செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 18 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 18 | பத்மநாபன் மகாலிங்கம்

12 minutes read

இறைவன் மனிதனை அனைத்தும் உண்ணியாக படைத்தான். அதனால் தாவர உணவுகளுடன் விலங்கு உணவுகளையும் உண்டான். விவசாயத்துடன், மீன்பிடி, மந்தை வளர்ப்பு, வேட்டை என்பவற்றை தொழிலாக கொண்டிருந்தான். ஆதியில் மனிதர்கள் கூட்டமாக சென்று தடிகளாலும் கற்களாலும் விலங்குகளை அடித்தும், எறிந்தும் கொன்றார்கள். பின்னர் நாய்களை துணையாகக் கொண்டு வேட்டை ஆடினார்கள். அதன் பின்னர் பொறி கிடங்குகளை அமைத்தும் தாவரத்தின் கொடிகளால் சுருக்குப் பொறி வைத்தும் வேட்டையாடினார்கள்.

காலம் மாற விலங்குகளை கொல்ல அம்பும் வில்லும் பயன்படுத்தினார்கள். சீனர்கள் வெடிமருந்து கண்டு பிடிக்க, மேலைத்தேசத்தவர்கள் துவக்கு தயாரிக்க வேட்டை முறை மாறியது. துவக்கை பயன்படுத்தி தேடி வேட்டையாடவும், தங்கி வேட்டையாடவும் தொடங்கினான். ‘தங்கு வேட்டை’ இரண்டு விதம். காட்டில் கோடையில் சில நீர் நிலைகளில் மட்டுமே தண்ணீர் இருக்கும். அங்கு சிறுத்தை, கரடி, பன்றி, மான், மரை, குழுமாடு, நரி, யானை முதலிய விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும்.

சுற்றிவர மரங்கள் இல்லாத போது காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் நான்கு முழம் நீளம், நான்கு முழம் அகலம், நான்கு முழம் ஆழமான கிடங்கு வெட்டி தடிகளை குறுக்கும் நெடுக்குமாக அடுக்கி, குழைகளால் மூடி, கிடங்கு தெரியாது பரவி மண் போட்டு மூடி விட்டு அந்த கிடங்கில் தங்கி வேட்டையாடுவார்கள். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் உயரமான மரங்கள் இருந்தால், அவற்றில் பரண் அமைத்து இரவில் பரணில் தங்கி வேட்டையாடுவார்கள்.

பறங்கியர் முதல் கிழமை வந்த போது கணபதியிடம் “கணபதி, அடுத்த கிழமை இரண்டு ஆங்கில துரைமார்கள் தாங்களும் வேட்டைக்கு வருவதற்கு ஆசைப்படுகிறார்கள். அதற்கு ஒழுங்கு பண்ண முடியுமா?” என்று கேட்டிருந்தார்.

கணபதி “சென்சோர், அவர்கள் மரத்தில் ஏறுவார்களா? ஏறுவார்களாயின் நாங்கள் மரத்தில் ‘பரண்’ அமைத்து வைக்கிறோம். பரணில் இருந்து வேட்டையாடலாம்” என்றான்.

“கணபதி, அவர்கள் ஏறுவார்கள். மற்றது அவர்களிடம் கதைக்கும் போது என்னை கூப்பிடுவது போல ‘சென்சோர்’ என்று கதைக்காதே. அவர்களை நாங்கள் ‘சேர்’ (ஐயா) என்று தான் கதைப்போம்.” என்று பறங்கியர் சொல்லிவிட்டு குதிரையில் ஏறி சென்றார்.

கணபதியும் அவன் தோழர்களும் காட்டில் அலைந்து திரிந்து பொருத்தமான நீர் நிலையை தெரிவு செய்தார்கள். சுற்றிவர பற்றைகள் இருந்த ஒரு உயரமான மரம் பரண் அமைக்க தோதாக இருந்தது. தூர உள்ள காட்டிற்கு சென்று ஏழு எட்டு நீளமான தடிகளையும், பத்து பன்னிரண்டு சற்று நீளம் குறைந்த தடிகளையும் வெட்டி எடுத்து வந்தார்கள். இருவர் மரத்தில் ஏறி இடைஞ்சலாக இருந்த சில கிளைகளை வெட்டி நீக்கி விட்டு, நீளமான தடிகளை அடுக்கி கட்டினார்கள்.

