Saturday, May 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்தில் ‘அம்மா’ என்ற மகுடம் சூடிய ஜெயலலிதாவின் பிறந்தாள் இன்று!

தமிழகத்தில் ‘அம்மா’ என்ற மகுடம் சூடிய ஜெயலலிதாவின் பிறந்தாள் இன்று!

2 minutes read

தமிழகத்தில் அனைவராலும் ‘அம்மா’ என்று அறியப்பட்டவரும் தமிழ் திரையுலகின் சிம்ம சொற்பனமாகத் திகழ்ந்தவருமான மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்றாகும்.

இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. கட்சியினர், தொண்டர்கள் மற்றும் மக்கள் ஜெயலலிதாவை நினைவு கூருகின்றனர்.

ஜெயலலிதா பற்றிய முக்கிய விடயங்களின் தொகுப்பை பார்க்கலாம்,

1948ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி மைசூர் மாகாணத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலுக்கோட்டேவில் பிறந்தார் ஜெயலலிதா.

சிறுவயது முதலே அழகும் அறிவும் நிரம்பிய அவர், 1961ஆம் ஆண்டு வெளியான ‘ஹ ஷைல மகாத்மே’ என்ற கன்னட மொழித் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியதுடன், ‘வெண்ணிற ஆடை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கும் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்த அவர், பரத நாட்டியத்தை முறையாகக் கற்றறிந்தவர். அத்துடன், 13 ஆண்டுகளில் 127 படங்களில் நடித்து சாதனைப் படைத்தார்.

புரட்சித் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.இராமச்சந்திரனுடன் நடித்ததற்குப் பின்னர், எம்.ஜி.ஆர். தொடங்கிய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் மாநாட்டில் கட்சியில் இணைந்துகொண்டார். 1983இல் அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக்கப்படுகிறார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கும் பரிந்துரைக்கப்படுகிறார்.

தொடர்ந்து 1988 – எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா தலைமையிலும் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும் அதிமுக இரண்டாக உடைகிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படுகிறது.

இதனையடுத்து – சேவல் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கும் ஜெயலலிதா, போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றதோடு, சட்டமன்றத்தில் 27 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவியாகிறார்.

1989 மார்ச் 25 – தமிழக சட்டமன்றத்தில் ஏற்பட்ட அமளியில் தான் தாக்கப்பட்டதாகச் சொல்லி வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, மீண்டும் முதல்வராகத்தான் அவைக்குள் நுழைவேன் என சவால் விடுகிறார்.

இதன்படியே 1991 ஜூலை 24 – சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து, கூட்டணி சார்பில் மொத்தம் 225 இடங்களைக் கைப்பற்றி முதலமைச்சராக, முதல் முறையாகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா.

இதனையடுத்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த அவர், வளர்ப்பு மகனான சுதாகரனின் திருமணத்தை தொடர்ந்து வந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தார். பல சர்ச்சைகளைக் கடந்து 2001 மே மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மூலம் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.

இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர் முதல்வராக பதவியேற்றது செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. இதன் எதிரொலியாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். பின்னர் மீண்டும் மார்ச் 2ஆம் திகதி 2002 இல் முதலமைச்சராக பதவியேற்ற அவர், சில முக்கிய விடயங்களில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து 2011 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பதவியேற்கிறார். இந்த காலப்பகுதியில்தான் பெங்களுர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டார். 100 கோடி ரூபாய் அபராதமும் 4 ஆண்டுகால சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் 2014 ஆம் ஆண்டு பிணையில் விடுதலையாகிய அவர், மீண்டும் 2015 இல் முதலமைச்சரானார். 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க பெரும்பான்மை பெறுகிறது.

பின்னர் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட அவர், டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலமானார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More