உலகில் அரசியல் சித்தாந்தம் தெரிந்தவர்கள் சமஷ்டியை தனி நாடென ஒரு போதும் சொல்ல மாட்டர்கள் என வடக்குமாகாண முன்னாள் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் உபதலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர், ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட பெளத்த துறவிகள் சமஷ்டியை தமிழர்கள் மீண்டும் கோரினால், வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும் என்று தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்னிலங்கையில் இருக்கக்கூடிய பெளத்த துறவிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டவுடன் கூட்டமைப்பினர் தனி நாடு கேட்கின்றனர் என்று கூறியுள்ளதுடன், மேலும் எச்சரிக்கும் தொனியில் தனித் தமிழீழம் கேட்டால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமென கூறியிருந்தனர்.
ஆனால் எங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனி நாடு, தனித் தமிழீழம் என்பன பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. உலகின் பலபகுதிகளிலும் நடைமுறையிலுள்ள சமஷ்டியையே நாங்கள் கேட்டிருந்தோம் என்று கூறியுள்ளார்.