பின்னர் சற்று நீளம் குறைந்த தடிகளை குறுக்காக கட்டினார்கள். அவற்றின் மேல் இலை குழைகளை பரவி கட்டினார்கள். ஏற்கனவே நான்கு சாக்குகளில் வைக்கலை நிரப்பி எடுத்து வந்திருந்தார்கள். வைக்கலை இலைகளின் மேல் பரவி விட்டார்கள்,’பரண்’ தயார்.

வரும் துரைமார் மரத்தில் ஏற வசதியாக ஒரு ஏணியையும் அமைத்து, மரத்தில் சாய்வாக கட்டி விட்டார்கள். பரணும் ஏணியும் வெளியே தெரியாதவாறு மறைத்தார்கள். வெட்டி போட்ட கிளைகள், தடிகளை அள்ளி தூரத்தில் போட்டு மறைத்தார்கள். தங்கள் காலடி பட்ட இடங்களை எல்லாம் கிளைகளால் கூட்டி மறைத்தார்கள். இனி இருவர் மட்டும் சனிக்கிழமை காலமை வந்து சரி பார்ப்பதாக தீர்மானித்து திரும்பி வீட்டிற்கு சென்றனர்.

சனிக்கிழமை பின்னேரம் மூன்று குதிரைகளில் பறங்கியரும் இரண்டு வெள்ளை துரைமாரும் வந்தார்கள். பறங்கியர் வழமை போல அரைக் கால்சட்டையும் சேட்டும் போட்டு, வழமையான சப்பாத்தை போட்டுக் கொண்டு வந்தார்.

வெள்ளைக்கார துரைமார் முழங்காலளவு சப்பாத்து போட்டு நீளக்கால் சட்டை, தடித்த சேர்ட் அணிந்து வந்திருந்தார்கள். அவர்களது இடுப்பில் அகலமான ‘பெல்ற்’ (Belt) கட்டி ‘பெல்ற்’ இல் தோட்டாக்களை செருகியிருந்தார்கள். இருவரும்   ஒவ்வொரு துவக்குகளை வைத்திருந்தார்கள்.

பறங்கியர் சொல்லியபடி அன்று பின்னேரம் இறக்கிய ‘கள்ளை’ ஒரு முட்டியில் வாங்கி, மூடி வைத்த கணபதி, மூன்று புதிய பிளாக்களையும் கோலி வைத்திருந்தான். பறங்கியர் கண்ணைக் காட்ட, கணபதி பிளாக்களில் கள்ளை ஊற்றி முதலில் துரைமார்களுக்கும், பின்பு பறங்கியருக்கும் கொடுத்தான். கள்ளு குடித்து முடிந்ததும், குதிரைகளை தியாகர் வயலில் பாதுகாப்பாக கட்டி விட்டு காட்டிற்குள் சென்றார்கள்.

கணபதியும் மூன்று தோழர்களும் வழிகாட்டி கொண்டு முன்னே சென்றார்கள். அப்போது துரைமார்களில் ஒருவர்   ‘சிகரெட்’ ஐ பற்ற வைத்து ஒரு இழுவை இழுத்து வெளியே விட்டார்.

கணபதி பறங்கியரிடம் “மிருகங்கள் வாசனையை வெகு தூரத்திலிருந்து மணந்து ஓடி விடும். வேட்டை முடிந்த பின்னர் புகைப்பது தான் நல்லது” என்று சொன்னான். பறங்கியர் “The animals will smell the smoke, please stop smoking” என்று தன்மையாக சொல்ல, அவர் ‘சிகரெட்’ ஐ நிலத்தில் போட்டு மிதித்து அணைத்து விட்டார்.

