ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கின.
தற்போது ரஷ்யாவின் அண்டை நாடான நோர்வே தலைநகரான ஓஸ்லோவில் ரஷ்ய தூதரகம் செயல்படுகிறது.
அங்கு பணிபுரியும் தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக நோர்வே கருதியது.
எனவே அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையிலும் அவர்களது செயல்பாடுகள் ராஜதந்திர நடவடிக்கைகளுடன் பொருந்தவில்லை என நோர்வே முடிவு செய்தது.
இதனையடுத்து நோர்வேயில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் 15 பேரை வெளியேற்றுவதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை நோர்வே அரசாங்கம் வெளியிட்டது.
இந்த நிலையில், நோர்வே அரசாங்கத்தின் இந்த செயலுக்கு ரஷ்யா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியதாக அந்த நாட்டின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.