March 26, 2023 11:27 pm

வரலாற்றில் இன்று: கியூபாவின் பிரபாகரன் சரித்திர நாயகன் சே பிறந்த தினம் இன்று..!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தே ஜூன் 14, 1952-ஆம் வருடம். அவர் அமேசான் மழை காடுகளில் இருக்கும் சான் பாப்லோவில் இருந்தார். அன்று அவருக்கு 24-வது பிறந்தநாள். சகல வசதிகளுடன் அவர் தங்கியிருந்த இடத்துக்கு வெளியே ஓர் ஏரி இருந்தது. அதற்கு அருகில், அடிப்படை வசதிகள்கூட இல்லாத நோயாளிகளும் ஏழைகளும் இருந்தனர். தனது பிறந்தநாள் விழா, ஆடம்பரத்துக்கு நடுவில் நடைபெறுவதை அவர் விரும்பவில்லை. குளிர்ந்த அந்த ஏரிக்குள் ஆஸ்துமா நோயாளியான அவர் குதித்தார். பெரு மூச்சு வாங்கி, அவர் நீந்தி முன்னேறினார். இருபக்கமும் இருந்த மக்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். ஆஸ்துமா நோய், அமேசானின் குளிர்ந்த ஏரி யாவையும் கடந்து அவர் தனது இலக்கை அடைந்தார். இப்படியான சாகசங்களையே அவர் வாழ்நாள் முழுவதும் விரும்பினார். அவர் பெயர் எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா. சுருக்கமாகச் சொன்னால் ‘சே குவேரா’. எதார்த்தங்களை கடந்த அசாத்தியங்களை விரும்பியப் போராளி. தனக்கென ஒரு கூடு இல்லாமல் சுற்றி திரிய நினைத்த ஒரு ஜிப்ஸி. இன்று அவருக்குப் பிறந்தநாள்!

சேகுவேரா இந்த உலகம் முழுவதையும் ரசித்தார். பார் முழுவதும் பயணம் செய்ய ஆசைப்பட்டார். அதன் வித்தாய் அமைந்ததுதான் சே -அல்பர்ட்டோவின் மோட்டார் சைக்கில் பயணங்கள். மருத்துவம் பயின்ற இருவரும் ‘லா பெடரோசா’ பைக்கில், தென் அமெரிக்காவைச் சுற்றிவர வேண்டும் என தீர்மானித்தார்கள். அதன்படி தனது குடும்பத்திடம் இருந்து விடைபெற்று அவர்கள் கிளம்பினர். அர்ஜென்டினாவில் ஆடம்பரமான ஒரு வாழ்க்கை இருந்தும் சேவுக்கு புதிய விஷயங்களைத் தேட ஆசை. அதற்காக தனது காதலியிடம் இருந்தும் அவர் விடைபெற்று கொண்டார். தனக்கென நிலையான வசிப்பிடத்தோடும் மனிதர்களோடும் வாழ்வதை சே அசௌகரியமாக கருதினார். அதனால்தான் அவர் தென் அமெரிக்கா முழுவதும் சுற்றித்திரிந்தார்.

நீண்ட பயணத்துக்கு பின்னர், அன்று ‘சே’வும் அல்பர்ட்டோவும் வெனிசுலாவில் இருந்தனர். அல்பர்ட்டோவுக்கு, ‘பயணத்தை முடித்துக்கொள்ளலாம்’ என தோன்றிவிட்டது. ‘நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுதான் தனது கடமை’ என அல்பர்ட்டோ நினைத்தார். ஆனால் சே அதற்கு எதிர்மறையாக தனது பயனத்தைத் தொடர விரும்பினார். ‘அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்ய வேண்டும்’ என்ற கனவு அவரை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. அந்த பயணத்தின்போது, குச்சிகாமாட்டா சுரங்கங்களையும் அங்கு நடக்கும் சுரண்டல்களையும் நேரில் கண்டார்.

ஏழ்மை நிலையிலும் கொள்கையில் உறுதியோடு இருக்கும் கம்யூனிச தம்பதியைப் பார்த்தார். துயரப்படும் தொழு நோயாளிகளைக் கண்டார். பழமையான நாகரிகங்கள் சிதைக்கப்பட்டதைப் பார்த்தார். மொத்தத்தில் அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை உணர்ந்தார். இதன்பின்னரே, ‘இம்மக்கள் சுதந்திரமாக வாழ வேன்டும்’ என்று அவருக்குத் தோன்றியது. ‘அதற்கான போராட்டங்கள் அனைத்தும் துப்பாக்கியைத் தாங்கி நடக்க வேண்டும்’ எனத் தீர்மானித்தார். வெனிசுலாவில் தனது நண்பனைப் பிரிந்து, வாழ்வின் அடுத்த சாகசத்துக்கு தயாரானார் ‘சே’. அடுத்த 10 வருடங்களுக்கு அவர் அல்பர்ட்டோவைச் சந்திக்கவில்லை.