பின்னர் யாவரும் பரண் இருந்த மரத்தை நோக்கி நடந்து சென்றார்கள். தோழர்கள் இருவர் முதலில் ஏறி பாம்புகள் ஏதாவது வந்து வைக்கலுக்குள் இருக்கிறதா என்று தட்டி பார்த்தார்கள். பின்னர் பறங்கியரும் அவரைத் தொடர்ந்து துரைமாரும் ஏறினார்கள். கணபதி தோழனை ஏறச்செய்து, ஒரு மரக்கிளையால் தங்கள் கால் அடையாளங்களை அழித்துவிட்டு தானும் ஏறி பறங்கியரின் அருகே இருந்து கொண்டான். துரைமார் பறங்கியரின் மறு பக்கத்தில் இருந்தனர். கணபதியுடன் ஒரு தோழனும், துரைமார்களுக்கு மறுபக்கம் இரண்டு தோழர்களுமாக இருந்தனர். பறங்கியரின் துவக்கை கணபதி வைத்திருந்தான்.

நிலவு வரும் வரை அமைதியாக காத்திருந்தார்கள். வேட்டையின் வெற்றி காத்திருத்தலிலேயே உள்ளது. நுளம்புகளின் தொல்லையை தாங்கி கொண்டார்கள். கணபதியும் தோழர்களும் காட்டை சுற்றிப் பார்த்து, வழியில் கண்ட செருக்கன் மக்களை விசாரித்து யானைகளின் நடமாட்டம் இல்லை என்று முதலே அறிந்திருந்தார்கள்.

செருக்கன் நண்பர்கள் “சிறுத்தைகள் அடிக்கடி திரிகின்றன.  நாய்கள், ஆடுகள், கன்றுக்குட்டிகளை சில நேரங்களில் கொண்டு போய் விடுகின்றன” என்று எச்சரித்திருந்தார்கள். கரடிகளின் பயமும் இருந்தது. நிலவும் வந்தது. நீரின் பளபளப்பு தெரிந்தது.

முதலில் ஒரு பன்றி ஐந்தாறு குட்டிகளுடன் வந்து நீர் அருந்தியது. குட்டிகளுடன் வந்த பன்றியை சுடும் பழக்கம் இல்லை. அடுத்து நரி ஒன்று தயங்கி தயங்கி வந்து நீர் குடித்து விட்டு சென்றது. ஒரு பெரிய நாக பாம்பு நீர் நிலையின் ஒரு பக்கம் இறங்கி மறு பக்கமாக நீந்தி சென்று ஓடி மறைந்தது.

அடுத்ததாக சில பெண் மான்கள் அச்சமின்றி வந்து நீர் குடித்தன.  பாதுகாவலனாக கலைமான் ஒன்று பற்றை மறைவில் நான்கு பக்கமும் அவதானித்தபடி நிற்பது அவற்றிற்கு தெரியும். ஆங்கிலேயர் சுட ஆயத்தமாகி குறி பார்த்தார். கணபதி ஆங்கிலேயரின் கையை பிடித்து தடுத்தான், அவர் குறி பார்ப்பதை நிறுத்திவிட்டு கணபதியை கோபமாக பார்த்தார்.

கணபதி சற்று பொறுக்குமாறு கையை காட்டினான். பெண்மான்கள் தண்ணீர் குடித்து முடிய கலைமான் வருமென்று கணபதி அனுபவத்தால் அறிந்திருந்தான். பெண்மான்கள் பற்றைகளுக்குள் மறைய, அவர்களின் பாதுகாப்பிற்காக பற்றை மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கலை மான் (Deer Buck) தானே தலைவன் என்ற இறுமாப்புடன் நீர்குடிக்க இறங்கியது.

இப்போது கணபதி துரையின் கையில் தட்டினான். ஓரளவு நீர் குடித்த  கலை மான்  ஒருமுறை நிமிர்ந்து பார்க்க, வெடி தீர்ந்தது.

