நாணய மாற்று வீதத்தை சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்திற்கு அமைய நெகிழ்வுப் போக்குடன் தீர்மானிப்பதற்கு இடமளிக்கப்பட்டதையடுத்து, இன்று (10) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபா வரை அதிகரித்திருந்தது.
சுமார் ஒரு வருடமாக டொலர் பெறுமதியை 202 ரூபா என்ற அளவில் நிலையாக பேணியதையடுத்து, இலங்கை மத்திய வங்கி நேற்று முன்தினம் நாணய மாற்று வீதம் சுதந்திரமாக தீர்மானிக்கப்படுவதற்கு இடமளித்தது.
இதேவேளை, ரூபாவுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 824 ரூபாவால் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 44 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 101 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 45 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகமுள்ளது.
இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட் விலையை 300 ரூபாவால் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம் ஏற்கனவே தயாராகியுள்ளது.
இதற்கமைய, 400 கிராம் எடையுடைய பால் மா பக்கெட் விலை 120 ரூபாவால் அதிகரிக்கும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, அத்தியாவசியமற்ற பொருட்கள் என தெரிவித்து ஆப்பிள், திராட்சை உள்ளிட்ட 367 பொருட்களுக்கு நேற்று அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது