செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு!

5 minutes read

நாடு முழுவதும் குறிப்பாக பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிராவில் பல தடுப்பூசி மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால், தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு உரிய நேரத்தில் 2வது டோஸ் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே சமயம் தடுப்பூசி போதிய அளவு இருப்பதாக மத்திய அரசு மாறுபட்ட தகவல் அளித்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள நம்மிடம் உள்ள வெகுசில பாதுகாப்பு அம்சங்களில் தடுப்பூசி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி அளிக்க, மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இதுவரை 9 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே மகாராஷ்டிரா அரசு தட்டுப்பாடு குறித்து கூறி வந்த நிலையில், அதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக அம்மாநில அரசுகள் கூறி உள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக கூறியிருக்கும் அனைத்து மாநிலங்களும் பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 120 தடுப்பூசி மையங்களில் 71 மையங்களில் நேற்றுடன் தடுப்பூசி தீர்ந்து விட்டதாக கூறப்பட்டது.

இதனால், அந்த மையங்கள் தடுப்பூசி இல்லாததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மும்பையில் முக்கிய வர்த்தக பகுதியான பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி இல்லாததால் மக்கள் நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர். மையத்தின் டீன் அளித்த பேட்டியில், ‘முதல் நாளில் இருந்தே இங்கு தடுப்பூசி இருப்பில் இருந்தது. ஆனால், நேற்று (வியாழக்கிழமை) முதல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று தடுப்பூசி வரும் என கூறினர். ஆனால், 160 டோஸ்கள் மட்டுமே வந்துள்ளன,’ என்றார். மும்பை மேயர் கிஷோரி பட்னேகர் கூறுகையில், ‘பல தடுப்பூசி மையங்களில் மருந்து இல்லாமல் மூடப்பட்டுள்ளன. எங்கள் பிரச்னையை பிரதமர் மோடி தீவிரமாக எடுத்துக் கொள்கிறார். ஆனால், அவருக்கு கீழ் உள்ள அமைச்சர்கள் பெரிதாக கவலைப்படுவது இல்லை. 76,000 முதல் 1 லட்சம் டோஸ் வரை வரப்போகிறது என்றனர்.

ஆனால், அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் எனக்கு வரவில்லை,’ என குற்றம்சாட்டி உள்ளார். இதே போல, ஒடிசாவிலும் நேற்று பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன. ஒடிசாவில் 4 நாட்களுக்கான தடுப்பூசி மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் 3 லட்சம் டோஸ் மட்டுமே இருப்பதாகவும் அவை 2 நாளில் தீர்ந்து விடும் என்பதால், தேவையான தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும்படி அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். இதே போல, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், இன்னும் 2 நாளில் தடுப்பூசி தீர்ந்து விடும் எனவும், 30 லட்சம் டோஸ் உடனடியாக தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், முதல் டோஸ் தடுப்பூசி போட முடியாமல் மக்கள் தவிப்பதோடு, முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 2வது டோஸ் தங்களால் சரியான நாளில் போட முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால், தடுப்பூசி கையிருப்பு குறித்து மத்திய அரசோ முரண்பட்ட தகவலை அளித்துள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடு இல்லவே இல்லை என ஆரம்பத்தில் இருந்து கூறி வரும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தடுப்பூசி போதிய அளவு இருப்பில் உள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசி விநியோக சராசரி 37 லட்சத்து 11,856 டோஸ்களாகும். அதிகபட்சமாக மகாராஷ்டிரா 1 கோடியே 6 லட்சத்து 19,190 டோஸ்களும், குஜராத் 1 கோடியே 5 லட்சத்து 19,330 டோஸ்களும் பெற்றுள்ளன. இதுவரை சுமார் 11 கோடி டோஸ் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு, 9.1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 2 கோடி டோஸ்கள் மாநில அரசுகளின் இருப்பில் உள்ளன. அதன் மூலம், 5.5 நாட்களுக்கு தடுப்பூசி போடலாம். 2.4 கோடி டோஸ்கள் அனுப்பும் நிலையிலும், அனுப்பப்பட்டும் உள்ளது. இதனால், 12.4 நாட்களுக்கு தேவையான மருந்து விரைவில் கிடைக்கப் பெறும். மத்திய அரசிடம் 4.3 கோடி தடுப்பூசி இருப்பில் உள்ளது,’’ என்றார்.