துரையின் குறி அவ்வளவு துல்லியமாக இருந்தது. சரிந்து விழுந்த மான் ஒருமுறை கால்களை ஆட்டியது. அவ்வளவு தான், மானின் உயிர் பிரிந்து விட்டது. வெடிச்சத்தத்திற்கு மிருகங்கள் பல ஓடும் சத்தம் கேட்டது. இந்த நீர் நிலைக்கு மிருகங்கள் ஒன்றும் இனி இன்று வரமாட்டாது. இன்றைய தங்கு வேட்டை முடிவுக்கு வந்தது.  

யாவரும் பரணில் இருந்து கீழே இறங்கி மான் விழுந்த இடத்திற்கு சென்றனர். கணபதி கலைமானின் முன் கால்கள் இரண்டையும் பிணைத்து கட்டினான், பின்னர் பின்கால்கள் இரண்டையும் அவ்வாறே பிணைத்தான். முன்னரே எடுத்து வந்த ஒரு நீளமான தடியை, தோழனொருவன் கலைமானின் பிணைத்த கால்களுக்கிடையே செருகினான். தடியின் முன் பக்கம் ஒருவரும் பின்பக்கம் ஒருவருமாக தோழர்கள் மானை தோளில் தூக்கி கொண்டு நடக்க ஏனையவர்கள் தொடர்ந்து சென்றார்கள்.

நடந்து செல்லும் போது கணபதி பறங்கியரிடம் “நாங்கள் கூடியவரை பெண் மானை சுடுவதில்லை. பெண்மான்கள் சில வேளைகளில் கரு தரித்தவையாக இருக்கும். அத்தோடு கலை மானில் இறைச்சியும் அதிகம்” என்றான்.

பறங்கியர் துரைமார்களிடம் “They don’t shoot a female deer because they may be pregnant, and the deer Buck has more meat” என்று சொன்னார். இப்போது தான் கணபதி பெண் மானை சுட வேண்டாம் என்று ஏன் தடுத்தான் என்பது துரைமார்களுக்கு விளங்கியது.

பெண்மானை சுட குறிபார்த்த துரை “Oh, I see” என்று கணபதியை பார்த்து சிரித்தார்.  மானை சுட்ட துரை “I shot the buck, so the ‘ antler’ is mine. I will put the ‘antler ‘on the wall of my sitting room.” (நான் தான் கலை மானை சுட்டேன் அதனால் மான் கொம்பு எனக்குத் தான். நான் முன்னறையின் சுவரில் தொங்க விடுவேன்) என்றார். அதற்கு மற்றவர் “No, no. It belongs to me because I arranged this hunting expedition ” (இல்லை, இல்லை அது எனக்கு தான் உரியது, நான் தான் இந்த தங்கு வேட்டையை ஒழுங்கு செய்தேன்) என்று மறுதலித்தார்.

துரைமார்கள் பிரச்சனை படுவதைத் கண்ட கணபதி “என்ன பிரச்சனை” என்று பறங்கியரிடம் விசாரித்தான். “அவர்கள் மான் கொம்பிற்கு பிரச்சனை படுகிறார்கள்” என்று சொல்லி சிரித்தார் பறங்கியர். அப்போது கணபதி தன்னிடம் வீட்டில் ஒரு மான் கொம்பு இருப்பதாகவும் அதனை அவர்களுக்கு தருவதாகவும் கூறினான். பறங்கியர் “Kanapathi has an ‘antler’ at his house. He will give it to you” என்று சொன்னார். உடனே இரண்டு துரைமாரும் “Thank you, Thank you” என்று சொல்லி கணபதியின் கையை பிடித்து குலுக்கினார்கள்.

தியாகர் வயல் சென்றதும் கணபதி ஒரு கலை மானின் கொம்பை கொண்டு வந்து துரைமாருக்கு கொடுத்தான். பின்னர் தங்கை, தம்பியின் நித்திரையை குழப்பாமல், தகப்பனை எழுப்பி சொல்லிவிட்டு, வண்டிலில் எருதுகளை பூட்டிக் கொண்டு வந்தான்.

