தலையில் முக்காடிடும் கோரிக்கையை மறுத்த சி.என்.என் தொலைக்காட்சி செய்தியாளர் கிறிஸ்டியன் ஆமன்போருடனான நேர்காணல் ஒன்றை ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ரத்துச் செய்துள்ளார்.
எனினும் தான் ஈரானுக்கு வெளியில் நேர்காணல் செய்யும்போது முந்தைய எந்த ஜனாதிபதியும் இவ்வாறான கோரிக்கையை விடுக்கவில்லை என்று ஆமன்போர் குறிப்பிட்டுள்ளார்.
நியுயோர்க் நகரில் கடந்த வியாழக்கிழமை (22) இந்த நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேர்காணலுக்கான நேரம் வழங்கப்பட்ட பின், “புனித மாதங்களான முஹர்ரம் மற்றும் சபர் காரணமாக” தலையில் முக்காடிடும்படி செய்தியாளரிடம் ஜனாதிபதியின் உதவியாளர் ஒருவர் கேட்டுள்ளார். எனினும் அந்தக் கோரிக்கையை மறுத்ததாக ஆமன்போர் தெரிவித்தார்.
ஈரானில் முறையற்ற வகையில் ஹிஜாப் அணிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வரும் சூழலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.