மலேசியாவை நோக்கி 20 இந்தோனேசிய தொழிலாளர்களுடன் சென்ற மரப்படகு மலாக்கா ஜலசந்தியில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.இந்தோனேசியாவின் Rupat தீவிலிருந்து சட்டவிரோதமாக இந்தோனேசியர்களை மலேசியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, இப்படகு விபத்திற்கு உள்ளாகி அதில் சென்றவர்கள் உயிருக்குப் போராடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தோனேசியாவின் Pekanbaru மீட்பு ஏஜென்சியின் தலைமை அதிகாரி ஐசக்,10 பேர் மீட்கப்பட்டதாகவும் 10 பேர் காணவில்லை எனத் தெரிவித்துள்ளார்.தற்போது, 10 பேரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 9 பேரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படகில் சென்ற இந்தோனேசியர்கள் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக மலேசியாவில் வேலைக்கு செல்ல முயன்றவர்கள் எனச் சொல்லப்படுகின்றது.
கடந்த 2016ல், 101 இந்தோனேசிய தொழிலாளர்களுடன் மலேசியாவிலிருந்து வெளியேறிய படகு விபத்திற்கு உள்ளாகி சுமார் 60 பேர் உயிரிழந்திருந்தனர். இதே போல், 2009ம் ஆண்டு இந்தோனேசியாவின் Sulawesi தீவருகே நடந்த விபத்தில் 330 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.மலேசியாவின் கட்டுமானத்துறையிலும் பாமாயில் தோட்டங்களிலும் வேலைத்தேடி இவ்வாறான ஆபத்தான கடல் பயணங்களை இந்தோனேசியர்கள் மேற்கொள்ளக்கூடிய சூழல் நிலவுகிறது. p>