தோழர்கள் மானை வண்டிலில் ஏற்றினார்கள். இரண்டு தோழர்களை வீடு சென்று ஆறும்படி கூறிய கணபதி, ஒரு தோழனுடன் இரணைமடுவை நோக்கி வண்டிலை செலுத்த, பறங்கியரும் துரைமாரும் முன்னுக்கு குதிரைகளில் சென்றனர்.

இரணைமடுவை வண்டில் சென்று அடைந்ததும் பறங்கியர் தனது பணியாளர்களை கூப்பிட்டு மானை இறக்கச் செய்தார். சென்சோரா கணபதிக்கும் தோழனுக்கும் தேனீர் கொண்டு வந்து கொடுத்தார். கணபதியும் தோழனும் விடை பெற்று பெரிய பரந்தன் செல்ல ஆயத்தமாகினர்.

துரைமார் வந்து அவர்கள் இருவருக்கும் கை கொடுத்து நன்றி கூறி விட்டு சென்றனர். பறங்கியர் வந்து “கணபதி, உனக்கும் தோழர்களுக்கும் மிகவும் நன்றி. துரைமார்களுக்கு நல்ல சந்தோசம்.” என்று சொல்லி அனுப்பி வைத்தார். கணபதி தட்டி விட, கழுத்தில் கட்டிய மணிகள் மென்மையாக ஒலிக்க எருதுகள் வண்டிலை இழுத்தபடி ஓடின.

தியாகர் வயலை அடைந்த கணபதி எருதுகளை அவிட்டு கட்டி, வண்டிலை கொட்டிலில் விட்டு விட்டு தோழனுடன் பூவலுக்கு சென்று குளித்து விட்டு வீட்டிற்கு வந்தான். காத்துக் கொண்டிருந்த தங்கை மீனாட்சி “அண்ணா” என்று ஓடி வந்து கட்டிப் பிடித்தாள். தம்பி பேரம்பலம் தூக்கி வைத்திருந்த தாயாரிடம் தன்னை தமயனிடம் கொண்டு போகும்படி கையை காட்டினான்.

கணபதி தங்கையை ஒரு கையால் அணைத்தபடி பேரம்பலத்தை மறு கையால் தூக்கி கொண்டான். பேரம்பலம் தமயனின் கன்னத்தில் முத்தமிட்டான். விசாலாட்சி “நீ, வேட்டை, வேட்டை என்று இரண்டு நாட்கள் அவர்களுடன் விளையாடவில்லை. அதனால் அவர்கள் தவித்துப் போனார்கள்.

சரி, நீ அவர்களுடன் விளையாடிக்கொண்டிரு, நான் உங்களிருவருக்கும் கஞ்சி கொண்டு வருகிறேன்.” என்று கூறிவிட்டு உள்ளே போனாள். அப்போது பால் கறந்து கொண்டு வந்த ஆறுமுகத்தார் “துரைமார்களுக்கு சந்தோசமா? எல்லா நாட்களிலும் மான் கிடைப்பதில்லை. நல்ல காலம் உன்னை நம்பி வந்த துரைமார்கள் ஏமாறாமல் வேட்டை கிடைத்தது” என்றார்.

கணபதி அன்று முழுவதும் எங்கும் செல்லாது தம்பி, தங்கையுடன் விளையாடி பொழுதை போக்கினான். “மீனாட்சி தங்கை தம்பியை எப்படி நடத்துவாள் என்றும் கந்தையனை பொறுப்பாக பார்க்கும் அவள் என்ரை தம்பி தங்கையையும் நல்லாய் பார்ப்பாள் என்றும் எண்ணிய கணபதி “ஐயா, அம்மாவிடம் மீனாட்சி பற்றி எப்படி கதைக்கப் போகிறேன்” என்பதை நினைத்து சிறிது அச்சமும் கொண்டான்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னையபகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More