அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், தலைவராக மு.க. ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி காலமானதையடுத்து புதிய தலைவருக்கான வெற்றிடம் ஏற்பட்டது.
இதற்கமைய, கழகத்தின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு கோரப்பட்டிருந்தது.
இதன்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பதவிக்கு மு.க. ஸ்டாலினும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இவர்களைத் தவிர வேறு எவரும் குறித்த பதவிகளுக்காக போட்டியிட முன்வராததால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தெரிவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்காக தி.மு.க வின் பொதுக் குழு இன்று கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
50 ஆண்டுகள் தலைவர் பதவியில் நீடித்த கருணாநிதிக்கு பின்னர் தி.மு.க வின் இரண்டாவது தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.