தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி அஞ்சலி செலுத்தியமை, அஞ்சலி நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட பதாகையில் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தியமை மூலம் நாட்டை பிரிக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு பிணை வழங்கக் கூடாது எனயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராயில் நினைவேந்தல் நிகழ்வை செய்திருந்தார்.
அதனை அறிந்த கோப்பாய் பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சிவாஜிலிங்கத்தையும் அவருக்கு வாடகைக்கு முச்சக்கர வண்டியைச் செலுத்திய சாரதியையும் கைது செய்தனர்.
இருவரையும் தடுத்துவைத்திருந்த பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிமன்றில் இன்று முற்படுத்தினர்.
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரான லெப்டின் கேணல் திலீபனை நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவுகூர்ந்த குற்றச்சாட்டின் கீழ் இருவருக்கும் எதிராக மன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. சந்தேக நபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணிகள் என்.சிறீகாந்தா, வி.திருக்குமரன் உள்ளிட்ட 8 சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர்.
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளால் லெப். கேணல் பதவி வழங்கப்பட்ட திலீபனுக்கு முதலாவது சந்தேக நபர் சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதற்கு இரண்டாவது சந்தேக நபர் உடந்தையாக இருந்துள்ளார். திலீபனுக்கு நினைவேந்தல் செய்வதற்கு இந்த நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு முதலாவது சந்தேக நபரின் மனைவியிடம் பொலிஸாரால் கையளிக்கப்பட்டது.
அந்த தடை உத்தரவை மீறி அவர் இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளார் அத்துடன் நினைவேந்தல் நிகழ்வில் சந்தேக நபர்களால் பயன்படுத்தபட்ட பனரில் ஈழம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அது இலங்கையிலிருந்து பிரிக்க முற்படும் நாட்டைக் குறிக்கும்.எனவே நீதிமன்றத் தடையை மீறி மேலும் பலர் அஞ்சலி நிகழ்வை நடத்த உள்ளதால் சந்தேக நபர்கள் இருவரையும் பிணையில் செல்ல அனுமதிக்காது 14 நாள்கள் விளக்கமறியல் உத்தரவை மன்று வழங்க வேண்டும் என்று பொலிஸார் மன்றில் எடுத்துரைத்தனர்.
நீதிமன்ற தடை உத்தரவு பிரதிவாதியிடம் ஒப்படைக்கப்படவேண்டும். எனினும் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பிரதிவாதியின் மனைவி உள்ளிட்ட உறவினர்களிடம் ஒப்படைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே சந்தேக நபர் தெரியும் வகையிலாவது நீதிமன்றத் தடையை பொலிஸார் ஒட்டியிருக்கவேண்டும் அதனால் சந்தேக நபர் நீதிமன்றத் தடை உத்தரவை மீறவில்லை. ஏனைய விடயங்களுக்குச் செல்ல நாம் விரும்பவில்லை.
மேலும் ஈழம் என்ற சொல்லு தமிழர் பகுதிகளைக் குறிக்கிறது. அதில் தவறில்லை. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் பதிவு செய்த கட்சியாக உள்ளது. அதன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி வகித்துள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) பொதுச் செயலாளர் அரசில் அங்கம் வகித்து தற்போது அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார். எனவே ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தியமை தவறில்லை” என்று சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா தனது வாதத்தை முன்வைத்தார்.
இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுட்டித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை பிணையில் விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவு தினம் நேற்று பல தடைகளையும் தாண்டி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் நினைவுகூரப்பட்டது.
தியாகதீபம் திலீபனின் நினைவுதினத்தில் நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவுகள் போலீசார் நீதிமன்றத்தின் ஊடாக எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அனுஸ்டித்தார். இதானல் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவரை 2 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், நீதிமன்றம் கடுமையாக எச்சரித்திருந்தது. அத்துடன், எதிர்வரும் 25ஆம் திகதி மன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டது.