இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சி அரச திணைக்களங்களிலும் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளஅனைத்து அரச திணைக்களங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் காலை இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட சுதந்திர தின நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிறிமோகனன்பொலிசார், திணைக்களங்கள் சார் அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் சர்வ மத பிரார்த்தனைகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கதாகும்.
நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,இலங்கை பல்வேறு வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாளை இன்று சுதந்திர தினமாக நாம் கொண்டாடுகின்றோம். குறிப்பாக ஆங்கிலேயர், ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் என பலரது ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை பெற்றுள்ளது.
ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததாக இன்றைய தினம் நாட்டு மக்களுடன் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம். குறித்த சுதந்திரமானது இன்று எமக்கு பல விடயங்களை கற்றுக்கொடுக்கின்றது, இன்று எமது கிளிநொச்சி மாவட்டம் வறுமையில் முதல் நிலையில் காணப்படுகின்றது.
இந்த வறுமையின் பிடியில் உள்ள மக்களை மீட்பதற்காக வறுமை ஒழிப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து செயற்பட வே்ணடும். வறுமை ஒழிப்பிற்காக அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் வறுமை ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்திற்கு நாம் முழுமையாக ஒத்துழைத்தவர்களாக மாவட்டத்தில் உள்ள வறுமையை ஒழிக்க நாம் செயற்பட வேண்டும் என கோருகின்றேன்.
வறுமையின் பிடியில் சிக்கியுள்ள மக்களை விடுவிப்பதற்கு நாம் இன்றே எமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். அது மாத்திரமன்றி, எங்கோ ஓர் இடத்தில் காணப்பட்ட போதை பொருள் பாவணை இன்று மாவட்டத்திற்கே சவால் விடும் அளவில் இன்று காணப்படுகின்றது. மாவட்டத்தில் உள்ள மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தில் போதைப்பொருள் பாவணை அதிகமாக காணப்படுகின்றது. சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரித்து காணப்படுகின்றது.
இந்த நிலையில் போதைப்பொருளிற்கும், வறுமையிலும் சிக்குட்ட எமது சமூகத்தை மீட்டு அவர்களிற்கும் சுதந்திரத்தை பெற்று்கொடுக்க வேண்டும் என இன்றைய நாளிலே நாம் உறுதி கொண்டவர்களாக செயற்படுவோம் என அவர் தெரிவித்தார்.தொடர்ந்து இன்றைய நினைவாக மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.