சவூதி அரேபியா பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் 3 பில்லியன் டொலர் கடனுக்கான விதிகளை நீடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
சவூதி அரேபியா பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடு என்பதோடு அந்நாட்டுக்கு தொடர்ச்சியாக நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் பாக். புதிய பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரிப், சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்ட நிலையிலேயே புதிய ஆதரவு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தேசிய கடன் நெருக்குதலுக்கு உள்ளாகி இருப்பதோடு பணவீக்கமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டு அறிவிப்பில், ‘பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு சவூதி தொடர்ந்து உதவும் என்பதோடு மத்திய வங்கியில் 3 பில்லியன் டொலர் வைப்புத் தொகையை நீடிப்பது அல்லது வேறு வழிகளில் அதிகரிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.