தமிழகத்தை பொறுத்த வரையில் 45 நாட்களுக்கு தேவையான தடுப்பூசி இருப்பில் இருப்பதாக அரசு தரப்பு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு தேவையான மருந்து மட்டுமே கைவசம் இருப்பதாக மற்றொகரு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே, மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய மருந்துகள் கிடைத்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை, பல்வேறு மாநிலங்களில் நிலவி வருகிறது.

36.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி
* மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 36 லட்சத்து 91,511 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
* இதன் மூலம் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 43 லட்சத்து 34,262 ஆக அதிகரித்துள்ளது.
* சட்டீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல் நேற்று தனது முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
* இதுவரை 84 நாடுகளுக்கு இந்தியா 6.45 கோடி தடுப்பூசி அனுப்பியுள்ளது.

பணத்தை திருப்பி தந்தது சீரம் நிறுவனம்
தென் ஆப்ரிக்காவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் மிகுந்த வீரியம் கொண்டது. அந்நாடு சீரம் நிறுவனத்திடம் கொரோனா தடுப்பூசியை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. ஏற்கனவே சில லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட  நிலையில், அவை உருமாறிய வைரசுக்கு எதிராக அதிக செயல்திறன் கொண்டதாக இல்லை என தென் ஆப்ரிக்க அரசு குற்றம்சாட்டியது. இதனால், 5 லட்சம் டோஸ்களுக்கு பணத்தை திருப்பி தருவதாக சீரம் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

தடுப்பூசி போட்ட 180 பேர் மரணம்
கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் 180 பேர் இறந்துள்ளதாக புள்ளி விவரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசிய நோய் தடுப்பை தொடர்ந்து பாதகமான நிகழ்வுகள் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள  அறிக்கையில், ‘இந்தியாவில் மார்ச் 29ம் தேதி வரை 6 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதில், 617 பேருக்கு மட்டும் பாதகமான மற்றும் தீவிர உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. 180 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 124 பேர் வேறு  காரணங்களால் இறந்துள்ளனர். 63 பேர் மாரடைப்பு மற்றும் இதய சம்பந்தமான பாதிப்புகளால் இறந்துள்ளனர். 11 பேர் பக்கவாதத்தால் இறந்துள்ளனர். 124 பேரில் 93 பேர் தடுப்பூசி போட்ட 3 நாளில் இறந்துள்ளனர். ஆனாலும், இந்த மரணங்கள்  தடுப்பூசியின் பக்கவிளைவால் ஏற்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

தடுப்பூசிக்கு பதிலாக  நாய் கடி ஊசி போட்டனர்
உத்தர பிரதேச மாநிலம், சம்லி மாவட்டம், முசாபர் நகர் பகுதியில் அரசு மருத்துவமனையில் 60 மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட 3 மூதாட்டிகள் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஊசி போட்டதும், அவர்களுக்கு கொடுத்த  சீட்டில் நாய் கடிக்கான ஆன்டி-ரேபிஸ் ஊசி போட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், மூதாட்டியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக நாய்க்கடி ஊசி போட்டவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

1.31 லட்சம் பேருக்கு தொற்று; 780 பேர் பலி
* நேற்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 31,968  பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 1 கோடி 30 லட்சத்து 60,542 ஆக அதிகரித்துள்ளது.
* நேற்று ஒரே நாளில் 780 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 67,642 ஆக அதிகரித்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 79,608 ஆக அதிகரித்துள்ளது.
* மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உபி, டெல்லி, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் பரிசோதனைக்கு அனுமதி
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியின் ஆரம்ப கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்நிறுவனத்தின் ஒற்றை டோஸ் தடுப்பூசியின் முதல் மற்றும் 2ம்  கட்ட பரிசோதனையை இந்தியாவில் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More