அவசரமாக விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சவுதி அரேபியாவிலிருந்து இந்தோனேஷியாவுக்குச் சென்ற பயணிகள் விமானமே கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் வந்த இருவர் கடும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவுதி அரேபியாவின் கிங்க் அப்துல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானம் இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையத்திற்கு பயணம் செய்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் இருவரும் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், உயிரிழந்த இருவரினதும் உடல்கூறுகள் பரிசோதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமானம் தரையிறக்கப்பட்டு உயிரிழந்த இரண்டு உடல்களையும் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இருவரையும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்த பின்னர் விமானம் மீண்டும் இந்தோனேஷியாவுக்கான பயணத்தை ஆரம்பித்தது.