செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு ஏற்பாடுகள்!

நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு ஏற்பாடுகள்!

2 minutes read

சட்டம் மற்றும் அமைதியை பாதுகாக்கும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் நாட்டில் புதிதாக 196 பொலிஸ் நிலையங்களை அமைக்கவும் பொலிஸ் சேவைக்கு ஆண், பெண் இரு பாலாரிலிருந்தும் 10,000 பேரை இணைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் போதைப்பொருள் தடுப்புக்கு தேசிய கொள்கையொன்றை விரைவில் உருவாக்குவதுடன் மத அடிப்படைவாத சிந்தனைகளைக்கொண்ட புத்தகங்களை தடை செய்வது குறித்தும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷயின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

தற்போதைய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஆலோசனை குழுவின் முதலாவது கூட்டம் இதுவாகும். குழுவின் தலைமைப் பதவி, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு உரித்துடையது என்ற வகையில் ஜனாதிபதி இதில் பங்குபற்றியபோதே இவ்விடயங்களை தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டல், இராணுவ வீரர்களின் சம்பளம், போதைப்பொருள் ஒழிப்பு, பாதுகாப்பு அமைச்சுக்குரிய நிறுவனங்களின் வருடாந்த அறிக்கை போன்ற பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனை குழுவின் கூட்டத்திற்கு இவ்வளவு அமைச்சர்கள் கலந்துகொண்டது அண்மைக்காலத்தில் இதுவே முதற் தடவையாகுமென்று பாராளுமன்ற அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.

சட்டம், அமைதியை நிலைநாட்டி மேம்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள செயற்பாடுகளைப் பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் பல்வேறு பிரதேசங்களின் தேவைக்கேற்ப 196 பொலிஸ் நிலையங்களை புதிதாக ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் பொலிஸ் சேவைக்கு ஆண், பெண் இருபாலாரில் இருந்தும் 10,000 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் தெரிவித்தார்.

அங்கவீனமுற்ற, உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கான சம்பளம், கொடுப்பனவுகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது. அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு உயிர் வாழும்வரை வழங்கப்படுகின்ற சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் உயிரிழந்த பின்னர் அவர்களிடம் தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை வழங்குவதற்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை தற்போது அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக கருத்து பரிமாறும்போது முன்வைக்கப்பட்ட ஆலோசனை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி , போதைப்பொருள் ஒழிப்புக்காக புதிய தேசிய கொள்கை தற்போது தயாரித்து நிறைவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அது விரைவில் வெளியிடப்படும். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும்போது மத உபதேசங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத அடிப்படைவாத சிந்தனைகளைக்கொண்ட புத்தகங்களை தடை செய்வது தொடர்பாக எழுந்த கருத்துக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி, இத்தீர்மானம் குறிப்பிட்ட ஒரு மதத்தை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டவையல்ல என்றும் பொதுவாக அனைத்து வகையான மத அடிப்படைவாதத்தையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்தன, முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More