எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (29) காலை 10.30 மணிக்கு கலந்துரையாடல் ஒன்றுக்காக ஜனாதிபதி மாளிக்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற கட்சிகளின் தலைவர்களுக்கு இன்று (27) கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்திற்கு அமைய, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை இராஜினாமா செய்ததன் பின்னர் ஸ்தாபிக்கப்படவுள்ள சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பிலேயே இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்படவுள்ளது.
சர்வ கட்சி அரசாங்கத்தின் வியூகம், கால எல்லை, பொறுப்புகளை யாருக்கு வழங்குவது போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி தயாராகி வருகின்றார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி சர்வ கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு கொள்கையளவில் தாம் இணங்குவதாக அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமான அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதனிடையே, சர்வ கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு இடமளித்து பிரதமர் பதவி விலகுவாரா எனும் கேள்வி எழுகின்றது.
பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்றத் தலைவர்களை இன்று அலரி மாளிகைக்கு அழைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிக்கவில்லை என கூறினார்.
நேற்று (26) முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்துடனான சந்திப்பிலும் தாம் பதவி விலகுவதற்கு தயாரில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியிருந்தார்.
இன்று Daily Mirror பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித சிக்கலும் இல்லை என தெரிவித்துள்ளார்.