நுவரெலியா- வட்டவளை, கரோலினா தோட்டத்திலுள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி, ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூறியதாவது, “பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக வெளியிடங்களுக்கு சென்று தொழில் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் நாம் வாழ்வாதாரத்தை இழந்து தற்போது நிர்க்கதியாகி உள்ளோம். மேலும் குறித்த காலகட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் நிவாரணம் கூட இதுவரை எமக்கு கிடைக்கவில்லை.
இதனால் எம்முடன் சேர்ந்து எங்களது பிள்ளைகளும் ஒருவேளை உணவுக்காக கஸ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட எங்களது பகுதிக்கு வருகை தந்து எமது நிலைமைகள் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை.
ஆகவே, எங்களது இத்தகைய பிரச்சினைக்கு உரிய தீர்வை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என போராட்டத்தில் ஈடுபட்டோர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.