FIFA மகளிர் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் கோல் அடித்து ஸ்பெயின் அணிக்கு முதன்முறையாகக் கிண்ணத்தை வென்று தந்த ஸ்பெயின் அணித் தலைவி ஒல்கா கர்மோனாவின் தந்தை இறந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ( 20) நடைபெற்ற FIFA மகளிர் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் ஸ்பெயின் 1-0 என இங்கிலாந்தை வீழ்த்திக் கிண்ணத்தை வென்றது.
அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள், தமது தந்தை இறந்த செய்தி கேட்டு, அணித் தலைவி கர்மோனா அதிர்ச்சியடைந்துள்ளார்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த கர்மோனாவின் தந்தை, கடந்த வெள்ளிக்கிழமை (18) காலமானார்.
இறுதியாட்டத்தில் கவனம் சிதறாமல் விளையாடுவதை உறுதி செய்யத் தந்தை இறந்த தகவலை கர்மோனாவிடம் முன்கூட்டியே கூறவில்லை என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
கர்மோனாவுக்கும் அவரின் குடும்பத்துக்கும் ஸ்பானியக் காற்பந்துச் சங்கமும் ரியால் மட்ரீட் (Real Madrid) காற்பந்துக் குழுவும் அனுதாபம் தெரிவித்துள்ளன.