பாகிஸ்தானின் குவேற்றா மறை மாவட்டத்தின் ஆயராக பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆயர் காலமாகியுள்ளார்.
யாழ்ப்பாணம்- பாஷையூரைச் சேர்ந்த அமலமரித் தியாகிகள் சபையைச் சேர்ந்த பேரருட் கலாநிதி விக்ரர் ஞானப்பிரகாசம் அமதி ஆண்டகையே நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலமாகியுள்ளார்.
இவர் 1940ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 21 ஆம் திகதி, யாழ்ப்பாணம் பாஷையூரில் பிறந்தார்.தனது பாடசாலைக் கல்வியை யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் நிறைவு செய்துள்ளார்.
இறை அழைத்தலுக்குப் பணிந்து குருமடம் நுழைந்து களுத்துறையில் 1959ல் தனது முதலாவது நித்திய வாக்குறுதியை அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, கண்டி- அன்னை தேசிய குருத்துவக் கல்லூரியில் தனது மெய்யியல், இறையியல் கல்வியை நிறைவுசெய்து 1966ல் அமலமரி தியாகிகள் சபையின் குருவாக திருப்பொழிவு செய்யப்பட்டார்.
இலங்கையில் பல இடங்களில் பணியாற்றி பின் 1973ல் பாகிஸ்தான் சென்றார். ஞானப்பிரகாசம் அடிகளார் பல அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் துன்புற்ற மக்களுக்கும் இளையோருக்கும் இறைபணியாற்றியுள்ளார்.
1979-1985 வரை பாகிஸ்தானில் அமலமரி தியாகிகள் சபையின் மேலாளராகப் பணியாற்றியுள்ளார். 2001ல் முன்னாள் திருத்தந்தை புனித 2ஆம் அருளப்பர் சின்னப்பரால் இவர் பாகிஸ்தான் குவேற்றா பிரதேச அப்போஸ்தலிக்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
2010 ஏப்ரலில் புதிதாக உருவாக்கப்பட்ட குவேற்றா மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராக முன்னாள் திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பரினால் இவர் நியமிக்கப்பட்டார்.
2010 யூலை 16ல் கராச்சி புனித பற்றிக் பேராலயத்தில் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியிலுள்ள மறைமாவட்ட மக்களின் ஆன்மீக, கல்வி, பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிகூடிய அக்கறை செலுத்தினார்.
2013ல் ஓர் இஸ்லாமிய ஆயுதக் குழுவின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் உயிர் தப்பிய நிலையிலும் மேய்ப்புப்பணி ஆற்றினார்.