27 ஆண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரொபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரில் 3 பேருக்கு தூக்கு தண்டனையும், ஏனைய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பின்னர் தூக்குத் தணடனை வழங்கப்பட்டவர்களான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை இரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 7 தமிழர்களையும் விடுவிக்க போவதாகவும், மத்திய அரசு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் விடுதலை செய்வது உறுதி என்று தீர்மானம் நிறைவேற்றினார்.
எனினும் மத்திய அரசு அதற்கு எதிராக வழக்கு தொடுத்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, தமிழக அரசே விடுதலைக்கு பரிந்துரை செய்யலாம் என்றும், ஆளுநர் அனுமதி அளித்தால் மடடுமே விடுதலை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஏழு தமிழர்களினதும் விடுதலை குறித்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.