2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காவது நாள் இன்றாகும்(15).
1995ஆம் ஆண்டு வான் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்ந்து யாழ். நவாலி புனித பேதுரு தேவாலயத்தில் இன்று(15) பிரார்த்தனை நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து யாழ். நவாலி புனித பேதுரு தேவாலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் தேவாலயத்திலும் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கலந்துகொண்டிருந்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி ஶ்ரீகிருஷ்ணர் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
வவுனியா ஜேசுபுரம் துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களின் நினைவாக முல்லைத்தீவு மாந்தை கிழக்கு விநாயகபுரம் பகுதியில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். நல்லுரிலும் முன்னெடுக்கப்பட்டது.