கிழக்கு லண்டனில் ஒரு கால்வாயின் அருகே நபர் ஒருவரை பின்தொடர்ந்த பொலிஸார், அவரின் இரண்டு நாய்களை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் லைம்ஹவுஸில் உள்ள கால்வாய்க்கு அருகில் இரண்டு நாய்களையும் ஒரு குறுகிய பட்டியொன்றில் பிடித்துக் கொண்டிருக்கும் நபரை, அதிகாரிகள் பின்தொடர்வதை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள் காட்டுகின்றன.
நபர் தரையில் வீழ்த்தப்பட்டு, நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண் ஒருவரை நாய் தாக்கியதாக தகவல் கிடைத்ததும் தமது அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரிவித்த பொலிஸார், “எந்தவொரு காயமும் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான இடங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அதிகாரிகளுக்கு உள்ளது” என்றனர்.
பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், “மே 7 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு நாயால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணால் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
“இரண்டு நாய்களின் ஆக்ரோஷமான நடத்தை அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
“ஆபத்தான முறையில் ஒரு நாயை கட்டுப்பாடில்லாமல் வைத்திருந்ததற்காகவும், தாக்கிய குற்றத்திற்காகவும் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
“இரண்டு நாய்களும் சம்பவ இடத்தில் பொலிஸாரால் அழிக்கப்பட்டன.
“எந்தவொரு அதிகாரிக்கும் இது எளிதான முடிவு அல்ல. ஆனால், மேலும் காயம் ஏற்படுவதற்கு முன்பு தேவையான இடங்களில் செயல்பட வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.