இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கியமான இடமாக உள்ளதுடன் எமது திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைந்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
மடு தேவாலய பகுதிகளில் யாத்திரைக்காக வருகை தரும் யாத்திரிகர்களுக்கான தங்குமிட விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) மாலை, சுற்றுலா துறை அமைச்சின் ஏற்பாட்டில் மடு பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந்திய அரசின் நன்கொடையின் கீழ் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 144 வீடுகளை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு அமைக்க மேற்படி அடிக்கள் நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்த பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கோபால் பக்லே மேலும் கூறியுள்ளதாவது, “உலகமே கொரோனா வைரஸ் தொற்றினால் முடங்கியுள்ள நிலையில் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பாரிய முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றறோம்.
இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை மிக நெருக்கமாகவே பேணி வருகின்றோம்.வீட்டுத்திட்டங்களை வழங்கியதுடன், சுகாதார துறைக்கும் பங்களிப்பை மேற்கொண்டுள்ளோம்.
இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளமை தொடர்பில் இந்திய அரசாங்கம் மகிழ்ச்சி அடைகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.