கியூபாவின் புரட்சியை தவிர்த்துவிட்டு, சேகுவேராவை எழுதிவிட முடியாது. எங்கோ அர்ஜென்டினாவில் பிறந்து, கியூப விடுதலைக்காக போராடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஆனால் அவர் விலங்கு பூட்டப்பட்ட மக்களின் விடுதலையிலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் மீதான நட்பிலும் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். மருத்துவம் பயின்ற ஒருவர், ஆஸ்துமா நோயுடன் கைகளில் துப்பாக்கி ஏந்தி படைத் தளபதியாக செயல்பட முடியுமென்றால், அது சேகுவேரா எனும் சாகசக்காரனால்தான் முடியும். சேவும் காஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய புரட்சியால் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா ஆட்சியில் இருந்து வீழ்ந்தார். காஸ்ட்ரோவைக் கியூப மக்கள் தலைவராகக் கொண்டாடினார்கள். தலைநகர் ஹவானா உற்சாகக் கோலம் பூண்டது. ‘ இனி கியூப மக்கள் அமெரிக்காவின் அடிமையாக இருக்கப்போவதில்லை’ என்ற மகிழ்ச்சி அனைவரிடத்திலும் ஏற்பட்டது. தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் போலவே சேகுவேராவை கியூப மக்களும் காஸ்ட்ரோவும் கொண்டாடினார்கள். சேகுவேராவுக்கு அரசு பதவியும் கியூப நாட்டு கரண்சியில் ‘சே’ எனக் கையெழுத்திடம் கவுரவுமும் வழங்கப்பட்டது.

ஆடம்பரங்களையும் உதறித்தள்ளிவிட்டு, ‘காங்கோவில் நடக்கும் ஆயுத புரட்சிக்கு உதவ போகிறேன்’ என காஸ்ட்ரோவிடமிருந்து விடைபெற்று கொண்டார் ‘சே’. உடனே, ” ‘சே’வை காணவில்லை; அவரை ஃபிடல் கொன்றுவிட்டார்” என பேசப்பட்ட போதிலும், ” ‘சே’ எங்கு இருக்கிறார்” என்று காஸ்ட்ரோ சொல்லவில்லை. காரணம், ‘அமெரிக்க உளவுதுறையிடம் அவர் சிக்கி கொள்ளக் கூடாது’ என்பதற்காகத்தான். இப்படியான ஒரு தோழனை விட்டும் செல்லும் நிலை சேவுக்கு ஏற்பட காரணம், உலக மக்களின் விடுதலை மீது அவருக்க இருந்த பெரு விருப்பம்தான்.

காங்கோவில் இருந்து பொலிவியா வந்த சேகுவேரா, அங்குள்ள சிறு ஆயுதக் குழுக்களுக்கு கெரில்லா பயிற்சிகளை அளித்தார். புதிய நாடு, வித்யாசமான தட்பவெட்ப சூழ்நிலை என பொலிவியாவில் சிரமத்தை எதிர்கொண்டார். அதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை. ஒருகட்டத்தில், (1967-ம் வருடம் அக்டோபர் மாதம்) அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்டார் சேகுவேரா. உலக முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய சேகுவேரா பிடிப்பட்டதை அமெரிக்க அதிகாரிகளால் எளிதில் நம்ப முடியவில்லை. பொலிவியாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் அவர் சிறைவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவு வழங்க ஒரு பணிப்பெண் நியமிக்கப்பட்டார். அவரிடம், ‘இது என்ன இடம்?’ என்று கேட்டார் ‘சே’. ‘இது ஒரு பள்ளிக்கூடம்’ என்றார் பணிப்பெண். ‘இப்படியொரு மோசமான நிலையில் ஒரு பள்ளிக்கூடமா. எங்களின் போராட்டம் வெற்றி பெறட்டும், உங்களுக்கு புதிய பள்ளி ஒன்றைக் கட்டி தருகிறோம்’ என்று கூறினார் ‘சே’. அந்த பணிப்பெண் வெடித்து அழுது அங்கிருந்து கிளம்பினார். தான் இறக்கப்போவது தெரிந்த நிலையிலும், போராட்டங்கள் மீதும் மாற்றத்தின் மீதும் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அவர் அசாத்தியங்களை விரும்பும் எதார்த்தவாதியாக இருந்தார்.

நன்றி – இணையம் – தமிழ்டெய்லி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்