முகக்கவசம் அணிதலும் சமூக இடைவெளியை பேணலும் மிக அவசியம்!
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஆகியோர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் மிகுந்த சவாலுக்கு மத்தியில் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காமல் போய்விடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். புத்தாண்டு காலத்தில் முகக்கவசங்களை அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணி முறையான சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை பண்டிகை காலங்களில் பொது சுகாதார விதிகளை மீறும் வகையில் செயல்படும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த சுற்றறிக்கையின்படி, சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த கடுமையான கண்காணிப்பு செய்யப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களில் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது,மக்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் பேருந்து ஊழியர்கள் சரியான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் விளைவாக மற்றும் இந்த விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய, அனைத்து மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனால் நேற்று முதல் பொலிஸாரினால் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பின்னர் பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஒரு சிறப்பு சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குறித்த சுற்றறிக்கையின் கீழ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடைகள், பொது போக்குவரத்து மற்றும் ஏனைய இடங்களை ஆய்வு செய்ய பொலிஸார் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சகம் பிறப்பித்த சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக மீறப்படுவதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.
பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றும் சமூக தூரத்தை பராமரிக்கவில்லை என்றும் அவர் சாடினார்.
ஹோட்டல் மற்றும் ஏனைய நிறுவனங்கள் சுகாதார வழிகாட்டுதல்களை நெருக்கமாக பின்பற்றவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதன் விளைவாகவே பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க சிறப்பு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.