

ஊழல் மலிந்து போயிருந்த குஜராத் மற்றும் பீகார் அரசுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் ஜெபி போராட்டங்கள் ஆரம்பித்து அசைத்துக்கொண்டு இருந்தார்கள். இப்பொழுது அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் உள்நாட்டு கலகம் என்கிற வார்த்தையின் படி அவசரநிலையை பிரகடனம் செய்தார்.

எல்லா வகையான சுதந்திரங்களும் பிடுங்கப்பட்டன,ஒரே நாளில் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நாடாளுமன்றம்,உச்சநீதிமன்றம் எல்லாமும் செயலிழந்தது. எழுத்து,பேச்சு சுதந்திரங்கள் பறிபோயின. சஞ்சய் காந்தி வந்தார் ; பல லட்சம் முஸ்லீம்கள்,தலித்துகள் உட்பட்ட எண்ணற்ற எளிய ஏழை மக்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு செய்தார். ஊரை அழகாக்குதல் என்று டெல்லியில் பல லட்சம் மக்களை வெளியேற்றி துப்பாக்கி சூட்டில் பல மக்கள் இறக்க நேர்ந்தது.

சட்டத்தின் சரத்துகள் திருத்தப்பட்டு இந்திராவின் வெற்றி செல்லுபடியாக்கப்பட்டது. பிரதமர் முதலியோரின் தேர்வை கோர்ட் விசாரிக்க முடியாது என்று மாற்றப்பட்டது. இந்த காலத்தில் பேருந்துகள் முதலிய எல்லா சேவைகளும் ஒழுங்காக நடந்தது. விலைவாசி குறைந்தது ; மக்கள் விதிகளை பின்பற்றினார்கள். என்ன சுதந்திரம் தான் இல்லவே இல்லை.

தேர்தல்களை வென்று விடலாம் என்று நம்பி இந்திரா அறிவித்தார். அமைதியாக காத்திருந்த மக்கள் மவுனப்புரட்சி செய்தார்கள். ஜெபியின் ஒருங்கிணைப்பால் இணைந்த ஜனதா கட்சி இவரை,இவர் கட்சியை தோற்கடித்தது. வனவாசம் போனார். ஷா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்த பொழுது ரகசிய காப்பு பிரமாணத்தை காரணம் சொல்லி பதில் சொல்ல மறுத்தார்.

ஸ்டாம்பை ஒட்டாமல்,போலீஸ் காவல் கேட்காமல் இவர் மீதான வழக்குகளில் கோட்டை விட்டார்கள். காந்தி தேசாயை இந்திரா காத்ததற்கு நன்றிக்கடன் போல மொரார்ஜி தேசாய் இவரை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கவில்லை. சட்ட திருத்தங்களை திரும்ப பெற்றார்கள். உள்நாட்டு கலகத்தின் போது அவசரநிலை என்பதை ஆயுத புரட்சியின் பொழுது என்று மாற்றினார்கள். இவர்களும் மாநில அரசை கலைத்தார்கள். பதவிக்காக அடித்து கொண்டார்கள். மக்கள் நொந்து போனார்கள்.

மூன்றே வருட இடைவெளியில் மீண்டும் இந்திரா வந்தார். பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளத்தை சமாளிக்க ஆதரவளித்த பிந்தரன்வாலே குழு பஞ்சாபை வன்முறை பூமியாக்கி கொண்டிருந்ததது. பொற்கோயில் உள்ளே எக்கச்சக்க ஆயுதங்கள்,பஞ்சாபில் பெருங்கொலைகள் என்றிருக்க இந்திரா பல்வேறு அமைதி முயற்சிகளுக்கு பிறகு ராணுவத்தை அனுப்பினார். போர்க்கள பூமியானது பஞ்சாப். அந்த வன்மத்தோடு அவரின் உயிரை அவரின் காவலாளிகள் பறித்தார்கள். இந்தியாவை கட்டி ஆண்ட ஒரு வரலாறு முடிவுக்கு வந்தது.

 

 

 

நன்றி : ஆனந்த விகடன் | பூ.கொ.சரவணன்

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More