மெக்சிகோ துறைமுகம் ஒன்றில் பகுதி சுத்திகரிக்கப்பட்ட தங்கம், வெள்ளித் தாது மற்றும் தொலைக்காட்சி தொகுதிகள் நிரப்பப்பட்ட 20 சரக்குக் கொள்கலன்கள் திருடப்பட்டுள்ளன.
மன்சனில்லோ நகரில் இ0ருக்கும் பசிபிக் கடல் துறைமுகத்தில் ஆயுதம் ஏந்தியவர்கள் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை “நூற்றாண்டின் மிகப்பெரிய திருட்டு” என்று உள்ளுார் ஊடகங்கள் விபரித்துள்ளன.
துறைமுகத்தின் பாதுகாவல் குழுக்களைத் தாக்கிய பின்னர், தாக்குதல்தாரிகள் பாரந்தூக்கிகள், சரக்கு வண்டிகள் ஆகியவற்றைக் கொண்டு கொள்கலன்களை நகர்த்தினர். திருட்டு 8 முதல் 10 மணி நேரத்திற்கு நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இது போன்ற திருட்டுச் சம்பவம் நடந்ததே இல்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கூறினார். ஆயுததாரிகள் பொருட்களைத் தேர்ந்தெடுத்துத் திருடியதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வளவு தங்கம், வெள்ளி திருடப்பட்டது என்ற விபரங்கள் அளிக்கப்படவில்லை.