முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் காலை முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கழுவியுள்ளார்.
பழங்குடியினருக்கு எந்தவொரு கொடுமையும் நடக்கக்கூடாது என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு உதாரணமாக விளங்க வேண்டும் என்ற வகையிலேயே அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறன.
இந்தியா – மத்திய பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினரான கேதார்நாத் சுக்லாவின் நெருங்கிய நண்பரான பர்வேஷ் சுக்லா, பழங்குடியின தலித் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் மீது சிறுநீர் கழித்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
வாயில் சிகரெட் புகைத்தபடி, இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வெளியானது.
பழங்குடியினருக்கு இத்தகைய கொடுமை நடந்துள்ளது என்பதை அறிந்தவுடன், கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து இளைஞனின் முகத்தில் சிறுநீர் கழித்த சுக்லா, முதலமைச்சரின் உத்தரவுப்படி கைது செய்யப்பட்டதோடு மட்டுமின்றி, அவரது வீடும் இடிக்கப்பட்டது.
அவரது வீட்டை இடித்த அதிகாரிகள் சட்டவிரோதமாக அவ்வீடு கட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட இளைஞர் தஷ்ரத் ராவத்தை இல்லத்திற்கு அழைத்து பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், இளைஞரிடம் மன்னிப்பு கோரினார்.
மேலும், அவமதிக்கப்பட்ட இளைஞனின் கால்களை கழுவி, அவருக்கு பொட்டு வைத்து மரியாதை செய்தார்.