லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகே சந்தேகத்திற்கிடமாக துப்பாக்கித் தோட்டாக்களை வீசிய நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் விழா, எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் நேற்று (02) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்தக் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதுசெய்யப்பட்ட 30 வயதுடைய அந்நபரிடமிருந்து கத்தி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஆனால், அவரிடம் துப்பாக்கி இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அந்நபர் வைத்திருந்த பையில் இரண்டு கடவுச்சீட்டுகள், கையடக்கத் தொலைபேசி, பணப்பை, சாவி, வங்கி அட்டைகள் மற்றும் மடிக்கணினி உறை ஒன்றும் இருந்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்தச் சம்பவம் பயங்கரவாதம் தொடர்பானதாக கருதப்படவில்லை என்றும் இந்த விவகாரத்தை தனியான மனநலம் பாதிக்கப்பட்டவரால் ஏற்பட்ட சம்பவமாக பொலிஸார் கருதியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.